செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பக்கத்து நாட்டோடு பகைமை உணர்வை வளர்ப்பது விபரீதமானது....!

        இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   உட்பட மற்ற சிறு சிறு கட்சிகளெல்லாம் ஓட்டுக்காகவும், காசுக்காகவும், இளைஞர்களின் கூட்டத்திற்காகவும் காலாவதியான பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு இன உணர்வுகளை தூண்டிவிட்டு இனவெறியாக  மாற்றி அதில் குளிர்காய்வதும் - அரசியல் பண்ணுவதுமாக இருக்கின்ற இந்த சூழ்நிலையில், அண்டை நாட்டிலிருந்து வருகின்ற யாவருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டிய ஆட்சியாளர்களே அந்த சிறு கட்சிகளைப் போல் நிதானமிழந்து சிறுமையாய்  நடந்துகொள்வது என்பது பெருமையாகாது. 
           ''வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு'' என்றெல்லாம்  பெரூமைப் பேசிக்கொள்ளும்  நாமே, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை கால்பந்து வீரர்களை - அதுவும் பள்ளிச் சிறார்களை வரவேற்று பாதுகாப்புத் தந்து உபசரிக்கவேண்டிய தமிழக அரசே அவர்களை ஏதோ தீண்டத்தகாதவர்களைப் போலவும், தீவிரவாதிகளைப் போலவும்  நாட்டைவிட்டு விரட்டியனுப்பியது என்பது அறிவுடைமையாகாது. 
           அது மட்டுமல்ல இனவுணர்வைத் தூண்டி அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த செயல் ஊக்கமளிப்பது போலவாகும் என்பதை தமிழக அரசு எப்படி உணராமல் போனது. அரசே இவ்வாறு செயல்பட்டதால் தான், இன்று தஞ்சை அருகில்  உள்ள பூண்டி மாதா  தேவாலயத்திற்கு இலங்கையிலிருந்து யாத்திரையாக வந்த அந்த நாட்டைச் சேர்ந்த 184 யாத்திரிகர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து பஸ்களில் வந்துகொண்டிருந்த போது அவர்கள் மீது ஈழத்தமிழர்  ஆதரவு  அமைப்புகளை  சேர்ந்தவர்கள் வெறியோடு தாக்கியிருக்கிறார்கள் என்பதும், அவர்கள்  உயிருக்கு பயந்து பாதுகாப்பாக தனி விமானத்தில் தங்கள் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் என்பதும் வருத்தமளிக்கக் கூடியதாகவும்  கண்டிக்கவேண்டியதாகவும்  பார்க்கவேண்டும். இது தான் மனிதனுக்கு மனிதன் காட்டுகிற மரியாதையா...?              இவ்வாறு வெறித்தனத்தொடு   தாக்குவதற்கான துணிச்சலும் தைரியமும் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது. நிச்சயமாக தமிழக அரசே அவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதில் இருந்து தான் வந்தது என்பதை  யாராலும் மறுக்கமுடியாது.
              இது மாநில அரசும் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகளும் அண்டை நாட்டினர் மீது பகைமை பாராட்டுவது சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் வளர்ந்திருக்கும் ராஜிய உறவுகள் பாதிக்கப்படுவது மட்டுமல்ல எதிர்காலத்தில் அந்த நாட்டிலிருந்து மக்கள் யாரும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வருவது என்பது குறைந்து போகும். இரு நாடுகளுக்கிடையே ஆன வர்த்தகம், ஏற்றுமதி - இறக்குமதி, சுற்றுலா, போக்குவரத்து போன்றவைகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
               இலங்கையில் அரசியல் ரீதியாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் தான் மாற்றங்களை கொண்டுவர முடியுமே ஒழிய வன்முறைகளால்  மாற்றங்களை உருவாக்க முடியாது என்பதை அனைவரும் அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும்.
             அதுமட்டுமல்ல, இதே  நிலைமை நீடித்தால், தமிழகத்திலிருந்து இலங்கை செல்வோரின் நிலைமை என்னவாகும் என்பதை அரசும், மக்களும் யோசிக்க வேண்டும். இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து இலங்கை அரசும் தமிழகத்திற்கு செல்ல வேண்டாம் என்று தன்  நாட்டு மக்களை  அறிவுறுத்தி இருக்கிறது என்பது துரதிஷ்டவசமானது

''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
  நன்னயம் செய்து விடல்"  என்ற பாடல் தமிழகத்தில் தான் எழுதப்பட்டது என்பதை இந்த தமிழ் இன உணர்வாளர்கள் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும்.   

கருத்துகள் இல்லை: