செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இப்படியும் ஒரு மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது பாருங்கள்....!


 
                         தமிழகம் மற்றும் புதுச்சேரி அடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு நேற்று 16-ஆம் தேதி தொடங்கி, வரும் 19-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் மற்ற கட்சிகளின் மாநாட்டினைப் போலல்லாமல் முழுக்க முழுக்க பல்வேறு வகையான மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், மாநில மற்றும் தேசப் பிரச்சனைகளையும் அலசி விவாதிப்பார்கள். மத்திய - மாநில தலைவர்கள் முதல் மாவட்டத்தின் கடைசி ஊழியர் வரை கருத்துகளையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும், விவாதங்களையும், தீர்வுகளையும் மாநாட்டின் முன் வைப்பார்கள்.
                தனி மனித துதிப்பாடல்கள் இருக்காது. தலைவர்களுக்கு ஆளுயர மாலையோ, பட்டமளிப்போ, வாழ்த்து கோஷங்களோ பார்க்கமுடியாது. விமர்சனங்களும்,  சுயவிமர்சனங்களும் உன்னிப்பாக கவனிக்கப்படும். பின் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்படும். விமர்சனம் செய்பவரை அரங்கத்திலிருந்து வெளியே தூக்கிப்போடுவதும், வேட்டியை உருவி, சட்டையை கிழித்து ரத்தம் வழிய சண்டையிடுவதும், மைக்கை பிடுங்கி அடிப்பதும் போன்ற மற்ற கட்சிகளில் சிறப்பாய் காணப்படும்  கலாச்சார சீர்கேடுகளையும், ஒழுக்கக்கேடுகளையும் இங்கே நிச்சயமாக காணமுடியாது.
               மாநாட்டில் கலந்துகொள்ளும்  பெண் தோழர்களுக்குரிய மரியாதையும், சம வாய்ப்பும்  கொடுக்கும் பாங்கை வேறு எங்கும் காணமுடியாது. மாநாட்டின் தலைமைக்குழுவில் பெண் தோழர் ஒருவரும் இடம்பெற்று மாநாட்டினை வழிநடத்துவார். பெண்களின் தலைமைப்பன்பையும், ஆளுமைக்குணத்தையும் மதித்து வளர்க்கும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கட்சியாகத்தான் இருக்கமுடியும். அதேப்போல் சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் தலித் தோழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு உயர்த்தப்படுவார்கள். 
               கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வந்திருக்கும் தோழர்களும், படிக்காதவர்கள் முதல் மெத்த படித்த தோழர்களும், தொழிலாளர்கள் முதல் மத்தியதர ஊழியர்கள் வரையிலான தோழர்களும் பாகுபாடில்லாமல் - வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியாக மதிக்கப்படுவார்கள். உணவு பரிமாறும் இடங்களில்  கூட கட்சித் தலைவர்கள்  சாதாரண ஊழியர்களோடு  சேர்ந்து வரிசையில் நின்று உணவை பெறும் காட்சிகளை வேறு எந்த கட்சிகளிலும் காணமுடியாது. செவிக்கும் வயிற்றுக்கும் மட்டுமல்ல இவர்கள் நடத்தும் இந்த மாநாடு. அறிவை விரிவாக்கும், நல்ல சிந்தனையை தூண்டும், விழிப்புணர்வை வளர்க்கும் எண்ணற்றப் புத்தகங்களின் விற்பனைக்கூடம் மாநாட்டின் இன்னொரு சிறப்பம்சம் ஆகும். 
                   மாநாட்டு வேலைகள் அனைத்தும் - விளம்பரம் எழுதவதும், போஸ்டர் ஓட்டுவதும், தெருவெங்கும் தோரணங்கள் கட்டுவதும், மேடைகள் அமைப்பதும், ஒலி - ஒளி அமைப்பதும், உணவு சமைத்தலும், தோழர்கள் தங்குமிடத்தில் உதவிசெய்வதும் ஆகிய அனைத்து விதமான மாநாட்டு வேலைகளையும் மற்ற கட்சிகளைப்போல் அந்தந்த ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்துவிட்டு அழுக்குப்படியாத வெள்ளாடைகள் அணிந்து சொகுசாக மாநாட்டை நடத்தாமல், அனைத்து தலைவர்களும், ஊழியர்களுமாய் பொது மக்களிடம் நிதி திரட்டி, அவர்களே மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொண்டு மாநாடு முடியும் வரை ஓய்வில்லாமல் தலை மேல் சுமந்து உழைப்பதையும் கூட வேறெங்கும் காணமுடியாது. 
              இப்படியாக மக்கள் சிந்தனையும், சமூக அக்கறையும், மாநில - தேச நலன்களையும் மட்டுமே மேலோங்கி காணப்படும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு என்பது, வெற்று பேச்சு பேசி, தலைவர்கள் புகழ் பாடி, தங்களைத் தாங்களே தலைவராய் அறிவித்துக்கொண்டு கூடிப்பிரியும் வெட்டிக்கூட்டமல்ல இது. ஜனநாயக முறைப்படி, தேர்தல் முறைப்படி தான்  செயலாளர் தேர்வும், மாநில மற்றும் செயற்குழுகள்  தேர்வும் நடைபெறுகிறது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது மாதிரியான உட்கட்சி ஜனநாயகத்தை இந்தியாவில் வேறு எந்த கட்சிகளிலும் காணமுடியாது.
              பொதுவாகவே தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி மாநாடு நடத்தினாலும், மாநாட்டில் கலந்துகொள்ளும் அந்தக்கட்சி உறுப்பினர்கள் மாநில அரசுக்கு அபரிதமான வருமானத்தை உண்டுபண்ணும் ''உன்னத வேலையை'' செய்வது தான் வழக்கம். அதாவது மாநாடு நடக்கும் பகுதியில் உள்ள ''டாஸ்மாக்'' கடைகளில் அந்த கட்சித்தொண்டர்களின் தாராளமான விற்பனையையும், ஏராளமான தொண்டர்கள் போதையில் மயங்கிக் கிடப்பதையும் கண்கொள்ளாக் காட்சிகளாக நம்மால் காணமுடியும். அந்த அளவிற்கு டாஸ்மாக்கில் இலட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும். ஆனால் மார்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அது போன்ற காட்சிகளை காண்பதரிது. அந்த அளவிற்கு மார்க்சிஸ்ட்டுகள் தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள் என்பது கட்சியின் தனிச்சிறப்பாகும்.