சனி, 7 பிப்ரவரி, 2015

ஒபாமாவின் முதலைக் கண்ணீரும், மோடியின் மவுனமும்...!

              
                அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு முன்பே பல்வேறு அவசர சட்டங்களும், வரவேற்புகளுமாக பிரதமர் நரேந்திரமோடி காட்டிய ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும், ஒபாமா இந்தியாவில் தங்கியிருந்தபோது ''நிமிட்டுக்கு நிமிட்'' இலட்சக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட வகைவகையான புத்தாடைகளை உடுத்தி மோடி வெளிப்படுத்திய ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும், உற்சாகமும்  ஒபாமா இந்தியாவை விட்டு பறந்து சென்றவுடன் சத்தமில்லாமல் அடங்கிப்போய் விட்டதே ஏன்...? திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் மோடி சத்தமில்லாமல் அடங்கிவிட்டாரே ஏன்...?
               கடந்த மாதம் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று  நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ஆம் தேதி அன்று புதுடெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய ஒபாமா, ''இந்தியாவின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். மத சகிப்புத்தன்மை இல்லாமல் இந்தியா இல்லை'' என்று  மோடியின் தலையில் நறுக்கென்று ஒரு ''குட்டு'' வைத்தார். சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது வேறு விஷயம். ஆனால் சற்றும் எதிர்ப்பார்க்காத அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதீய ஜனதாக்கட்சியையே அதிரவைத்தது. காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்ட கதையா போச்சு. 
                ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாரதீய ஜனதாக்கட்சி தான் சொல்லியதே தவிர மோடி அதைப்பற்றி இதுவரை வாயை திறக்கவே இல்லை. இப்படியிருக்க ஒபாமா நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து இன்னொரு அஸ்திரத்தை மோடியின் மீது வீசினார். 
                 தனது  இந்திய சுற்றுப்பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா  பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது. மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம். ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக்கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. அதனால்  இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ''மத சகிப்புதன்மையின்மையை'' இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்ற உண்மையை சொல்லி முதலைக்கண்ணீர் வடித்திருக்கிறார். 
               ''இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார்'' என்று ஒபாமா வெளிப்படுத்திய கருத்து மோடியின் தலையில் இடியாய் விழுந்திருக்கிறது. ஆனால் ஒபாமாவின் இந்த கருத்துக்கும் மோடி மட்டுமல்ல பாரதீய ஜனதாக்கட்சியும் இதுவரையில் வாயை திறக்கவில்லை. மவுனம் சாதிக்கின்றனர். ஒபாமாவின் இந்த கருத்துக்கு மோடி மவுனமாய் இருப்பது என்பது ஒபாமாவின் ''மதம்'' சார்ந்த கருத்தில் மோடிக்கு ''சம்மதமே'' என்று எடுத்துக்கொள்ளலாமா...?

கருத்துகள் இல்லை: