திங்கள், 11 மார்ச், 2013

மகத்தான மக்கள் தலைவர் சாவேஸ் உடலில் புற்றுநோயை விதைத்தது யார்...?


      ''கவனமாக இரு என் தோழனே, சாவேஸ்! அவர்கள் பயங்கரமான தொழில்நுட்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீ மிகவும் கவனம் இல்லாமல் இருக்கிறாய். என்ன சாப்பிடுகிறோம், எதைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள்... என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்... ஒரு சிறிய ஊசி குத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட உன் உடலில் விஷத்தை ஏற்றிவிடுவார்கள்'' - எனது அரசியல் ஆசான் பிடல் காஸ்ட்ரோ, அடிக்கடி இப்படி என்னை எச்சரித்துக் கொண்டே இருப்பார் என, சில ஆண்டுகளுக்கு முன்பே வாக்குமூலம் கொடுத்திருந்தார் மறைந்த வெனிசுலா அதிபர்  ஹியூகோ சாவேஸ். 
           “ஏழைகளின் ஏசு கிறிஸ்து” என்று ஈரானைச் சேர்ந்த ஒரு மதத்தலைவர் கடந்த மார்ச் 5 - ஆம் தேதி, வெனிசுலாவின் மகத்தான தலைவர் சாவேசுக்கு புகழஞ்சலி செலுத்தினார். லட்சக்கணக்கான மக்கள் கதறியழுது, வீதிகளில் திரண்டு விடிய விடிய அஞ்சலி செலுத்திய காட்சியையும் உலகம் முழுவதிலும் ஆயிரம் ஆயிரமாய் உழைக்கும் வர்க்க மக்கள் இரங்கல் ஊர்வலம் போனதையும் சமீப காலத்தில் இந்த உலகம் பார்த்திருக்கவில்லை.
         ஊதப்படும் செய்திகளின் வேகத்தில், ஒற்றைவரித் தகவல்களில் ஒன்றாக ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கென்னடி ஜூகானவ் எழுப்பிய சந்தேகமும் இடம்பெற்றது. “அதெப்படி லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 6 தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது? புற்றுநோய் பாதித்த ஆறு பேருமே தங்களது நாடுகளை சுதந்திரமாக, இறையாண்மை மிக்க தேசங்களாக வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதிக்கொண்டிருப்பவர்கள்” என்பதே கென்னடி ஜூகானவ்வின் வார்த்தைகள். சாவேஸ் புற்றுநோய்க்கு இரையாகிவிட்டார்; கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு புற்றுநோய் இருக்கிறது; மிகச் சமீபத்தில் பிரேசில் எனும் மாபெரும் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார் டில்மா ரூசெப். அந்நாட்டின் உழைப்பாளி மக்களது தலைவராக உயர்ந்திருக்கும் இந்தப் பெண்மணிக்கும் புற்றுநோய் இருப்பதாக கடந்த டிசம்பரில் தான் தெரியவந்திருக்கிறது; பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி - ஒரு மெட்டல் கம்பெனியின் தொழிலாளியாக இருந்து உழைப்பாளி மக்களின் தலைவராக - ஜனாதிபதியாக உயர்ந்தவர் லூலா. அவருக்கும் புற்றுநோய் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. அர்ஜெண்டினா ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் கிறிஸ்டினாவுக்கு தைராய்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது
.            இவற்றையெல்லாம் பட்டியலிட்டுள்ள கென்னடி ஜூகானவ், சாவேஸ் மரணம் குறித்து சர்வதேசக் கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். கடந்த மார்ச் 5 - ஆம் தேதி சாவேஸின் மரணத்தை அறிவித்தார் வெனிசுலாவின் துணை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ. “எங்கள் தேசத்தின் வரலாற்று எதிரிகள் தான் சாவேசுக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்குக் காரணமானவர்கள்; பாலஸ்தீன மக்களின் மகத்தான தலைவர் யாசர் அராபத்தையும் அவர்கள் இப்படித்தான் கொன்றார்கள்” என்று மதுரோ, அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமலே சொன்னபோதும், எங்களுக்கும் சாவேஸின் மரணத்திற்கும் சம்பந்தமில்லை என்று அடுத்த நிமிடமே அமெரிக்கா மறுப்பு வெளியிட்டது. வெனிசுலாவுடன் ஆக்கப்பூர்வ உறவைப் பேணுவோம் என்று ஒபாமா கூறினார்.
