திங்கள், 25 மார்ச், 2013

''சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்'' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாட்டின் நான்கு முனைகளிலிருந்தும் நடத்தப்பட்ட ''மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம்'' 2013 மார்ச் 19 அன்று தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி / பொதுக் கூட்டத்தில் சங்கமித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலுக்கிணங்க, மிகப்பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற இப்பேரணி, ஊழல் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகள் என்னும் இரு அரக்கர்களுக்கு எதிராக புதிய ராம்லீலாவினை நடத்த வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. பேரணியின் கரு என்பது நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரு நாகரிகமான வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் நாட்டில் போதுமான அளவிற்கு வளங்கள் இருக்கின்றன என்பதும் அவற்றை மக்களுக்கு அளிப்பதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க முடியும் என்பதுமேயாகும்.
           தற்போது நாட்டின் வளங்கள் மெகா ஊழல்கள் மூலமாக சூறையாடப்பட்டு வருகின்றன அல்லது நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மக்களின் வாழ்வைச் சீர்கேடு அடையக் கூடிய விதத்தில், நாகரிகமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு மறுக்கக்கூடிய விதத்தில், அவர்களின் பொருளாதாரச் சுமைகளை அதிகரித்திடும் அதே சமயத்தில் நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு சுகபோக வாழ்க்கையையும் கொள்ளை லாபத்தையும் குவிக்கக்கூடிய விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் இத்தகைய கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். நாட்டில் தற்போது இருந்து வரும் இருவித இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு மக்களின் ஆறு அடிப்படை உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதனை நாட்டில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் கொள்கையின் திசைவழியை மாற்றியமைப்பதன் மூலம் செய்திட முடியும்.
              (1) நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கான உரிமை : உபரியாக உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக் கொள்கைகளை அமல்படுத்துக. நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்துக.
       (2) விலைவாசியைக் கட்டுப்படுத்து மற்றும் உணவு உரிமையை வழங்கிடு : அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது விநியோக உரிமையை அமல்படுத்து. மோசடியான வறுமைக் கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல் / வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்துசெய். உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை நிறுத்திடு.
               (3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை : கல்விநிலையங்களையும் சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நிறுத்திடு. கல்விக்கும் சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திடு. கல்வி உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதை உத்தரவாதப்படுத்திடு. சுகா தாரத்துறையில் பொதுச்சேவைகளை வலுப்படுத்திடு. தனியார் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திடு.           
              (4) வேலை உரிமை : வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொது முதலீட்டை அதிகரித்திடு. அரசு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள், ஒரு காலவரையறையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடு. குறிப்பாக தலித் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காலியிடங்களை நிரப்பிடு. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திடு, அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடு, நகர்ப்புறங்களில் உள்ளோருக்கும் வேலை நாட்களை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடு.
              (5) சமூக நீதியை உத்தரவாதப்படுத்து : பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் கடிவாளமிடு. நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திடு. தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பழங்குடியினரின் நிலம் மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடு. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடு.
        (6) லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு : புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான அதிகாரங்களுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்று, வெளி நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவா. இழப்புக்குப் பொறுப்பான கார்ப்பரேட்டுகளிடமிருந்து இழப்புகளை மீட்டிடு. லஞ்ச ஊழல் பேர் வழிகளை சிறைக்கு அனுப்பிடு. நமது பிரதமர் ‘‘பணம் மரங்களில் காய்ப்பது அல்ல’’ என்று சமீபத்தில் கூறியது போல ஆளும் வர்க்கங்கள் அடிக்கடி வாதிடுகின்றன. இவ்வாறு இவர்கள் கூறுவதன் உட்பொருள், மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்ற வேண்டும் என்பதற்காகத் தான். அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை மேலும் உயர்த்துவதையும், ஏழை மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை மேலும் வெட்டிக் குறைப்பதையும் நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு இவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். 
         சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சென்ற ஆண்டு நிதிப் பற்றாக்குறை சுமார் 5.21 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதே ஆண்டில் அரசுக்கு வர வேண்டிய நிதிவருவாயை வசூலிக்காமல் விட்ட தொகை மட்டும் 5.73 லட்சம் கோடி ரூபாயாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நிதிப் பற்றாக்குறையில் சுட்டிக்காட்டியிருக்கும் தொகையை விட 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே கூடுதலாக வரி வருவாயை வசூலிக்காமல் அரசு கைவிட்டிருக்கிறது. இவ்வாறு கைவிடாமல் இவ்வரிகளை வசூலித்திருந்தால், இந்த நிதிப் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. ஆயினும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் பெரும்பான்மையான மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றி, மக்களை மேலும் வறுமையில் தள்ளுவதற்கே நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு இவர்கள் அநீதி இழைப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால், அவ்வாறு வசூலித்து, நமக்கு அதிகம் தேவைப்படுகிற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக, குறிப்பாக நம்முடைய விவசாயத்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவதற்காக, பொது முதலீட்டில் ஈடுபடுத்தப்பட்டிருக்குமானால், அதன்மூலமாக நம்முடைய விவசாயிகள் தற்கொலை செய்வதைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மற்றும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி இருக்க முடியும். மேலும் இதன் மூலம் தொழில்வளர்ச்சியிலும் உத்வேகத்தை ஏற்படுத்தி, நாட்டு மக்களின் உள்நாட்டுத் தேவைகளையும் அதிகரித்திருக்க முடியும்; நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் அதிகரித்திருக்க முடியும். மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுப்பதன் மூலம் இத்தகைய மாற்றுக்கொள்கைத் திசைவழியை உத்தரவாதப்படுத்திட வேண்டும். மற்றொரு வகையில் வாதிட்டோமானால் நாட்டில் நடைபெற்ற மெகா ஊழல்கள் தடுக்கப்பட்டிருக்குமானால் நாட்டில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றக்கூடிய அனைத்து அம்சங்களுக்கும் போதுமான அளவிற்கு வளங்களை வழங்குவதையும் சாத்தியமாக்கி இருக்க முடியும். 2ஜி அலைக்கற்றை ஊழலில் மட் டும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்பட்டு அதனை உணவுப் பாதுகாப்பிற்குத் திருப்பிவிட்டிருந்தால் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் / வறுமைக் கோட்டுக்கு மேல் என்ற பாகுபாடு எதுவுமின்றி நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் விலைக்குத் தாராளமாக வழங்கிட முடியும். நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டு ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள 1.86 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்குமானால், நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒவ்வொரு மாணவ - மாணவியருக்கும் புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு ஆகியவற்றை அரசாங்கத்தின் மூலமாகவே இலவசமாக வழங்குவதை உத்தரவாதப்படுத்திட முடியும். மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமாக ஆளும் வர்க்கங்கள் இவ்வாறு நாட்டின் வளங்களைச் சூறையாடுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். 
         ராம்லீலா மைதானத்தில் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்து வந்த திமுக, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெற்றுக்கொண்டதாக அறிவித்த செய்தி கிடைக்கப் பெற்றது. இதன்மூலம் அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் உறுதியற்றத் தன்மை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது ஒரு சிறுபான்மை அரசாங்கம்தான். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை ஆட்சியில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருவதை அடுத்தே உயிர்பிழைத்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
            இப்போதைய அரசியல் உறுதியற்றத் தன்மையும் இயற்கையாகவே மாற்று அரசாங்கம் குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காகத் தேவைப்படும் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தும் கண்ணோட்டத்துடன் ஆராய்கையில், பாஜகவும் மாற்றாக அமையமுடியாது என்பது திண்ணம். அதன் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் நவீன தாராளமயச் சீர்திருத்தக் கொள்கையிலிருந்து கொஞ்சமும் மாறுபட்டவை அல்ல. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியிலிருந்த சமயத்தில்தான், சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியைப் பரிந்துரைத்திருந்தது. இதனை அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து, கிளர்ச்சி இயக்கங்களை நடத்தியபோது, பாஜகவின் இந்நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்தது. இப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் அதேபோன்று சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருக்கிறது. இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்துகொண்டு பாஜகவும் எதிர்க்கிறது. பாஜக ஆட்சியில் இருக்கையில் பொதுத்துறைப் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கைகளை வேகவேகமாக எடுத்தது. அதன் முதல் 13 நாள் அரசாங்கத்தில் மக்களவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிச்சயமாகக் கவிழ்ந்து விடுவோம் என்று தெரிந்தபின், மக்களவை நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே, அவசரம் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, திவாலாகிப்போன பன்னாட்டு நிறுவனமான என்ரான் நிறுவனத்துடன் மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதையும், அதன் மூலம் நாட்டு மக்களைக் அந்நிறுவனம் கொள்ளையடித்திட அனுமதிக்கப்பட்டதையும் நன்கறிவோம். இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயும், ஓய்வூதிய நிதிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காக ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த முன்மொழிவை பாஜக ஆதரித்ததன் மூலம், நம் நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்களின் நிதியை உலக நிதி நிறுவனங்கள் சூறையாடிச் செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாக,  மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றியமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுகின்ற அதே சமயத்தில், ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் என்னும் அதே மக்கள் விரோதக் கொள்கைகளையே இதுவும் பின்பற்றி வருகிறது.
          எனவே, நாட்டிற்குத் தேவை, காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகளை ஆட்சி அமைத்திட ஒரு மாற்றுக் குழுவை உருவாக்குவது என்பது மட்டுமல்ல. மாறாக நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தேவைப்படுவது என்னவெனில் ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியாகும். இவ்வாறு கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்றை மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமே கொண்டுவர முடியும். நம்முடைய நாட்டில் இவ்வாறு கொள்கைத் திசைவழியை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவது என்பதே நம்முன் உள்ள பணியாகும். இது காலத்தின் கட்டாயமாகும். இத்தகு உயர்நிலைக்கு மக்கள் போராட்டங்களை எடுத்துச் செல்வதற்காக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியானது வரும் மே 15 முதல் 31 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன்பு ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் முற்றுகைப்போராட்டங்களை நடத்திடுமாறு அறைகூவல்விடுத்திருக்கிறது. மிகவும் வலுவான வகையில் ஒத்துழையாமை இயக்க அளவிற்கு சிறை நிரப்பும் போராட்டமாக இது அமைந்திட வேண்டும். மாற்றுக்கொள்கைக்கான போர்முழக்கப் பயணத்திற்கு நாட்டு மக்கள் மிகவும் எழுச்சியுடன் ஆதரவு அளித்து வரவேற்றதைப் போல, வரவிருக்கும் காலங்களில் மக்களுக்காக, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக, நடைபெறவிருக்கும் வலுவான போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டுமென்று நாட்டு மக்கள் அனைவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
தமிழில்: ச.வீரமணி
நன்றி :
 

கருத்துகள் இல்லை: