ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பாவிகளா...! என்னை மட்டும் ஏண்டா இவ்வளவு இம்சை பண்றீங்க...!



         ஒரு திரைப்படத்தில் முன்னாள் நகைச்சுவை நடிகர் வடிவேலு வில்லன்கள் கொடுத்த அடியை தாங்க முடியாமல், ''எல்லாருமா சேர்ந்து ஒருத்தரை மாத்தி ஒருத்தரா அடிச்சாங்கம்மா... அதுல ஒருத்தன் சொன்னா.... இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்... இவன் ரொம்ப நல்லவன்னா மா'' என்று சொல்லி ஓவென்று அழுவார். என்னதான் அவர் அழுதாலும் பாக்கிற நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும்.
             அந்த மாதிரி ஆகிப்போச்சி... சமீப  காலமாக இந்த பிள்ளையார் சதுர்த்தி. அண்மை  ஆண்டுகளாக மும்பையில் மட்டுமே இருந்துவந்த கலாச்சாரம் என்பது தென்னிந்தியாவையும் தொற்றிக்கொண்டது. காலங்காலமாக சிறிய களிமண் பிள்ளையாரை வாங்கி வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி, அண்மைக்காலமாக வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட ''மெகா பிள்ளையார்'' வீட்டிற்கு வெளியே எல்லாத் தெருக்களிலும், முச்சந்திக்கு முச்சந்தி  நிறுத்தப்பட்டு கொண்டாடப்படும் விழாவாக மாறிவிட்டது. காரணம் பிள்ளையார் ''மதவாத அரசியலுக்கு'' அவசியமாக தேவைப்படுகிறார். பிள்ளையாருக்கு மதம் பிடிக்கிறதோ இல்லையோ, ஆட்சிக்கு வரத்துடிக்கும் மதவாதிகளுக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்தால் மட்டுமல்ல, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து தான். மனிதனுக்கு மதம் பிடிக்க - மதவெறிப் பிடிக்க இன்றைக்கு பிள்ளையார் தேவைப்படுகிறார். அதனால தான் பிள்ளையாரை மட்டும் இவ்வளவு இம்சை பண்றாங்க.
           பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் பிள்ளையார் ''பால் குடிக்கிறார்'' என்ற புரளியை நாடு முழுதும் கிளப்பிவிட்டாங்க. தன் குழந்தைகளுக்கு பால் ஊட்டினார்களோ இல்லையோ எல்லார் வீட்டிலேயும் பிள்ளையாருக்கு பால் ஊட்டினார்கள். பக்தி, வழிபாடு, ஆன்மிகம், மதம் போன்ற மயக்கும் மதுபானங்களை  மக்களின் மூளையில் செலுத்தி, அதை தங்களுக்கு சாதகமான ஓட்டாக மாற்றிவிடலாம் என்பது  மதவாதிகளின் - மதவெறி  கூட்டத்தினரின் கணிப்பாக இருந்து வருகிறது.
           இப்படித்தான் ஒரு நாளு .... கடலுல கப்பல் போய்கிட்டே இருந்துச்சாம்... திடீர்னு   கப்பல் கடல் பாறையில மோதி கவிழ்ந்து போச்சாம்... அப்படி கவிழ்ந்து போன கப்பலிலிருந்து அதுல பயணம் செய்ஞ்ச மக்களெல்லாம்  கடலுக்குள்ள விழுந்துட்டாங்க...நீந்த தெரிஞ்சவங்கல்லாம் நீந்தி கரை சேர்ந்துட்டாங்க... நீச்சல் தெரியாத  சில பேரு மட்டும் கடலுக்குள்ளேயே தத்தளிக்கிறாங்க... எல்லோரும் அவங்க அவங்க சாமியெல்லாம் கும்பிடுறாங்க... '' முருகா காப்பாத்து... பெருமாளே காப்பாத்து... ஜீசஸ் காப்பாத்து... அல்லா காப்பாத்து....'' இப்படியாக ஆளுக்கொரு சாமிய கூப்புடுறாங்க... ஒருத்தர் மட்டும் '' விநாயகா காப்பாத்துன்னு''  கத்துறாரு... அவரது அபயக்குரல கேட்டதும் விநாயகர் அங்க வந்துட்டாரூ...
வந்தவரு சும்மா இல்ல... கடலுல தத்தளிக்கிற தன்  பக்தருக்கு எதிரிலேயே டான்ஸ் ஆடுறாரு... அந்த பக்தருக்கு கோபம் வந்துட்டுது... ''என்ன விநாயகா நான் பாட்டுக்கு உயிருக்கு போராடிகிட்டு கடலுல தத்தளிச்சிகிட்டு இருக்கேன்... என்ன காப்பாத்தாம நீ பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கியே...'' என்று கோபமா பேசுறாரு...
         இதை கேட்ட பிள்ளையாரு... ''டேய்  மவனே... அனுபவிடா... இப்படித்தானே போன விநாயகர் சதுர்த்தி அன்னிக்கி என்னை டான்ஸ் ஆடி - டான்ஸ் ஆடி கொண்டுவந்து கடலுல போட்டே... இப்ப நீ அனுபவி....'' அப்படின்னு பிள்ளையாரு டான்ஸ் ஆடிகிட்டே கிளம்பிட்டாரு... எப்படி இருக்கு கதை...
            பிள்ளையாரு இப்படியெல்லாம் பேசமாட்டாருன்னு தானே அவரை இவ்வளவு இம்சை பண்ணுறாங்க... பேச ஆரம்பிச்சாருனா  இப்படித்தான் நடக்கும்... ஜாக்கிரதை....!

கருத்துகள் இல்லை: