ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

என் வாழ்வில் மறக்க முடியாத நாள்...! - பிரதாப் போத்தன்


             பிரதாப் போத்தன் - திரைப்பட இயக்குனர் - நடிகர் - தன்னுடைய முகநூலில் இட்ட பதிவு...!                                   

            பிரபல தமிழ், மலையாள திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் ஆலப்புழையில் வெள்ளியன்று (பிப்ரவரி-20) நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுத் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அந்தப் பங்கேற்பின் உணர்வுகளை அவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
              என்னைப்பொறுத்தவரை இன்று “ அதிசய உலகில் ஆலிஸ்” இருந்தது போன்ற தினமாகும். வாழ் நாளில் ஒருபோதும் மறக்க முடியாத நாளாகும். இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் ஆலப்புழையில் நடைபெறக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு வந்திருந்தது. இரண்டு மணி நேரம் காரில் ஆலப்புழைக்குப் பயணிக்கையில் மனசுக்குள் ஏராளமான நினைவுகள் அலைமோதின. கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் அப்பாவுக்கிருந்த நெருக்கமான உறவு குறித்து அம்மாவும் சகோதரியும் சொல்லக் கேட்டதுண்டு. திருவாங்கூர் திவானாக சி.பி.ராமசாமி இருந்த போது கம்யூனிஸ்டுகளைக் கண்டவுடன் சுட்டுக்கொல்லச் சொன்ன காலமது. புன்னப்புரா-வயலார் எழுச்சிப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட காலமது. 
          எங்கள் வீட்டில்தான் தோழர் கிருஷ்ணப்பிள்ளை தலைமறைவாகத் தங்கியிருந்தார். அவரால் ஈர்க்கப்பட்டு என் அப்பாவும் கம்யூனிஸ்ட் ஆனார்...! என் அப்பாவும் தேடப்பட்டோர் பட்டியலில் இருந்ததால் அவரும் அநேகமாக தலைமறைவாகவே இருந்தார். எங்கள் வீட்டில் உணவருந்தாத கம்யூனிஸ்ட் தலைவர்களே கிடையாது என்று அம்மா கூறுவார்.
           ஒருவித அடக்கத்தோடும் பெருமிதத்தோடும் மாநாட்டில் பங்கேற்கச் சென்றேன். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மாநாடு நடைபெறும் மைதானம் செங்கடல் போன்று காட்சியளித்தது பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பினராயி விஜயன், பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி, சீத்தாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்திக்க முடிந்தது, மேலும், எனது திரையுலக நண்பர்களான முகேஷ், இன்னோசென்ட் எம்.பி., ஆசிக் அபு ஆகியோரையும் இன்னும் சிலரையும் சந்தித்தேன்.
            மறக்க முடியாத நாள்...! எனக்குத் தகுதியிருப்பதாக எண்ணி மாநாட்டில் பங்கேற்க மகத்தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்னை அழைத்த நாள்...!                          
எல்லாவற்றிற்கும் மேலாக, நான் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவே  இன்று உணர்கிறேன்... சகாக்களே... முன்னேறுவோம்...!                      
நன்றி : தீக்கதிர்  

கருத்துகள் இல்லை: