திங்கள், 25 மார்ச், 2013

உலக நாடுகளுக்கு வழிகாட்டுகிறது ஈக்வடார்...!

        
         “எனதருமைத் தோழனே, ஈக்வடார் மக்கள் தந்த இந்த மாபெரும் வெற்றியை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்...” - தனது மரணத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதி ரபேல் கோரியாவிடமிருந்து இப்படியொரு நெகிழ்ச்சிமிக்க கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தார் வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ். 
         மூன்றாவது முறையாக ரபேல் கோரியா, ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதியாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலிலும் கோரியாவின் “தேசக்கூட்டுறவு இயக்கம்” எனும் கட்சி பிரம்மாண்டமான வெற்றியைப்பெற்றிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் 58 சதவீத வாக்குகளைப் பெற்ற கோரியா, தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட வலதுசாரிப் பெரும் முதலாளி கில்லர்மோ லஸ்ஸோவையும், அமெரிக்கக் கைக்கூலியாக ஐந்து ஆண்டுகள் இந்நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி லூசியோ குடிரெஸ்ஸையும் படுதோல்வி அடையச்செய்தார்.
          நாடாளுமன்றத்தில் கோரியாவின் கட்சி 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 2000 - ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை திடீரென ராணுவக் கலகத்தின் மூலம், அமெரிக்கக் கைக்கூலி ராணுவ அதிகாரியான குடிரெஸ் வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தார். மக்களுக்கு நன்மை செய்யப்போவதாக அறிவிப்புகள் வெளியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய இவர், அரியணை ஏறிய அடுத்த நிமிடத்தில் இருந்தே வாஷிங்டனின் கொள்கைகளை அமலாக்கத் துவங்கினார். ஐந்து ஆண்டுகள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்து, கொதித்தெழுந்த ஈக்வடார் மக்கள் 2005 - ஆம் ஆண்டில் வீதியிலிறங்கி குடிரெஸ் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரும் கிளர்ச்சியை நடத்தினார்கள். இடதுசாரிச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்து இயக்கம் நடத்திய ரபேல் கோரியா, மக்கள் நாயகனாக வலம் வந்தார். அடுத்த ஆண்டே நாடு முழுவதும் மக்கள் செல்வாக்குடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகள் கழித்து 2009 - ஆம் ஆண்டில்  நடந்த தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றார்.  இதோ மூன்றாவது முறையாக மீண்டும் ரபேல் கோரியா.
        ''இனி எவராலும் நமது நாட்டின் இந்த மகத்தான புரட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது. இந்த நாட்டை மேலும் மேலும் புரட்சிகரப் பாதையில் கொண்டு செல்லும் வல்லமை நமக்கு இருக்கிறது'' என்பதை ஈக்வடார் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ''கடந்த ஆறு ஆண்டுகளில் அமலாக்கப்பட்ட சோசலிசக் கொள்கைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது'' என்று பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் முடிவுக்குப்பிறகு மக்களிடையே உரையாற்றினார் கோரியா.
       கோரியாவின் எழுச்சிக்கு முன்பு பத்து ஆண்டுகளில் 7 ஜனாதிபதிகளைப் பார்த்தது ஈக்வடார். தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு பெட்ரோலிய வளம் கொண்டது. கோரியாவின் ஆட்சி மலர்வதற்கு முன்பு மொத்தப் பெட்ரோலிய வளமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது. ஈக்வடாரில் நடக்கும் அனைத்தையும் வாஷிங்டனே தீர்மானித்துக் கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோரியா. வெனிசுலாவில் சாவேஸ் செய்ததைப் போலவே, ஈக்வடாரின் பெட்ரோலிய வளத்தை தேசியமயமாக்கினார். அமெரிக்க பெட்ரோலியக் கம்பெனிகளின் ஆர்டர்கள் முடிந்தவுடன், அவற்றுக்கு மீண்டும் அத்தகைய வாய்ப்பு கொடுக்காமல் துணிச்சலாக நிராகரித்தார். வேறு வழியின்றி படிப்படியாக அமெரிக்கக் கம்பெனிகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கா இல்லையென்பதால் குடி ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை. மக்கள் சீனம் உள்ளே நுழைந்தது. சீனாவுக்கும் ஈக்வடாருக்கும் இடையே 200 கோடி டாலர் அளவிற்கு பெட்ரோலிய வர்த்தக உடன்பாடு கையெழுத்தானது. எஞ்சியிருந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருமுதலாளிகளின் கம்பெனிகளிடம் பெட்ரோலிய வயல்களுக்கான குத்தகைத் தொகை வெறும் 18 சதவீதமாக இருந்ததை 80 சதவீதமாக உயர்த்தினார் கோரியா. இதன்மூலம் கிடைத்த மிகப்பெரும் வருமானம் முழுவதையும் மக்கள் நலத்திட்டங்களுக்கு திருப்பிவிட்டார். பல்வேறு சமூகத் துறைகளில் 25 சதவீதம் அளவிற்கு அரசின் செலவினம் அதிகரித்தது. மத்திய வங்கியை அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
        இந்த வங்கி இனிமேல் கல்வி, வீட்டுவசதி, விவசாயம், பொதுஅடிப்படை வசதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அதிக அளவில் கடன் தரவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ‘மக்கள் கூட்டுறவுக்குழுக்களுக்கு’ சமூகக் கடன்கள் வழங்கப்பட்டன. கல்வி இலவசமாக்கப்பட்டது. மொத்தமுள்ள ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் தொகையில் 19 லட்சம் ஏழைக் குடியானவர்களுக்கு, விதவைத் தாய்மார்களுக்கு, வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் அனைத்து உதவிகளோடு, கூடுதலாக மாதம் 50 டாலர் உதவித்தொகையும் அளிக்கப்பட்டது. வேலையின்மை வெகுவேகமாக வீழ்ச்சியடைந்தது. வறுமை விகிதம் 2006 - ஆம் ஆண்டில் 38 சதவீதத்திலிருந்து தற்போது 29 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சாவேஸைப் போலவே இவரது ஆட்சியையும் ஒழித்துக்கட்ட 2010 - ஆம் ஆண்டில் அமெரிக்க உதவியோடு கலக முயற்சி நடந்தது. வெனிசுலாவைப் போலவே இங்கும் மக்கள் களத்தில் இறங்கி முறியடித்தார்கள். நெருக்கடியால் கலங்கி நிற்கும் முதலாளித்துவ உலகிற்கு ஈக்வடாரும் வழிகாட்டுகிறது!

கருத்துகள் இல்லை: