வெள்ளி, 28 மார்ச், 2014

குஜராத் - குல்பர்க் குடியிருப்பில் 68 பேர் படுகொலை - மோடி குற்றவாளியே!

 
 

  நீதியை காலம் தாழ்த்த திட்டமிட்ட சதி...!           
  - அறிஞர்கள் கடும் கண்டனம்...!         

           குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோடி அரசின் ஆதரவோடு பாஜக - ஆர்எஸ்எஸ் மதவெறிக்கூட்டம் பயங்கர வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போது அகமதாபாத் நகரிலுள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் 68 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
              இந்த வழக்கில் ''மோடியும் ஒரு குற்றவாளியே'' என இந்தியாவின் பல்வேறு துறை அறிஞர்கள் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் உண்மையை நிலைநாட்டியுள்ள சமூகஆர்வலர்களை குறிவைத்து மோடி அரசு அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் இந்த அறிஞர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
                 இதுதொடர்பாக தில்லியில் பிரபல வரலாற்று அறிஞர்கள் டாக்டர் ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், மூத்த பத்திரிகையாளர் சசிக்குமார், பொருளாதார அறிஞர்கள் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், பேராசிரியர் ஜெயதிகோஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பல துறைநிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-         

                2002ம் ஆண்டில் குஜராத் மாநில அரசின் ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவெறி வன்முறைத் தாண்டவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிப் பிழைத்துள்ளோருக்கு நீதி கிடைத்திட போராடி வரும் சமூக ஆர்வலர்கள் டீஸ்டா செதல்வாத், ஜாவேத் ஆனந்த் மற்றும் இம்மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மூவரின் மீதும் எப்படியேனும் பொய்யாகக் குற்றம் சாட்டி சிக்கவைத்திட மோடி அரசும், குஜராத் காவல்துறையும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
                நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருப்பதுடன், குஜராத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தில் முன்னிற்பவர்களாகவும் இருப்பதால் டீஸ்டா செதல்வாத் மற்றும் ஜாவேத் ஆனந்த் ஆகியோர் மோடி அரசால் குறி வைக்கப்படுகின்றனர்.
              இந்த அமைப்பினைச் சார்ந்த வழக்கறிஞர்களின் இடையறாத முயற்சிகள் காரணமாகவே, குஜராத் வன்முறையின்போது பெருங்குற்றம் புரிந்த 117 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களால் ஆயுள் தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் தொடர்பு கொண்டிருந்த பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரும், மோடி அரசின் அமைச்சர்களில் ஒருவருமான மாயா கோட்னானி மற்றும் குஜராத் மாநில பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரும் இந்த குற்றறவாளிகள் பட்டியலில் அடங்குவர்.
                 இந்நிலையில்தான், மேற்கண்ட சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கிடும் உள்நோக்கத்துடன் மோடி அரசு பல்வேறு இழிநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, குஜராத் உயர்நீதிமன்றத்தின் முன் ஜாகியா ஜாப்ரியின் மேல்முறையீட்டு மனுவிசாரணைக்கு வந்துள்ளநேரத்தில், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைப்பதை காலம் தாழ்த்திடவும், நீதிமன்ற நடைமுறையை தடம் புரளச் செய்திடவும் திட்டமிட்டே மோடி அரசு செயல்படுகிறது.
                 குஜராத் மாநிலத்தின் முதல்வரும், உள்துறை அமைச்சருமான நரேந்திர மோடி மற்றும் 59 பிரபல அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிவில் பணியாளர்கள் மீது படுகொலை உள்ளிட்ட இதர கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை ஜாப்ரி சுமத்தியுள்ளார். மோடிக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான எல்லா முகாந்திரமும் இருப்பதாக இந்த வழக்கில் உச்சநீதி மன்றத்தால் நீதிமன்ற முகவராக நியமிக்கப்பட்ட ராஜூ ராமச்சந்திரனும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
            2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று அகமதாபாத் நகரின் குல்பர்க் குடியிருப்பு வளாகத்தினுள் கட்டுக்கடங்கா வெறியுடன் நுழைந்த கும்பல், காவல் துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றினர். இதில் குல்பர்க் குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் மூவரது உறவினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், தற்போது மேற்கண்ட சங்க நிர்வாகிகள் மூவரின் மீதும்கூட “ஏமாற்று வழக்கு”பொய்யாகப் புனையப்பட்டுள்ளது. இந்த மூவரில் ஒருவரான தன்வீர் ஜாப்ரியின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஷான் ஜாப்ரியும், வேறு 68 நபர்களும் இந்த வெறியாட்டத்தின் போது ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
           மேற்கண்ட ஈஷான் ஜாப்ரியின் மனைவிதான் தற்போது மோடியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ள ஜாகியா ஜாப்ரி.மோடி மீதான இந்த வழக்குகளில் உண்மையை நிலைநாட்ட உறுதியுடன் செயல்பட்டு வரும் டீஸ்டா செதல்வாடும், ஜாவேத் ஆனந்தும், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் ஏற்கனவே நீதிமன்றங்களில் விரிவான வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநில காவல் துறையானது வதந்திகளை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
                   எனவே அவர்கள் மீதான சட்டவிரோத நடவடிக்கைகளையும் பொய் வழக்குகளையும் உடனடியாக குஜராத் காவல்துறையும் மோடி அரசும் கைவிட வேண்டும்; குஜராத்தில் இப்போதேனும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: