ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அடப்பாவிகளா... பக்தி முத்திப்போச்சினா புத்தி வேலை செய்யாதோ....?

 
         சதுர்த்தியும், அயோத்தியும் பக்தி என்ற பெயரில் இந்துக்களின் புத்தியை சலவை செய்யும் பிற்போக்கு சக்திகளின் ஆயுதம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த இரண்டு ஆயுதங்களும் கூர்த்தீட்டப்படும். வழக்கம் போல் இந்த முறையும் விநாயகசதுர்த்தி இந்து முன்னணியின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதம், மொழி, இனம் இவைகளெல்லாம் இளைஞர்களையும் பெண்களையும் மிக சுலபமாக ஈர்க்கும் பொதை. தேர்தல் அருகில் வரவிருப்பதால், இந்த முறை பெண்கள் இளைஞர்களின் ஈடுபாடு மிக அதிகமாகவே தெரிந்தது. தேர்தல் வருவதையொட்டி இந்து முன்னணியும் பாரதீய ஜனதா கட்சியும் வினாயகசதுர்த்திக்காக இந்த முறை செய்த செலவுகளும் ஏராளம். ரொம்ப தாராளம்.
          வழக்கமாக சிறிய அளவில் களிமண்ணில் செய்து வீட்டுக்கு வீடு வழிபடத்தொடங்கி, காலப்போக்கில் மக்களுக்கு மதவெறியை ஊட்டி ஆட்சிக்கு வருவதற்கு சமீப காலமாக ரசாயனக் கலவைகளால் உயரமான பிள்ளையாரை உருவாக்கி முச்சந்திக்கு முச்சந்தி நிறுத்தி ''மதவாத அரசியல்'' கொண்டாட்டமாக மாற்றிவிட்டார்கள். விநாயகசதுர்த்தி கொண்டாட்டம் என்பது ஒரு வகையான போதையாகவே மாறிவிட்டது.
          இந்த ஆண்டு சதுர்த்தியோ முன்னெப்போதும் இல்லாத திருநாளாக மாற்றப்பட்டிருக்கிறது. இம்முறை பிள்ளையார் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இந்த முறை பிள்ளையாரின் பரிணாம வளர்ச்சி மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு அடுத்த பரிமாணத்தை அடைந்திருக்கிறது. இன்றைக்கு ஆட்சியாளர்களின் தவறான கொள்கையினால் நாடு ரூபாயின் மதிப்பை இழந்து பொருளாதார வீழ்ச்சியில் கரை தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பிள்ளையாரின் வளர்ச்சி எதிர்மறையாய் இருக்கிறது. இதுவரையில் சில ஆயிரங்களை மட்டுமே செலவு செய்து பிள்ளையார் பொம்மையை செய்தவர்கள், இம்முறை பத்து இலட்சம் ரூபாயை செலவு செய்து 20 கிலோ வெள்ளியிலான பிள்ளையார் சிலையை வீதியில் நிறுத்தி அசத்தியிருக்கிறார்கள். அந்த பிள்ளையார் காவலுக்கு போலீஸ் பட்டாளமே இருந்தது.
          அப்படி செய்த பிள்ளையாரை ஏழு நாள் கழித்து என்ன செய்வது என்ற சர்ச்சை வேறு. பிள்ளையாரை படைத்தவர்கள் மூளையை கசக்கியிருக்கிறார்கள். இறுதியில் மண் பிள்ளையார் மற்றும் இரசாயன பிள்ளையார் இவைகளுடன் இந்த வெள்ளிப் பிள்ளையாரையும் கடலில் போடுவது என்று முடிவெடுத்து நேற்று வழக்கம் போல் பிள்ளையார் ஊர்வலத்தில் இந்த வெள்ளிப்பிள்ளையாரும் அணிவகுத்து  கடற்கரைக்கு  வந்தவுடன் படகில் ஏற்றப்பட்டு பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பிள்ளையார் ஆழமான நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டார் என்பது தான் சோகக்கதை. அந்த வெள்ளிப் பிள்ளையாருடன் ''பகுத்தறிவையும்'' சேர்த்துக்  கட்டிப்போட்டுவிட்டார்கள் என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை: