சனி, 22 செப்டம்பர், 2012

''மன்மோகன் சிங்கே திரும்பிப்போ'' - ஆகாவென்று எழுந்தது பார் மக்கள் எழுச்சி...!


1942 - ஆம் ஆண்டை நினைவுப்படுத்திய சம்பவம்...!

        இந்திய தேசத்தின் விடுதலைக்காக காந்தி கடைசியாக நடத்திய போராட்டம் - ''வெள்ளையனே வெளியேறு'' போராட்டம் தான். இந்த போராட்டம் 1942 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தலைநகர் புதுடெல்லியில் இன்று சம்பவம் நடந்திருக்கிறது. புதுடில்லி விஞ்ஞான் பவனில் சர்வதேச அகடாமிக் மாநாடு இன்று காலை நடந்தது. அந்த மாநாட்டில் பேசுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது, சந்தோஷ்சுமன்  என்ற இளைஞர் பல நாட்டு பிரதிநிதிகள் கூடியிருக்கும் பார்வையாளர்கள்  மத்தியிலிருந்து மேசை மீது ஏறி நின்று ''பிரதமரே திரும்பிப்போ'' என்று ஆவேசமாக முழக்கமிட்டிருக்கிறார். 
         இந்தியா அடிமை விலங்கொடித்து சுதந்திரம் பெற - விடுதலைத்தீ பரவ, ஆங்கோர் பொந்திடை வைத்து அடைகாக்கப்பட்ட  பாரதியின் ''அக்கினி குஞ்சு'',  இன்று விடுதலை இந்தியாவை மீண்டும் அடிமை விலங்கை பூட்டி ஏகாதிபத்தியத்திடம்  ஒப்படைக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மீண்டும் எழுச்சிக்கொண்டு எழ ஆரம்பித்துவிட்டது. ஆகாவென்று எழுகிறது மக்கள் எழுச்சி. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் ஆங்காங்கே வீறுகொண்டு எழ ஆரம்பித்துவிட்டது. ''வீழ்வோமென்று நினைத்தாயோ'' என்று இளைஞர்கள் விழித்தெழுகிறார்கள்.
            டீசல் விலையில் ஐந்து ரூபாய் உயர்வை சகித்துக்கொள்ள முடியவில்லை... சமையல் கேஸ் சிலிண்டர் வெட்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஏற்றுக்கொள்ள முடியவில்லை... மக்கள் ரௌத்திரம் பழக ஆரம்பித்துவிட்டார்கள். உச்சி மீது  போலிஸ் தடியடி விழுந்தாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று வீர முழக்கமிட்டு மக்கள் கிளம்பிவிட்டார்கள்.
            நேற்று முன் தினம் 20 - ஆம் தேதி நடைபெற்ற நாடுதழுவிய கடையடைப்போடு கூடிய போராட்டத்தில் மக்கள் அந்த எழுச்சியை தான்  இந்த நாடு பார்த்தது. இதை எதிர்ப்பார்க்காத மத்திய ஆட்சியாளர்கள் மக்களின் எழுச்சியைப்  பார்த்து அதிர்ந்து போனார்கள். 
            பாராளுமன்றத்தில் விவாதிக்காமலேயே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு 51 சதவீதமாக அனுமதிப்பது என்று அரசு செய்தியாக வெளியிட்டது மட்டுமல்லாமல், மக்களின் எதிர்ப்பையும் மீறி அவசர அவசரமாக அரசிதழிலும் ( Government Gazette ) அறிவிப்பாக வெளியிட்டு தனது எஜமான விசுவாசத்தை வேகப்படுத்திக் காட்டியிருக்கிறார். ''உதவாக்கரை'' என்று சேற்றை அள்ளி  வீசிய அமெரிக்க ''டைம்'' பத்திரிக்கை, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்கிறார் என்று இனி  மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளிவிடும். 
                 இந்திய பிரதமர் பொறுப்பில் இருந்துகொண்டு, இந்திய நாட்டின் ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு, இந்தியாவிலேயே வாழ்ந்தும் கொண்டு ஒரு பிரதமர் கொஞ்சம் கூட கூசாமலும்,   மிகுந்த தைரியத்துடனும், அதீத துணிச்சலுடனும் தேசத்திற்கு எதிராகவே செயல்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தனது எஜமான விசுவாசம் காட்டுகிறார் என்றால், அதைப் பார்த்து இந்திய மக்கள் எப்படி சும்மா இருப்பார்கள். பொங்கி எழுந்து விட்டார்கள்.  ஆங்காங்கே மக்களிடையே புகைச்சலும், கொந்தளிப்பும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று தான் மக்கள் எழுச்சி கொண்டு எழுந்து விட்டார்கள். 
             இது போதாது. தனித்தனியே பிரிந்து போயிருக்கும் மக்களின் எழுச்சி என்பது ஒன்றுபடவேண்டும். ஓரணியாய் திரட்டப்பட வேண்டும். என்றுமே மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடி வரும் இடதுசாரிகள் பின்னால் நிற்போம். அவர்களின் போராட்டத்தை பலப்படுத்துவோம். ஒன்றுபட்டப் போராட்டம் தான் வெற்றியடைய முடியும்.

ஒன்றுபடுவோம்... போராடுவோம்... ஆட்சியாளர்களை துரத்தியடிப்போம்...

கருத்துகள் இல்லை: