வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மன்மோகன் அரசே...! முடிவுகளை வாபஸ் பெறுக - இல்லையேல் வெளியேறுக...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரிக்கை...!
    நாசகர அறிவிப்புகள் மூலமாக நாட்டு மக்கள் மீது கொடிய யுத்தத்தைத் தொடுத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக  சென்ற செப்டம்பர் 20 - ஆம் தேதி  வியாழனன்று நாடு முழுவதும் முழு அடைப்பு - பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட கொந்தளிப்புமிக்கப் போராட்டம் நடைபெற்றது.
            இந்தப் பின்னணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
            சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட தேசவிரோத முடிவுகளை திரும்பப்பெறவில்லை என்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இனியும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை.
          மன்மோகன் சிங் அரசு மக்கள் விரோத அறிவிப்புகளை திரும்பப்பெறவில்லை என்றால், இனியும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு உரிமை இல்லை.  அனைத்து பிரச்சனைகளிலுமே ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் அரசுக்கு எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில், தனது சொந்த கூட்டணிக்கட்சிகளிடமிருந்தே ஆதரவு இல்லாத நிலையில் அரசு நீடிப்பது சரியல்ல.
               அரசு தனது முடிவுகளை கைவிட வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகளும், சமாஜ்வாதி, தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுமாக மொத்தம் 8 கட்சிகள் கூட்டாக சென்ற செப்டம்பர் 20 - ஆம் தேதி  வியாழனன்று நாடு தழுவிய முழு அடைப்பு மற்றும் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து வெற்றிகரமாக நடந்தேறின. இந்தப்போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள வணிகர் அமைப்புகள்
மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அமைப்புகள் பேராதரவு தெரிவித்து கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்தன என்று கூறினார்.
                இந்தப்பிரச்சனையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றும், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்காக சிறப்பு நாடாளுமன்றத் தொடர் நடத்தப்பட வேண்டுமென்றும் பாஜக கோரியிருப்பதையும்  சுட்டிக்காட்டினார்.
              ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், வெள்ளிக்கிழமை திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலகிய பின்னர் புதிய நிலைமைகள் உருவாகலாம் என்றும், எனவே, இப்போதே முடிவுகளுக்கு வரவேண்டாம் என்றும் பிரகாஷ் காரத் குறிப்பிட்டார். அத்தகைய நிலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவினை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
              இரண்டாவது முறையாக ஆட் சிப்பொறுப்பிற்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்தாண்டு நவம்பர் மாதம் முதலே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது எனக்குறிப்பிட்ட பிரகாஷ் காரத், கடுமையான எதிர்ப்பு தொடர்வதன் காரணமாகவே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்தது என்றும், அதனால்தான் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு முனைந்தது என்றும் குறிப்பிட்டார்.
             “ஆனால், நாடு முழுவதும் நிலவுகிற எதிர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக மேலும் பல கட்சிகள் அணிவகுத்துள்ளன. இதன் பொருள் என்ன வென்றால், இன்றைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கைக் கொண்ட கட்சிகள், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிராக நிற்கின்றன என்பதே. எனவே தனது முடிவை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இந்த அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமுமில்லை; எந்த உரிமையும் இல்லை” என்றும் பிரகாஷ் காரத் விவரித்தார்.
            2009 - ஆம் ஆண்டில் வர்த்தகத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என ஏகமனதாக பரிந்துரை செய்தது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அச்சமயத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என்றும் நினைவுகூர்ந்தார்.
            தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இதுதொடர்பாக ஒரு வார்த்தைகூட நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை; அதுமட்டுமல்ல, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து கவனிக்க வேண்டும் என, பிரதமருக்கு காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியாகாந்தியே கூட கடிதம் எழுதினார் என்பதையும் இப்போது எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் பிரகாஷ் காரத் சுட்டிக்காட்டினார்.
                     “இவையனைத்தும் நடந்துள்ள போதிலும், தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார் பிரதமர்... தனது குணநலன்களுக்கு உண்மையாக அவர் நடந்துகொள்கிறார்; அமெரிக்க நாட்டிற்கு தான் அளித்த உறுதி மொழிக்கு உண்மையாக அவர் நடந்துகொள்கிறார்; சொந்த நாட்டு மக்களது நலன்களைவிட அமெரிக்காவின் நலனே அவருக்கு முக்கியமாக இருக்கிறது” என்று சாடிய பிரகாஷ் காரத், 
         “அமெரிக்காவின் ராட்சத சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்கு 2005 -ஆம் ஆண்டிலிருந்தே இந்தப்பிரதமர் முயற்சித்து வருகிறார்; அந்த நாள் முதலே நாங்கள் அதனை உறுதியாக எதிர்த்து வருகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
              அரசு அறிவித்துள்ள ஒரு முடிவுக்குக்கூட இந்திய நாட்டின் அரசியல் அரங்கில் ஆதரவு இல்லை என்பதையும் காரத் சுட்டிக்காட்டினார்.
              ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய நாசகர நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்துவோம். 2005 - ஆம் ஆண்டிலிருந்து 2009 - ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசை நாங்கள் வெளியிலிருந்து ஆதரித்தோம். அப்போது இந்த முடிவை மேற்கொள்வதற்கு இந்த அரசு துணியவில்லை. இன்றைக்கும் கூட, நான் சவால் விடுத்துச் சொல்கிறேன், மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் எங்களைக் கடுமையாக எதிர்க்கிற கட்சிகளாம் மம்தா பானர்ஜியும், காங்கிரசும் அந்தக் குறிப்பிட்ட மாநிலங்களில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவான நிலைபாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம். இதுதான் இடதுசாரிக்கட்சிகளின் பலம். இது தான் இந்தப்பிரச்சனையில் இடது சாரிக்கட்சிகள் மக்களின் கருத்தை ஒன்றுதிரட்டியிருப்பதன் பலம்” என்று பிரகாஷ் காரத் பெருமிதத்துடன் கூறினார்.

கருத்துகள் இல்லை: