புதன், 15 பிப்ரவரி, 2012

ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்துகிறது அமெரிக்கா...!

                   அமெரிக்கா எப்போதுமே ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து சீரழிக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அந்த போருக்கான நியாயத்தை உலக மக்கள் நம்பும்படியான வேலைகளில் இறங்கிவிடும். அதை பரப்புவதற்கு கார்ப்பரேட் ஊடகங்கள் துணையாக நிற்கும். 
          இப்படியாகத் தான், உலக அளவில் தீவிரவாதத்தை பரப்பும் பின்லேடனை பிடிக்கப்போகிறேன் என்கிற காரணத்தைக் காட்டித்தான் ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைந்து அமெரிக்கா அந்த நாட்டையே நாசப்படுத்தியது. 
              அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பு நாடகத்தை நடத்தி, அதை காரணம் காட்டி அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் இராக் நாட்டில் ஆயுதங்களை தேடப்போகிறேன் என்று சொல்லி அந்த நாட்டினுள் நுழைந்து இராக் நாட்டையே சின்னபின்னாமாய் சீரழித்து, அந்த நாட்டு மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாய் மாறிவிட்டது. 
                  அடுத்து  ''அமெரிக்காவின் சீரழிப்பு பட்டியலில்'' உள்ள நாடுகளில், இப்போது அமெரிக்காவின் கழுகு பார்வை ஈரான் மீது பட்டிருக்கிறது. ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தான் நேற்று புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் எரிப்பும், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
                    இப்படித்தான் நேற்று, திங்களன்று மாலை நடந்த இச்சம்பவம் ஒரு உலகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய அரசுகளாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
                 தலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில், பாது காப்புமிக்க ஒளரங்கசீப் சாலையில் அமைந் துள்ளது இஸ்ரேலியத் தூதரகம். இத்தூதரக அலுவலகத்திற்கு அருகில், தூத ரக அதிகாரி ஒருவரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
               இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் காரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும், சிக்னலில் நின்றபோது காரின் பின்புறத்தில் ஏதோ ஒரு பொருளை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அப்பொருள் வெடித்து கார் தீப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
                  இது குறித்த விசாரணை தொடங்கவே இல்லை. விசாரணை முடிந்த  பிறகே இது தாக்குதலா, தற்செயல் விபத்தா என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, இதற்காகவே காத்திருந்தது போலவே, “இது ஈரானின் சதி; உலகம் முழுவதும் ஈரான் இதுபோன்ற பெரும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுமதி செய்துகொண்டி ருக்கிறது” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிக்கை வெளியிட்டார். அது எப்படி...?
               இப்படித்தான், அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தகர்ப்பில் கூட,அந்த தகர்ப்பை பார்த்து அதிர்ந்து போன காவல் துறை அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கவே இல்லை. ஆனால், அந்த அதகர்ப்பு நடக்கும் போதே அதற்காகவே காத்திருந்தாற்போல் அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இது தீவிரவாதிகளின் செயல் - இது பின்லேடனின் செயல் சென்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியது இப்போது இந்த சம்பவத்தைப் பார்க்கும் போது வருகிறது.
               இதிலிருந்தே விஷயத்தைப் பளிச்சென்று புரிந்துகொள்ளலாம்.
           பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தீவிரமடைய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைக்கூலியான இஸ்ரேலையும் போர் வெறி உச்சத்திற்கு ஏறி ஆட்டிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலை ஏவி, ஈரானைத் தாக்கி, ஒரு பெரும் போரை நடத்தி, தத்தளிக்கும் முதலாளித் துவத்தை போரால் தக்கவைத்துக்கொள்ள எத்தனிக்கிறது ஒபாமா நிர்வாகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
               ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்தும் பணியை தான் இன்று  ஊடகங்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு கைக்கொடுக்கின்றன.