         1998ல் வெனிசுலாவில் அந்த மாபெரும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியான சாவேஸ் 14 ஆண்டுகளில் வெனிசுலாவை உலகம் போற்றும் நாடாக மாற்றிக்காட்டினார். அந்த 14 ஆண்டுகளும் எந்த நிமிடமும் அமெரிக்க நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏவின் சதித்திட்டங்களை, தாக்குதல்களை எதிர்நோக்கியே இருந்தார். எப்படியேனும் சாவேஸை ஒழித்துக்கட்டுவது என 14 வருடங்களாக குறிவைத்துக்கொண்டே இருந்தது சிஐஏ.ஏகாதிபத்திய அமெரிக்கா ஒரு போதும் சாவேஸ் போன்ற சுதந்திரத் தலைவர்களை சகித்துக் கொண்டதில்லை. காஸ்ட்ரோ எச்சரித்தது போல மிகச்சிறிய வாய்ப்பைக் கூட பயன்படுத்தி சாவேஸ் உடலில் புற்றுநோயை சிஐஏ விதைத்திருப்பதற்கான வாய்ப்பை இதுவரை எவரும் மறுக்கவில்லை. யாசர் அராபத்தின் உடலில் பொலோனியம் எனும் நச்சை, பாலஸ்தீனர்களுக்குத் தெரியாமல் செலுத்தியது இஸ்ரேல். புற்றுநோயை உருவாக்கும் நஞ்சுகளில் பொலோனியமும் ஒன்று. அது மெல்ல மெல்ல அவரைக் கொன்றொழித்தது. சாவேசுக்கும் அப்படியே நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை பொலிவியாவின் ஜனாதிபதியும், சாவேசின் உற்ற நண்பருமான ஈவோ மொரேல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறார். “ஒருமுறை சாவேஸ் பொலிவியாவிற்கு வந்திருந்தார் . நானும் அவரும் சந்தித்துக் கொண்டபோது அவருக்கு காபி அருந்தக் கொடுத்தேன். சாவேஸின் மெய்க்காவலர்கள் அதைத் தடுத்தார்கள். அப்போது எனது சகோதரன் சாவேஸ் தனது மெய்க்காவலர்களிடம் ‘ஈவோவும் எனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுவார் என நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார்” - என ஈவோ மொரேல்ஸ், சாவேஸின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்பு கூறினார். சர்வதேச விசாரணை அவசியம் என்று இவரும் குரல் கொடுத்திருக்கிறார். 
         இதை அமெரிக்கா மறுத்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஊடகங்களின் உற்சாகக் கொண்டாட்டம், சாவேஸை அவர்கள்தான் கொன்றார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மார்ச் 5 - ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் ஏடும், வாஷிங்டன் போஸ்ட் ஏடும், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஏடும், டல்லாஸ் மார்னிங் நியூஸ் ஏடும், இன்னபிற அமெரிக்க ஏடுகளும், “வெனிசுலாவின் சர்வாதிகாரி ஒழிந்தான்” என்றும், “சாவேஸ் மரணம்: வெனிசுலாவில் தொலைந்த ஜனநாயகம் மீண்டும் மலரும்” என்றும், “கியூபாவின் டைனோசரை விட்டுவிட்டு, அதன் நண்பன் மரணமடைந்துவிட்டான்” என்றும் தலைப்பிட்டன; எழுதித்தீர்த்தன. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் இந்த செய்திகளின் சாராம்சத்தையே வாந்தியெடுத்தன. சாவேசோடு நின்றுவிடப்போவதில்லை ஏகாதிபத்தியத்தின் குறி; சாவேசோடு நின்றுவிடப் போவதில்லை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறி!
நன்றி :
 கருத்துகள் இல்லை: