சனி, 8 செப்டம்பர், 2012

நிஜ சூப்பர் ஸ்டார் ''கேரள'' நடிகர் மம்மூட்டியின் உயர்ந்த உள்ளம்..!

               அண்மையில் சிவகாசிக்கு அருகில் பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் இறந்தவர்கள் போக, தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்கள் சுமார் 40 பேர். அவர்களின் தீக்காயங்களில் இருந்து விரைந்து குணமடைவதற்கு ''அக்னிஜித்'' என்ற ஆயுர்வேத மருந்து கேட்டு, கேரளா மாநில  கொச்சியில் உள்ள ''பதஞ்சலி ஹெர்பல்ஸ்'' என்ற ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைக்கு தமிழக அரசு  35 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்திருந்தது.
               இந்த ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை என்பது கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு சொந்தமானது.  தமிழக அரசின் இந்த ஆர்டரை பற்றி அறிந்த  மம்முட்டி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு  தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமாக  அனுப்பிவைக்கும்படியும்,  இன்னும் மருந்துகள் தேவைப்பட்டால், அவை அனைத்தையும் இலவசமாக அனுப்பிவைக்கும்படியும் அவரது தொழிற்சாலைக்கு  உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மம்மூட்டியின் இந்த உயர்ந்த உள்ளம் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. 
           இத்தனைக்கும் அரசு தான் தானாகவே இந்த ஆர்டரைக் கொடுத்திருக்கிறது. மம்முட்டி நினைத்திருந்தால்  அமைதியாக ஆர்டரை வாங்கி, சத்தம் போடாமல் மருந்தை அனுப்பி, ரகசியமாக இலாபத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால் வர்த்தகத்துக்கும் இலாபத்துக்கும் அப்பால் அவரது மனிதநேயம் அவரது உள்ளத்தில் பூத்தது கண்டு அவரைப் பாராட்டாமல் செல்ல முடியவில்லை.   ஏனென்றால் ஏராளமான சூப்பர் ஸ்டார்களும், ஹீரோக்களும் மொய்த்துக்கொண்டிருக்கும்   தமிழகத்தில் உள்ள சூப்பர் ஸ்டார்களுக்கும் - ஹீரோக்களுக்கும் கூட அந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கோ அல்லது தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அவதியுறும் நோயாளிகளுக்கோ வராத சூழ்நிலையில் 
எங்கோ இருக்கும் மம்மூட்டி மருத்துவ உதவி செய்து உயர்ந்து நிற்கிறார்.
             இத்தனைக்கும்  பாலாபிஷேகம் செய்தவர்களும், போஸ்டர் ஒட்டியவர்களும், டிக்கெட் விற்றவர்களும், பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களும், சூடம் ஏற்றி பூசித்தவர்களும் தான் அந்த தீவிபத்தில் மடிந்தவர்களும், தீக்காயங்களால் துடிப்பவர்களும் என்பதை கோடிக்கணக்கான பணத்தில் புரளும் நம்  உள்ளூர் ஹீரோக்களுக்கு தோன்றாத சூழ்நிலையில் மம்மூட்டியின் மனிதநேயம் அவரை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.  
     உள்ளூர் தமிழன் படும் கஷ்டத்தைப் பார்க்காமல், வெளியூர் தமிழனுக்காக குரல்கொடுக்கும் தமிழ் திரையுலக  ''புரட்சித்தமிழர்கள்'' எல்லாம் இந்த சிவகாசி சம்பவத்தைப் பார்த்து, அவர்களுக்கு உதவ ஓடோடி  வராத   இந்த சூழ்நிலையில், தமிழனுக்கு உதவி செய்ய கரம் நீட்டிய ஒரு ''மலையாளி நடிகரின்'' தொண்டுள்ளம் இங்கு உயர்ந்து  நிற்கிறது.
             மம்மூட்டியின் உயர்ந்த  உள்ளத்தை தமிழக மக்கள் நெஞ்சார - வாயார பாராட்டவேண்டும்.

கருத்துகள் இல்லை: