வியாழன், 23 பிப்ரவரி, 2012

சி.பி.எம் மாநில மாநாடு - எழுச்சியுடன் துவங்கியது...சிறப்பு மலர் - 3

           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் பேரெழுச்சியுடன் புதனன்று துவங்கியது. உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாய் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டின் முதல் நிகழ்வான ஜோதி பெறும் நிகழ்ச்சி அபிராமி திரை யரங்கு அருகில் நடைபெற் றது. இசை நிகழ்வோடு துவங்கிய மாநாடு வங்கி ஊழியர் அமைப்பின் பீட் சேர்ந்திசைக்குழுவின் இசைநிகழ்வுடன் மாநாடு இனிதே துவங்கியது. இராஜராஜேஸ்வரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தியாகி மணவாளன் எழுதிய “விடு தலைப்போரில் வீழ்ந்த மலரே“ என்ற பாடல் இசைக்கப்பட்ட போது நிலவிய அசாத்தியமௌனம் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது. இராஜராஜேஸ்வரிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான  தோழர். பிருந்தா காரத் பொன்னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.
                 கொடி, ஜோதிக்கு வரவேற்பு மதுரை வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி நினைவுக் கொடியைக் குழுத்தலைவர் தோழர். என்.நன்மாறனிடமிருந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். என்.வரதராஜன் பெற்றுக்கொண்டார். வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகள் நாங்கள் என உலகிற்கு எடுத்துக்காட்டிய வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதியை குழுத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். வி.தம்புசாமியிடமிருந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர். கோ.வீரய்யன் பெற்றுக்கொண்டார். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கானப் போராட்டத்திற்காக தூக்குமேடை ஏறிய சின்னியம்பாளையம் தியாகிகளின் ஜோதியை குழுத்தலைவர் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சி.பத்மநாபனிடமிருந்து, சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவருமான தோழர். என். சங்கரய்யா பெற்றுக்கொண் டார். 1948 ஆம் ஆண்டு சேலம் சிறையில் 22 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீரத்தியாகிகளின் ஜோதியை குழுத் தலைவர் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். ஜி.ஆனந்தனிடமிருந்து முதுபெரும் தலைவர் தோழர். ஏ. அப்துல்வஹாப் பெற்றுக் கொண்டார்.
                    மாநாட்டுக் கொடியை எழுச்சிமிகு முழக்கத்திற்கு மத்தியில், கட்சியின் முதுபெரும் தலைவரும், மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர்.உமாநாத் ஏற்றிவைத்தார். தியாகிகள் நினைவாக எடுத்துவரப்பட்ட ஜோதிகளை ஏ.வி.முருகய்யன், வி.மாரிமுத்து, நாகைமாலி எம்.எல்.ஏ ஆகியோர் மாநாடு நடைபெறும் தோழர் ஜோதிபாசு அரங்கிற்கு எடுத்து வந்தனர்.
               பொதுமாநாடு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சியின் அகில இந்தியத்தலைவர்களும், மாநிலத்தலைவர்களும், மாநாட்டுப்பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின் பொது மாநாடு துவங்கியது.
                       இம்மாநாட்டிற்கு பெ.சண்முகம், கே.காமராஜ், மூசா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமைக்குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈந்து கட்சியைக் காத்த மாவீரர்களுக்கும், காலமான முதுபெரும் தலைவர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
               மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் வி.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ்காரத் மாநாட்டினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவருடைய ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். உ.வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

பிரதிநிதிகள் மாநாடு
        பொதுமாநாட்டினைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் பின் பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை, கே.வரதராசன், பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஏ.கே.பத்மநாபன், சுதாசுந்தரராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதி வரை நடை பெறுகிறது.

கருத்துகள் இல்லை: