திங்கள், 30 செப்டம்பர், 2013

எனது இனிய தோழரின் பணி நிறைவு...!          எல்.ஐ.சி. - யில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் ஒரு தட்டெழுத்தராக சிதம்பரத்தில் பணியில் சேர்ந்து உயர்நிலை உதவியாளராக புதுச்சேரியில் இன்று பணி ஓய்வுபெற்ற என்னினிய நண்பரும், தோழமை குணம் கொண்ட அருமைத்தோழருமான ஆர்.சாய்ஜெயராமன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்... வழியனுப்புகிறேன்...!
         முதல்நிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, அதிக வருவானம், அந்தஸ்து, அதிக ஓய்வூதியம் , இன்னும் பல பலன்கள் பெறுவதற்கு வாய்ப்பிருந்தும், தான் ஓய்வுபெறும் இறுதி நாள் வரை அதற்கெல்லாம் ஆசைப்படாமல், மூன்றாம் நிலை ஊழியராகவே பணி  ஓய்வு பெற்றது என்பது பாராட்டுதற்குரியது. இவரோடு பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்று சென்ற போதும், அதில் துளி கூட ஆசைப்படாமல் மூன்றாம் நிலை ஊழியராகவே இருந்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு பலம் சேர்த்தவர். சங்கம் நடத்திய போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர். வேறு கொள்கை, வேறு சிந்தனை - இப்படியாக அவரது எண்ணங்கள் வேறுவேறாக இருந்தாலும், சங்கம் என்று வந்துவிட்டால் சங்கம் கிழித்தக் கோட்டை தாண்டமாட்டார். அதற்காகவே அவரை நெஞ்சார பாராட்டவேண்டும்.
         அதேப் போல், இத்தனை ஆண்டுகள் சங்கத்தில் உறுப்பினாராக இருந்திருக்கிறார். சங்கத்தின் பதவிக்கும் அவர் இதுவரை ஆசைப்பட்டவர் அல்லர். அவர் நினைத்திருந்தால் ஓய்வுபெறும் வரை ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு - அடுத்தவர்களின் உயர்வுக்கு வழிகாட்டியாக மட்டுமே இருந்திருக்கிறார். அடுத்தவர்களின் முன்னேற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களை ஒழித்துக்கட்டும் வேலைகளில் ஈடுபடுவோர்கள் மத்தியில் இப்படியும் ஒரு அபூர்வமான மனிதர்.
           கடந்த காலங்களில் கொள்கை ரீதியாக - சிந்தனை ரீதியாக நாங்கள் அலுவலகத்தில் சண்டைப்போட்டுக்கொள்வோம். நான் அவரிடம் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டே இருப்பேன். ஒரு ஆரோக்கியமான விவாதமாகத் தான் இருக்கும். நாளை முதல் நான் என்ன செய்வேன். பணி  நிறைவு என்பது இயற்கையானது. கட்டாயமானது. அந்த வகையில் அவரை வாழ்த்தி வழியனுப்புகிறோம். தோழர். சாய்ஜெயராமன் அவர்கள் மீதிருந்த மரியாதை மற்றும் தோழமை காரணமாக புதுச்சேரி லிகாய் - முகவர் சங்கத்தின் சார்பில் முகவத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.  

2 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் புதுவை ராம்ஜி

வழியனுப்பு விழா - பணி நிறைவு செய்தவரைப் பாராட்டி மகிழ்ந்து விடை கொடுக்கும் விழா - பதிவு நன்று புகைப்படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் புதுவை ராம்ஜி

வழியனுப்பு விழா - பணி நிறைவு செய்தவரைப் பாராட்டி மகிழ்ந்து விடை கொடுக்கும் விழா - பதிவு நன்று புகைப்படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா