சனி, 25 பிப்ரவரி, 2012

என்கவுண்டர் என்பதும் கொடூரமான கொலையே - காவல் துறையே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது நியாயம் தான...?

              நேற்று முன்தினம் விடியற்காலை செய்தியைப் பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சியாக இருந்தது. தமிழக காவல்துறையின் வீர தீர செயலை பார்த்து தமிழகமே அதிர்ந்து போனது. இவர்கள் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டால், இரக்கம், கருணை இவைகளையெல்லாம் கழட்டி எறிந்துவிடுவார்களோ...? அதனால் தான் இந்த காக்கிச்சட்டைக்குள் எப்போதும் ஓர் இரத்த வெறி பிடித்த மிருகம் ஒளிந்துகொண்டே இருக்கிறது. அதனால் தான் தமிழக காவல்துறையில் விசாரணைக் கைதிகள் கொலை, அமைதியான போராட்டத்தில் துப்பாக்கி சூடு, என்கவுண்டர் கொலை, காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் போன்ற விரும்பத்தகாத நிகழ்ச்சிகளெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை,  திமுக ஆட்சி என்றாலும்,  அதிமுக ஆட்சி என்றாலும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.
                 அண்மையில் சென்னையில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வங்கி கொள்ளைகளை ஒட்டி யாரோ கொடுத்த தகவலின் பேரில், சென்னை வேளச்சேரி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களை தமிழக காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றது. அப்படியே காவல்துறையினர் சந்தேகிப்பது போல் அவர்கள் தவறிழைத்தவர்களாக கருதப்பட்டாலும், அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாமல், காவல் துறையினரே சட்டத்தை எடுத்துக்கொண்டு சுட்டுக்கொன்றது என்பது மனிதகுலத்தை நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
               அவர்கள் தான் குற்றவாளிகள் என்று காவல்துறையினர் உறுதியாக நினைத்திருந்தால், அவர்களை உயிரோடு பிடித்து கொள்ளை சம்பத்தப்பட்ட மற்ற தகவல்களையும் பெற்றிருக்கலாமே...? அப்படியென்றால் வேண்டாத விஷயம் வெளியே வராமலிருக்க அந்த ஐந்து பேரையும் கொன்று அவர்கள் வாயை மூடிவிட்டார்களோ... அல்லது
நாளுக்கொரு கொலை - கொள்ளைகள் என நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தை பார்த்து வாய் பிளந்து கிடக்கும் தமிழக மக்களின் வாயை  மூடுவதற்காக இந்த என்கவுண்டர் இரவில் நிகழ்த்தப்பட்டதோ..... என்ற சந்தேகம் தமிழக மக்களை தொற்றிக்கொண்டுள்ளது.
             வங்கியிலிருந்து சில  இலட்சங்களையே கொள்ளையடித்த இந்த ஐந்து இளைஞர்களை நோக்கிப் பாய்ந்த தமிழக காவல்துறையின் துப்பாக்கி குண்டு,  அரசு கஜானாவிலிருந்து - மக்கள் பணத்திலிருந்து பல இலட்சம் கோடிகளை கொள்ளையடிக்கும்  அதிகாரவர்க்கத்தை நோக்கிப் பாயுமா...?  மாறாக துப்பாக்கிகளை போட்டுவிட்டு வெட்கமில்லாமல் அவர்களுக்கு சல்யூட் அடிக்கும்.
            இனியாவது, மத்திய - மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், அதற்கேற்ற வருமானத்தையும் கொடுக்கட்டும். அப்போது தான் இது போன்ற கொள்ளைகளை தடுக்கமுடியும். இல்லையென்றால் வங்கிகளிலும், நகைக்கடைகளிலும், கோயில்களிலும் நடைபெறும் நிறுத்தமுடியாது. இது போன்ற  காவல் துறையின் துப்பாக்கி குண்டுகளால் கூட  இந்த வகையான கொள்ளைகளை தடுக்கமுடியாது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

2 கருத்துகள்:

gunasekar சொன்னது…

police i kurai solla kudathu , vera enna seiya mudiyum .inthe thupakii suttai atntha 5 perum seithal eathulayum sammatham illa the police sakavendi irukkum.........so avarkai seithathu 100 ku 100 sariyeeeee

பெயரில்லா சொன்னது…

If it is a true encounter nobody is going to say anything, With all the credibility the police department have, we can't believe what police department says, If they are not lieing they should have allowed and cooperated to investigate the incident by other departments. If it is a clean murder then the people who ordered to execute should go to prison.