செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இக்கால கல்விமுறை என்னத்த கற்றுக்கொடுக்கிறது....?

       
        நான் சென்ற சனிக்கிழமை ஏழாம் தேதி  இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து வள்ளியூருக்கு இரயிலில் சென்றேன். முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால்  விழுப்புரம் சந்திப்பில் வண்டி வந்து நின்றதும் பெட்டியினுள் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து அருகில் சென்றேன். அதனுள் ஒரே இளைஞர்கள் கூட்டம். அவர்கள் கைகளில் ஐ பாடு, மொபைல் மற்றும் காதுகளில் வயர் தொங்கிகிட்டு இருந்தது. அவர்களை பார்த்ததும் கல்லூரி மாணவர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் சட்டென்று அப்போது தான் பசி வந்ததை போல் உடனே இரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் டிபன் வாங்க ஓடினார்கள். அதற்குள் இரயில் கிளம்ப மீண்டும் ஓடிவந்து உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். நானும்  அவர்களோடு இளைஞர்களோடு இளைஞனாக அமர்ந்து கொண்டேன்.  இரயில் ஓடிக்கொண்டிருந்த வேகத்தில் அவர்களுக்கு பசியும்  அதிகமாகிவிட்டது. திருச்சிக்கு போவதற்கே இரவு 11 ஆகிவிடுமே. அதுவரையில் எப்படித் தாங்கிக்கொள்வது என்று சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
          யார் வீட்டு பிள்ளைகளோ பசியில்  இப்படி அவஸ்தை அடைவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்னுமொரு இருபது நிமிடத்தில் விருத்தாசலம் ஸ்டேஷன் வந்துவிடும். விருத்தாசலத்தில் இருக்கும் எல்.ஐ.சி முகவரும், லிகாய் - முகவர் சங்க பொறுப்பாளருமான தோழர். கணேசன் அவர்களை அழைத்தேன். என்னருகே 6 இளைஞர்கள் பசியால் துடிக்கிறார்கள். திருச்சி வரையில் தாக்கு பிடிக்கமாட்டார்கள்.  எனவே 6 செட் டிபன் வாங்கி விருத்தாசலம் இரயில் நிலையத்தில் கொடுக்க முடியுமா..? என்று கேட்டது தான் தாமதம். நாம்ப இது கூட செய்யாம எப்படி தோழர்...?         நானிருக்கும் பெட்டி எண்ணை  மட்டும் கேட்டுக்கொண்டு, கவலைப்படாதீங்க
டிபனோடு வந்துவிடுகிறேன் என்று சொன்னதை கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. எங்கள் தொழிற்சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் கற்றுக்கொடுத்தப் பாடம் வீண்போகவில்லை என்பதை உணர்ந்தேன். மனித நேயம், மானுட பண்பு நம் தோழர்களிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
            இருபது நிமிடத்தில் விருத்தாசலம் ஸ்டேஷன் வந்தது. சொன்னது போல் தோழர். கணேசன் டிபன் பையோடு நின்றுந்தார். கேட்டது போல் டிபனும், நான் கேட்க மறந்த தண்ணீர் பாட்டிலையும் ஞாபகத்தோடு வாங்க வந்திருந்தார். நான் நெகிழ்ந்து போனேன். நான் நன்றி பாராட்டினேன். அடுத்த மணித்துளியில் இரயில் அங்கிருந்து புறப்பட்டது. பசியில் இருந்த அந்த இளைஞர்கள் அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்து வேகவேகமாக சாப்பிட்டு பசியாரினார்கள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே  ''நீங்கள் எல்லோரும் யாரு... எங்கிருந்து வருகிறீர்கள்...?''             என்றெல்லாம் விசாரித்தபோது தான் தெரிந்தது, அவர்கள் சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் இரண்டாமாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் என்று. எப்படிப்பா தனியார் மெடிக்கல் காலேஜில சீட் வாங்குனீங்க...? என்று கேட்ட போது பகீர் என்றிருந்தது. அவர்கள் ஆளுக்கு 30 இலட்சம் கொடுத்து தான் மெடிக்கல் சீட்டே வாங்கினார்களாம். அது இல்லாமல் வருஷத்திற்கு 6 இலட்சம் செலவாம். என்னதான் காசுக்கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கினாலும், அதே காசைக் கொடுத்து சாப்பாட்டை வாங்கி பசி ஆற முடிந்ததா பார்த்தீர்களா....?
          நாம் ஆறு இளைஞர்களின் பசியை போக்கினோமே என்று என் மனதிற்குள் திரூப்திப்பட்டுக்கொண்டேன். சாப்பிட்டு முடித்தது தான் தாமதம், உடனே பெர்த் எல்லாம் தூக்கி மாட்டினார்கள். அவர்கள் அவர்கள் இடத்தில் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். டிபன் வாங்கிக்கொடுத்தற்கு நன்றி... இவ்வளவு அக்கறையா எங்களுக்கு டிபன் வாங்கிக்கொடுத்தீர்களே நீங்க யாரு... எங்கிருந்து வரீங்க...டிபன் எவ்வளவு ஆச்சி...? இப்படியெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்தேன். ஒன்றுமே பேசவில்லை.  சாப்பிட்டார்கள். கை கழுவினார்கள். தண்ணீர் குடித்தார்கள். காதுக்கும் மொபைலுக்கும் கனெக்சன் கொடுத்தார்கள். ஏறிப்படுத்தார்கள். அவ்வளவு  தான். அதன் பிறகு அவர்களுக்கு எனக்கும் எந்த ஒரு தொடர்பும்  இல்லை. மனிதநேயத்துடன் நாம் உதவி செய்தோம். ஆனால் என்னை ஒரு மனிதனாகக் கூட அவர்கள் மதிக்கவில்லையே. உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.  
           என்ன கற்றுக்கொடுக்கிறது இன்றைய கல்வி முறை. குடும்ப உறவுகளையும், மனித உறவுகளையும் அறுத்தெறிய சொல்கிறதா...? நான் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்.

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான் இக்காலக் கல்விமுறை
பணம் ஈட்டுவதைச் சொல்லித்தரும் அளவுக்கு

மனிதாபிமானத்தைச் சொல்லித்தருவதில்லை..