புதன், 11 பிப்ரவரி, 2015

டெல்லி மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும்...!

                   
             ''மோடி அலை'' என்ற மாயையை மோதி உடைத்த ''மக்கள் அலையை'' பாராட்டியே ஆகவேண்டும். ஆம்... அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரேயடியாய் தூக்கியெறிந்த டெல்லி மக்களை நன்றியுடன் வாயார - நெஞ்சார வாழ்த்துகிறேன்... பாராட்டுகிறேன். பொய்களை அள்ளித்தெளித்து - பெருமுதலாளிகளின் கோடிகளை அள்ளிக்கொடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, பின்னாளில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல்களிலும் வெற்றிபெற்று திமிரோடும், ஆணவத்தோடும் மதவெறியை உயர்த்திப்பிடித்து நாட்டில் உலா வந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வும், பாராளுமன்றத்தில் இராட்சச பலத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்கு ஆதரவாக - தேசத்திற்கு எதிராக - மக்களுக்கு எதிராக தான்தொன்றித்தன்மாக - அடாவடித்தனமாக - தருதலைத்தனமாக மத்திய மோடி ஆட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது.
               உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த தலைநகர் தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்று உலகத்திற்கு காட்டவேண்டும் என்று துடிதுடித்து தேர்தல் வேலைகளை பார்த்தார். அதற்காக பத்திரிக்கைகளுக்கு பல கோடிகளை  செலவு செய்திருக்கிறார். ஆனால் அவை எதையும் டெல்லி மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும், மோடியின் பொய்யான வார்த்தை ஜாலங்களுக்கு மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாசகரக்கொள்கைகளையும், மெகா ஊழல்களையும் நேரில் தங்கள் அருகிலேயே பார்த்து நொந்து போன டெல்லி மக்கள், காங்கிரஸ் கட்சியை தங்கள் தலையை சுற்றி தூக்கிஏறிந்தார்கள். 
                அதை கிழிப்பேன்... இதை கிழிப்பேன் என்று வார்த்தை ஜாலங்களை அள்ளித்தெளித்து, கோடிகளை அள்ளிக்கொடுத்து ஆட்சியிலமர்ந்த பாரதீய ஜனதாக்கட்சியோ கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் போலவே கொஞ்சமும் வித்தியாசமில்லாமல், அதேப்பாதையில் அவர்களை விட வேகமாக - தாறுமாறாக பயணம் செய்ததை பார்த்து வெறுத்துப் போன டெல்லி மக்கள் - மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைத்து, இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினருக்கெதிரான மதவெறி சம்பவங்களை பார்த்து வெகுண்டு போன டெல்லி மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சியாக அமரவைத்த பாரதீய ஜனதக்கட்சியை, நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் எதிர்கட்சியாகக்கூட அமரமுடியாமல் துடைப்பத்தால் அள்ளி குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டார்கள்.
                  இதற்காக மீண்டும் மீண்டும் டெல்லி மக்களை வாயார பாராட்டலாம். நெஞ்சார வாழ்த்தலாம். இந்திய மக்களிடையே மாற்று சிந்தனையை விதைத்திருக்கிறார்கள். மீண்டுமொரு முறை வாழ்த்துகள்.....! 

கருத்துகள் இல்லை: