செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கார்ப்பரேட் நிறுவனங்களில் லாபவெறிக்காக போர் தொடுப்பதா...? - அமெரிக்க மக்களின் எதிர்ப்பு முழக்கங்கள்...!

  சிரியா மீது அமெரிக்கா நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒபாமாவின் போர் முடிவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.             சிரியா நாட்டில் ஆட்சி புரிந்து வரும் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டாண்டுகளாக இவர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், அகதிகளாகவும் அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவினருக்கு எதிரான தாக்குதலில் சிரியா ராணுவம் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஒபாமா தலைமையிலான அமெரிக்கா அரசு முடிவு செய்துள்ளது.
             இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சிரியாவிற்கு ஆதராகவும், அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சிரியா மீதான ராணுவத் தாக்குதல் குறித்த தனது முடிவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், ஒபாமாவின் இம்முடிவிற்கு பெரும்பான்மையான அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்நாட்டில் வாழும் அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளிலும் சிரியா மீது போர் தொடுக்கும் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் போராட்டம் :
           இந்நிலையில், சிரியா மீது போர் தொடுப்பதற்கு எதிராகவும், உலக அமைதியை வலியுறுத்தியும் உலக புகழ்பெற்ற திரைப்பட நகரான ஹாலிவுட்டில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
          இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கும், தலையீடுகளுக்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்கா அரசின் போர் முடிவானது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் விருப்பதற்கு மாறானது என்றும், அமெரிக்கர்களின் எண்ணங்களை ஒபாமா அரசு அலட்சியம் செய்கிறது என்றும் வலியுறுத்தும் வாசகங்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.
            இதேபோல், சர்வதேச வர்த்தக நகரான நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் முன்பு திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் சிரியாவை தாக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு திரண்ட மக்கள் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து அமெரிக்க நடத்தும் மற்றொரு போருக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கான மற்றொரு போரை அனுமதியோம்“ , “சிரியா மீது ராணுவ நடவடிக்கை என்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: