வியாழன், 9 பிப்ரவரி, 2012

பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்கள் அல்ல - மாணவர்கள் மீது மென்மையான அணுகுமுறை தேவை...!

                  இன்றைக்கு கல்வி வியாபாரமயமானதிலிருந்து போட்டிக் காரணமாக பள்ளிக்குழந்தைகளை மார்க் வாங்கும் மெஷின்களாக தான் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாறியிருக்கிறார்கள். Pre -KG., LKG - இல் தொடங்கி பத்தாம் வகுப்பு - பிளஸ் டூ வரையில் குழந்தைகள் படும் பாடு இருக்கிறதே...? அதிலும்   குழந்தைகள் பத்தாம் வகுப்பை நெருங்குகிறார்கள் என்றால்  அவர்கள் பாடு ''அய்யோ பாவம்'' தான். 
                  இன்றைக்கு தனியார் பள்ளிகளின் வேலை என்ன...?  அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் வேலை என்ன...? பாடப்புத்தகங்கள் எல்லாம் திராவகமாக மாற்றப்பட்டு குழந்தையின் வாயைத் திறந்து ஊற்றிவிடுகிறார்கள். பின் அந்தக் குழந்தை உள்ளே ஊற்றப்பட்ட அந்த திராவகத்தை அப்படியே எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பரீட்சைப் பேப்பரில் கக்கி வாந்தி எடுக்கவேண்டும். இது தான் இன்றைய கல்வி முறை...! மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை...! இதைத் தான் இன்றைக்கு இருக்கின்ற தனியார் பள்ளிகளெல்லாம் கூசாமல் செய்து வருகின்றன.
                   மனப்பாடம் செய்து ஒப்பித்தல் என்பதோ... எழுதுவது என்பதோ... குழந்தைகளின் திறமையையோ.... அறிவையோ... பொறுத்ததல்ல...! அவர்களின் முன்னோர்களைப் பொறுத்தது என்பதை முதலில் பள்ளிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணரவேண்டும்.
நம்மைச் சுற்றி வாழ்பவர்களில் சற்று உற்று நோக்கினால் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். மனப்பாடம் செய்து மந்திரங்களை சொல்லும் பிராமணர் மற்றும் குருக்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் எப்படி நிறைய மதிப்பெண்கள் வாங்க முடிகிறது. காலம் காலமாக - வழிவழியாக  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல வரிகளைக் கொண்ட மந்திரங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் தொழில் செய்பவர்கள் என்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் பாடங்களை மிக சுலபமாக - முறையாக மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதுவதும் சிறப்பாக செய்து  அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள்.
                 இதே  போன்று பாடங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக  ஒப்பித்தல் வேண்டும் என்பதையும், முழுமையாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதையும் எல்லா மாணவர்களிடமும் எதிர்ப்பார்க்க முடியாது. அப்படி எதிர்ப்பார்க்கவும் கூடாது. அது ஒவ்வொரு குழந்தைகளின் முன்னோர்களைப் பொறுத்தது. அவர்களின் வேலைத் தன்மையைப் பொறுத்தது.  
               எனவே பள்ளிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உளவியல் ரீதியாக மாணவர்களை மென்மையாக அணுகவேண்டும். பிள்ளைகள் அதிகமான மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக  கண்டித்தலும் தண்டித்தலுமான முரட்டுத்தனமான அணுகுமுறை என்பது எப்போதும் பயன் தராது. மாறாக அது ஆசிரியர்களுக்கு எதிராக - பெற்றோர்களுக்கு எதிராகத் தான் திரும்பும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அதுமட்டுமல்ல, பிள்ளைகள் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் தங்களின் எதிரியாக பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.    பள்ளிக்கூடங்கள் என்பது தண்டனை வழங்கும் சிறைக்கூடங்கள் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு நிலவும் இந்த நிலை மாறவேண்டும்.

2 கருத்துகள்:

kumaresan சொன்னது…

கார்ப்பரேட்டுகளுக்கு மிக அப்டேட்டான நவீன அடிமைகள் தேவை. அதை உருவாக்கிக் கொடுப்பதே இன்றைய கல்வி முறை. வர்த்தகமயமாக்கப்பட்ட கல்வி முறை பற்றிய விவாதங்களும், மக்கள் நல கல்வி முறையை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களும் இணைய வேண்டும்.

kumaresan சொன்னது…

கார்ப்பரேட்டுகளுக்கு மிக அப்டேட்டான நவீன அடிமைகள் தேவை. அதை உருவாக்கிக் கொடுப்பதே இன்றைய கல்வி முறை. வர்த்தகமயமாக்கப்பட்ட கல்வி முறை பற்றிய விவாதங்களும், மக்கள் நல கல்வி முறையை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களும் இணைய வேண்டும்.