வெள்ளி, 29 மார்ச், 2013

மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக் கூடிய அரசு தேவை : சீதாராம் யெச்சூரி

         
     ''மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக்கூடிய அரசுதான் இன்றைய தேவை'' என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
      இது குறித்து சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது :
        "தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கூட்டணிகள் குறித்த பேச்சுகள் எழுவது வழக்கமானதே. ஆனால், 2014இல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுகள் தொடங்கியுள்ளதற்கு காரணம், மத்திய அரசு, சிறுபான்மையாக மாறிவிட்டதுதான். மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. அக்கூட்டணியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியபோதே, அது ஒரு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. இப்போது திமுக வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணி மேலும் பலவீனமடைந்துவிட்டது. வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியில் தொடர முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது. இது போன்று வெளியிலிருந்து ஆதரவைப் பெறுவதற்கு சலுகைகள் அளிப்பதாகக் கூறியோ அல்லது மிரட்டியோதான் ஆட்சியில் நீடிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமாஜவாதி கட்சி, மூன்றாவது அணி குறித்து பேசத் தொடங்கியுள்ளது. பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து விடுபடும் வகையில் மாற்றம் வராதா என்று அவர்கள் தவிக்கின்றனர். அவர்கள் தரும் நெருக்கடி காரணமாகத்தான், சமாஜவாதி மூன்றாவது அணி குறித்த கருத்தை தெரிவித்து வருகிறது. மக்கள் விரும்பும் மாற்றம், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு வந்தால் மட்டும் ஏற்பட்டுவிடாது. மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதன் மூலம்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இப்போதைய தேவை மாற்று அரசு மட்டுமல்ல, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக் கூடிய அரசும்தான்'' என்றார் சீதாராம் யெச்சூரி.
 நன்றி :
NewsHunt

கருத்துகள் இல்லை: