செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

கொள்ளைக்கூட்டத்தின் கைகளில் இந்த நாடு சிக்கியுள்ளது....!

   பொழுதெல்லாம் எங்கள் செல்வம் 
   கொள்ளைகொண்டு போகவோ...
   நாங்கள் சாகவோ..!         
               இந்தியாவை  சேர்ந்த பெரும் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், ஆளும் அரசியல்வாதிகள், உயர்பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் என ஆளும் வர்க்கத்தினர் வெளிநாடுகளில் உள்ள  வங்கிகளில் குவித்து வைத்திருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.25 இலட்சம் கோடி என்ற அதிர்ச்சிகரமான செய்தியினை மத்திய புலனாய்வுக் கழகம் - சி.பி.ஐ -யின் இயக்குனர் ஏ. பி. சிங் வெளியிட்டுவுள்ளார். 
                இந்திய உழைப்பாளி மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரிப் பணத்திலிருந்தும், இந்திய நாட்டின் செல்வாதாரங்களிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட இந்த பெரும் தொகை என்பது சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு செய்கிற அதிகாரமிக்க தனி நபர்களுக்கும், பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கும் ஒரு சொர்க்கபுரிகளாக காட்சியளிக்கும் மொரீஷியஸ், ஸ்விட்சர்லாந்து, லீச்சென்ஸ்டெய்ன், பிரிட்டிஷ் விரிட்ஜின் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் தான் இந்தியாவில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள் எல்லாம் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். 
                ஆட்சியாளர்கள் வெகு நாட்களாக வெளியிட தயங்கிய இந்தத் தகவல்களை இவர் வெளியிட்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது.  சி.பி.ஐ  இயக்குனர் ஏ. பி. சிங் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்ட தொகையை 25 இலட்சம் கோடி என்று குறைவாக சொல்லியிருப்பதாகவும், உண்மையில் அந்த கருப்பு பணத்தின் மதிப்பு என்பது ரூ.70  இலட்சம் கோடியை தாண்டும் என்றும் இந்திய பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். அவ்வளவு  பணத்தையும்  கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் அந்த ''புண்ணியவான்களின்'' பெயர்களையும் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

கருத்துகள் இல்லை: