ஞாயிறு, 10 மார்ச், 2013

புதுடெல்லியில் எடுபடாத கருணாநிதியின் ''டெசோ நாடகம்''....!

        தேர்தல் நெருங்க நெருங்க நமக்கெல்லாம் ரொம்ப ஜாலியா பொழுது போய்விடும்.  இனிமே திமுக தலைவர் கருணாநிதி பொழுதுபோக்கா ஏதாவது நாடகம் நடத்திகிட்டே இருப்பார்.
அவருக்கு பொழுது போகவில்லை என்ன பண்ணுவாரு பாவம்...?  இலங்கை தமிழர் விஷயத்தில் அவரும் என்னென்னமோ செய்து பார்க்கிறாரு. ஒன்னும் வேலைக்கு
ஆகமாட்டேன்னுது. ''தமிழர்களை கொன்னுபுட்டான்.. பிரபாகரனின் புள்ளைய கொன்னுபுட்டான்.. பாவின்னு'' இப்போது ஒப்பாரி வைக்கிறாரு. ஆனா இது எல்லாம் நடந்த காலம் அண்மைக்காலம் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரு ஆட்சியில இருந்த போது நடந்தது தான்.
         கருணாநிதி முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் வீற்றிருந்த போது தான் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் கடுமையான போர் நடந்தது என்பதையும், அந்த போரில் தான் ஆயிரக்கணக்கான தமிழர்களும், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரது மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டார்கள் என்பதை தமிழக மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு தமிழக மக்கள் காதில் பூ சுற்றுவதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார் திமுக தலைவர். ''அன்று என்ன செய்துகொண்டிருந்தார்...? பூ பறித்துக் கொண்டிருந்தாரா...?  இன்று எங்கள் காதில் சுற்றுவதற்கு'' என்பது தான் தமிழக மக்களின் இன்றைய கேள்வி. 
         நாடகம் - 1: கருணாநிதி முதலமைச்சராக  இருந்தபோதே, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, மத்தியில் இவரது ஆதரவில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்மோகன் சிங்கை மிரட்டியிருக்க முடியும். அதன் மூலம் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றியிருக்க முடியும். இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அப்படி செய்யாமல், கடற்கரையில் ஒரு மணிநேர ''உண்ணாவிரத நாடகம்'' நடத்திக்காட்டினார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிரூந்த தன் ''உத்தமபுத்திரனின்'' மந்திரிப்பதவியையும், பேரனின் மந்திரிப்பதவியையும் காப்பாற்றிக்கொள்வதற்காக இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் துளியும் அக்கறை காட்டவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
         நாடகம் - 2 : என்றோ காலாவதியான ''டெசோ அமைப்பிற்கு'' 2012 - ஆம் ஆண்டில் உயிர்கொடுத்தார்.  சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு எதிர்க்கட்சித்தலைவர்கள் சிலபேரை அழைத்து போலீஸ் தடையையும் மீறி நட்சத்திர ஓட்டலில் மாநாடு நடத்தில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். தமிழர்களை கொன்று குவித்த இராஜபட்சே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ. நா சபையை கேட்டு ஐ. நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து கடிதம் கொடுக்கப்படும் என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார்.
         நாடகம் - 3 : ஐ. நா - வின் பொதுச்செயலாளர் பான் கி மூனை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுப்பதற்கு தன் ''அரசியல் வாரிசு'' ஸ்டாலினையும், கட்சியின் மக்களவை உறுப்பினர் பாலுவையும் அனுப்பிவைத்தார். ஆனால் அவர்களை பொதுச்செயலாளரை சந்திக்க அனுமதிக்கவில்லை. எனவே ஐ. நா சபையின் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு திரும்பினர். ஐ. நா  - வுக்கு கிளம்பும் போதும், சென்னை வந்து சேரும் போதும் அந்த இருவருக்கும் தடபுடலான வழியனுப்பும், வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
         உண்மையிலேயே ஐ. நா.  பொதுச்செயலாளருக்கு அந்த  கடிதம் போய்  சேரவேண்டுமென்றால், அதை முறைப்படி இந்திய அரசாங்கத்தின் மூலம் தான் கொடுத்து அனுப்பியிருக்கவேண்டும். அப்படி தான் முறைப்படி கொடுக்கவேண்டும் என்கிற சின்ன விஷயம் கூட  பல காலமாக முதலமைச்சராக பணியில் இருந்தவருக்கு -  ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும்  தமிழ்நாட்டு மக்களின் காதில் பூச்சுற்றுவதற்காகவே நேரடியாக கொடுப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் தான் அது.
         நாடகம் - 4 :  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்புவதற்கு உதவிப்பணிகள் சரிவரச் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்தியாவிலிருந்து சென்ற ஆளும் கூட்டணிக்கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவில் சென்ற கனிமொழி, டி. ஆர். பாலு, அ. ராசா, திருமாவளவன் போன்ற தமிழக எம். பி. - க்கள் ராஜபட்சே அளித்த விருந்தில் பங்கேற்று, இராஜபட்செவிற்கு பொன்னாடைப் போர்த்தி, பரிசுப் பொருட்களை வழங்கி, அவர் அளித்த பரிசுப்பொருட்களையும் பெற்றுக்கொண்டு இந்தியா திரும்பினார்கள். அதுமட்டுமன்றி, இந்தியாவிற்கு வந்த இவர்கள், இராஜபட்சே அரசு இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சரியான முறையில் தான் உதவிப்பணிகளை செய்து வருகின்றன என்று இராஜபட்சேவிற்கு ''நற்சான்றிதழ்'' வழங்கினர்.
          அப்படிப்பட்டவர்கள் தான், அண்மையில் இராஜபட்சே இந்தியாவிற்கு வருகை தந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ''டெசோ'' அமைப்பின் மூலம் ''கருப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம்'' செய்ததையும், நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பாராளுமன்றத்திற்கு எதிரில் ஐ. நா. சபை இராஜபட்சே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ''கருப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம்'' செய்ததையும் பார்த்து  இந்திய - இலங்கை தமிழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
        நாடகம் - 5 : இலங்கைக்கு எதிராக ஐ. நா - மனித உரிமைக்கழகத்தில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கிற தீர்மானத்தை ஆதரிக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவதற்காக புதுடெல்லியில் ''டெசோ மாநாடு'' ஒன்று நேற்று முன் தினம்  ஏற்பாடு செய்யப்பட்டது. 40 - க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி உட்பட ஒரு சில கட்சித்தலைவர்கள் மட்டுமே ஒரு சில மணிநேரம் மட்டுமே அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சென்றது என்பது திமுக தலைவர் கருணாநிதிக்கு மாபெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. அதேப்போல் ஏற்கனவே டெசோ தலைவர் கருணாநிதி மத்திய அரசை வற்புறுத்தும் விதமாக வருகிற மார்ச் 12 - ஆம் தேதியை தமிழக பந்த் - ஆக அறிவித்திருந்தார். மாநாடு பிசுபிசுத்துப்போய் ஏமாற்றத்தைத் தந்ததால், தமிழக பந்தும் பொதுமக்களின் ஆதரவில்லாமல் பிசுபிசுத்து போய்விடுமோ என்ற அச்சத்தில் ''பந்த் இல்லை'' என்று அறிவித்துவிட்டார்.
          இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி இத்தனை நாடகங்களை அரங்கேற்றுகிறாரே, உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களின் மீது பற்றுதலும், பாசமும் இருக்குமானால், அவரிடம் உள்ள ஒரு ஆயுதத்தை பயன்படுத்தலாமே...? மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசிற்கு இதுவரைக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெற்றுக்கொள்ளலாமே...? ஏன் அப்படி செய்யவில்லை...? திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருக்கும் மன்மோகன் சிங் - சோனியா கூட்டத்திற்கு பெரிய வாய்ப்பைக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக கருணாநிதி அந்த முயற்சியில் இறங்கவில்லை. குறைந்த பட்சம் விலகுவது போல நாடகமாவது ஆடியிருக்கலாம் என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி செய்தால் தன் உத்தமபுத்திரனின் மந்திரிப் பதவி பறிபோய்விடுமே என்கிற பயம் அவருக்கு. அதனால் இதை மட்டும் செய்யாமல் மற்ற பூச்சுற்றும் வேலைகளில் மட்டும் இறங்கியிருக்கிறார் கருணாநிதி.
 

கருத்துகள் இல்லை: