செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எங்கே போனது மோடி அலை...?


 ''பீப்பிள்ஸ் டெமாக்ரசி'' தலையங்கம் (பிப்ரவரி 15, 2015)                         

         ‘மோடி அலை’ என்ற பிரச்சாரத்தை தில்லி வாக்காளர்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள். அவர்கள் அதை மிகவும் மகத்தானமுறையில் செய்திருக்கிறார்கள்.
           மக்களவைத் தேர்தலின்போது காங்கிரசுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதி, இப்போது பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் வெறும் மூன்று இடங்கள்தான் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. உண்மையிலேயே மிகவும் மோசமான ஒன்றுதான்.
           பாஜக, தில்லி சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்கக்கூடிய தகுதியைக்கூட இழந்து நிற்கிறது.
மோடி ஓ மோடி
                          ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் தில்லியில் விளம்பரங்களுக்கு மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரம்மேற்கொண்டது. அந்த விளம்பரங்கள் எல்லாம் தில்லி மக்கள் `மோடி அரசாங்கம்’ மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என்கிற ரீதியில் அமைந்திருந்தன. மோடி, பிரதமராக இருக்கக்கூடிய அதே சமயத்தில் தில்லி மாநில முதல்வராகவும் இருப்பார் என்று தில்லி மக்களால் கூறப்படுவதாக அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருந்தன.
                பிரதமர் மோடியும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ‘நாடு என்ன உணர்கிறதோ அதனை தில்லி மக்கள் எதிரொலிப்பார்கள்’ என்று கூறினார். ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தற்போது பாஜக தலைவர்கள் தில்லி தேர்தல்முடிவு மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்தின் மீதான கருத்துக்கணிப்பு அல்ல என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

ஆம் ஆத்மி கட்சி சாதிக்குமா...?                   

           இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிந்து இருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மீது மிகப்பெரும் அளவில் பொறுப்பு ஏற்றப்பட்டிருக்கிறது. தில்லி சட்டமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவில்தான் அதிகாரங்கள் உண்டு. எனவே,ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ள உறுதிமொழிகள் பலவற்றை நிறைவேற்றுவதில் அதிக அளவில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
                    தற்போதுள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, நிலங்களைப் பயன்படுத்துதல், மின் விநியோகம் போன்று பல அம்சங்களில், தில்லி சட்டப் பேரவைக்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே அதிகாரங்கள் உண்டு. இந்நிலைமையை மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் எந்தஅளவிற்கு உதவிடும் என்று சொல்வதற்கில்லை. இந்த அம்சங்களில் மத்திய அரசின்ஒத்துழைப்பை ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் எப்படிப் பெறப்போகிறது என்பதை வரவிருக்கும் காலம்தான் கூறும்.
                      இருப்பினும், தில்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சி உதாசீனம் செய்ய முடியாத ஒரு விஷயத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் அது அதிருப்தியை அதிகரித்திடவும், மயக்கத்தைப் போக்கிடவுமே இட்டுச்செல்லும். இதனை பாஜகவும் பிரதமர் மோடியும் ஏற்கனவே மிகவும் கசப்பான முறையில் கண்டுவிட்டார்கள்.
`ஓவர் டைம்’ வேலை பார்த்த மோடி
               ஆர்எஸ்எஸ்-பாஜக இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட கங்கணம் கட்டிக்கொண்டிருந்தன. பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் அதிகநேரம் வேலை செய்தார்கள். தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளைச் சரிசெய்திட கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். இது, ஆரம்பத்தில் மிகவும் நல்ல விஷயமாகவே அவர்களுக்குத் தோன்றியது.
          ஆயினும், தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவை பீதி கவ்விப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய 120 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 20க்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்களையும் பிரதமரையும் களத்தில் இறக்கியது. கடைசி நான்கு நாட்களில் மூன்று பேரணி-பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

கருப்புப் பணம் எங்கே...?                  

          ஆனால் அவரது உரையை மக்கள் நம்பவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் `கருப்புப் பணம்’ முழுவதும் உடனடியாகத் திரும்பவும் நம் நாட்டிற்கே கொண்டுவரப்படும் என்றும், நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் வீதம் அவை பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் ஒன்பது மாதம் முன்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவும் நகரவில்லை.
கருப்புப் பணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் மறந்துவிட்டதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள பணம் எவ்வளவு என்கிற ஒரு நியாயமான மதிப்பீட்டைக்கூட மோடி நிர்வாகத்தால் செய்ய முடியவில்லை. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டிருப்பது, தினசரி வாழ்க்கையில் இடைவிடாமல் எதிரொலிக்கிறது.
             பிரதமரால் மிகவும் தம்பட்டம் அடித்துத் துவங்கப்பட்ட `ஜன்தன் யோஜனா திட்டம்‘ போன்ற திட்டங்களால் நாட்டு மக்கள் பலருக்கும் புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன, உண்மைதான். ஆனால், அதற்குமேல் எவருக்காவது எந்தவிதமான உருப்படியான பிரயோசனமும் இருந்ததா? பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை,
                 மன்மோகன் சிங் அரசாங்கம் கடைப்பிடித்த நாசகரச் செயல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய அளவிற்கு காங்கிரசைவிட வேகமாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் முதலாளிகள் கொள்ளைலாபம் ஈட்டக்கூடிய அளவிற்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டிருக்கிறார்கள். நாட்டுமக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திட வெறித்தனமானமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வேகமாய் மறையும் மாயவித்தை                     

       `மோடியின் மாயவித்தைகள்’ எல்லாம்மிகவும் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டை வளமாக்குவோம் என்று அவர்கள் கூறிய கோஷங்களும், அதே சமயத்தில் மக்கள் மத்தியில் பின்பற்றிய மதவெறி வன்முறைகளும் என இரண்டும் சேர்ந்து அவர்களுக்கு தேர்தல் வெற்றிகளை ஈட்டித்தந்தன.
           ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர், அவர்கள் கூறிய வளர்ச்சி என்பது வெறும் மாயை என்பதும் மக்களுக்குப்புரியத் தொடங்கி விட்டது. இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுதல், புராணங்களை வரலாறாக பாவித்தல், காதலுக்கு எதிரான வெறித் தாக்குதல்கள், மறு மதமாற்ற நிகழ்வுகள் போன்றவை அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.
              தில்லி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு பாஜக எம்பி, மதவெறித் தீயைவிசிறிவிடுவதில் பேர்போனவர், மகாத்மா காந்தியை தேசத்தின் தந்தை என்று கூறுவதுதவறு என்று பிரகடனம் செய்தார். காந்தியைப்படுகொலை செய்த, நாதுராம் கோட்சேயை, தேசத்தின் ஹீரோவாக சித்தரித்து சிலை வைக்க வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தின் தொடர்ச்சிதான் இது.
              இதனைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர், இந்தியா எப்போதும் ‘இந்து ராஷ்ட்ரமாகவே’ இருந்து வந்திருக்கிறது என்றும், நாட்டின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்து, இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் மீண்டும் கூறினார்.பாஜகவின் பிரச்சாரத்தில் சமீபத்தில் பிரச்சனையை ஏற்படுத்திய ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அதிகாரப்பூர்வ அரசாங்க விளம்பரம்ஒன்றை வெளியிட்டது தொடர்பானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதை, மதவெறியர்களின் ஓர் இழிவான நடவடிக்கையாகவே மக்கள் பார்க்கிறார்கள். மக்களின் சந்தேகத்தை உறுதி செய்யும் விதத்தில் பாஜகவினரும் “மதச்சார் பின்மை’’ குறித்து ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஏனெனில் இந்த வார்த்தை 1975-77இல் அவசரநிலைக் காலத்தின்போது இந்திரா காந்தியால் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் என்றும் கூறி, எனவேதான் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்கிறோம் என்றும் பூசி மெழுக முயற்சித்தனர். இவற்றையெல்லாம் கவனித்த தில்லி மக்கள், தங்களது கோபக்கனலை வெளிப் படுத்தியிருக்கின்றனர்.
தமிழில் : ச.வீரமணி                        
நன்றி : தீக்கதிர்                  

கருத்துகள் இல்லை: