சனி, 15 மார்ச், 2014

ஆயிரத்தில் ஒருவன் ​ - இன்றைக்கும் பொருந்தும் வசனங்கள்...!

               
           சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த ''ஆயிரத்தில் ஒருவன்'' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி புதுப்பொலிவுடன் மீண்டும் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. எம்ஜிஆரை மறந்துவிட்ட அதிமுகவினர்களுக்கும், ஜெயலலிதாவிற்கும் தேர்தல் வரும் போது தான் எம்ஜிஆர் நினைவுக்கு வருவார். ஓட்டுக்காகத் தான் இந்த படம் இப்போது திரையிடப்பட்டிருக்கிறது.
            இந்தப்படம் என் குழந்தைப்பருவத்தில் வெளிவந்த படமாக இருந்தாலும், அந்த காலத்தில் பல முறை திரையரங்குகளில் திரையிட்டிருக்கிறார்கள். ஒரு முறை நான் கல்லூரியில் படிக்கும் போது  பார்த்திருக்கிறேன். அந்த படத்தில் வரும் காட்சிகளும், பாடல்களும், வசனங்களும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
            அந்த  திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் யாவும் எப்போதும் போல் எம்ஜிஆரின் அரசியலுக்கு ஏற்றார் போல் பொருத்தமாக எழுதப்பட்டிருக்கும். அதேப்போல் அந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கன்னித்தீவின் இளவரசியாகவும், அவரது வளர்ப்புத்தந்தையாக நடித்திருக்கும் நடிகர் இராமதாஸ் அத்தீவின் மன்னராகவும் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடலின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பார்கள். அந்தப் பாடல் முடிந்தவுடன் தந்தை இராமதாஸ் ஜெயலலிதாவை நோக்கி வந்து ''பூங்கொடி...! நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாக வாழவேண்டும்'' என்று வாயார வாழ்த்துவார்.
              அதேப்போல் இன்னொரு இடத்தில், இராமதாஸ் ஜெயலலிதாவிடம் ''நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்'' என்றும் சொல்லுவார். இந்த வசனங்கள் இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களும் அன்றைக்கே ஜெயலலிதாவிற்காகவே எழுதப்பட்டது போலவே இருக்கும். அந்த இரு வசனங்களின் ''பொருளைப்'' புரிந்துகொண்டால், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பொருத்தமாக தெரியும். அன்றைக்கே அந்த வசனங்கள் அவருக்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.

1 கருத்து:

உயிர்நேயம் சொன்னது…

உண்மை.
தேர்தல் முடியும்வரை ஆட்சியாளர்கள் நமக்கு அடிமைகள்.
தேர்தல் முடிந்தபிறகு, அவர்களுக்கு நாம் அடிமைகள்.
இந்தியா - அடிமைகளின் நாடு