ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கைத் தமிழர்களை பாராட்டுவோம்....!

         
       இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி கடந்த 1988 - ஆம் ஆண்டு தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்,  வடக்கு மாகாணத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இலங்கையைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் 25  ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பது மட்டுமல்ல. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த காலம் என்பதால், ''ஈழப்பிரிவினையை'' முன்வைத்தே தேர்தல் நடைபெறும். பிரிவினைக்கு ஒத்துவராத தமிழர் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதே கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடந்த கால வரலாறாய் இருந்தது. ஆனால் இம்முறை ''ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு'' என்ற முழக்கத்துடன் என்றுமில்லாத அமைதியுடன் நடைபெற்றத் தேர்தல் என்பதால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று சொல்வது மிகையாகாது. அதற்காக ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கை வாழ் தமிழர்களுக்கு நெஞ்ஜார்ந்தப் பாராட்டுகள். 
           அதேப் போல் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தலில் போட்டியிட்டு வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவாரியான இடங்களில் வெற்றிப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அதன் தலைவர்களுக்கும், வடக்கு மாகாணத்தில் அடங்கியுள்ள  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 இடங்களில் வெற்றிவாகை சூடிய புதிய மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். தேர்தலில் வெற்றிப்பெற்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் திருமிகு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம். 
             தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஆளும் ராஜபட்சே அரசும், இராணுவமும் தேர்தலை சீர்குலைக்க பல்வேறு இடையூறுகளை கட்டவிழ்த்து விடுவதாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்தாலும், அதையும் மீறி ''ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வுக்காகவும், அதிகாரப்பகிர்வுக்காகவும்'' அமைதியான முறையில் தேர்தலில் பங்கேற்று வாக்குகளை பதிவு செய்த வாயாரப் பாராட்டவேண்டும். ''எங்களுக்கான அரசு அமைந்து விட்டது. இனி ஒன்றுபட்ட இலங்கையில் எங்களுக்கான ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், உரிமை இவற்றுக்காக எங்கள் அரசு போராடும். பார்த்துக்கொள்ளும். இனிமேலும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு ''டெசோ'' என்ற பெயரிலும், தமிழீழம் என்ற பெயரிலும்  ஓட்டுக்காக அரசியல் செய்துகொண்டு எங்கள் அமைதியை குலைக்கவேண்டாம்'' என்று சொல்லாமல், இங்குள்ள தமிழக ''தமிழினத் தலைவர்களுக்கு '' இலங்கைத் தமிழர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
             இனி இலங்கைத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீதும், இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வைத்து, அனைத்து உரிமைகளையும், அதிகாரங்களையும், வாழ்வாதாரங்களையும் பெற்று, உலகில் தனி சிறப்புமிக்க மனிதர்களாக உயர்வார்கள் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இலங்கை அரசும் தங்கள் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும்  தங்கள் நாட்டின் குடிமக்கள் என்ற அந்தஸ்தையும், நம்பிக்கையையும், ஆட்சி, அதிகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அந்த மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயங்காமல் அளிக்க முன் வரவேண்டும். அப்போது தான் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இலங்கை அரசின் மீது நம்பிக்கையும், மதிப்பும் உயரும் என்பது மட்டுமல்ல, இலங்கை நாடும் உலக அரங்கில் எல்லா துறைகளிலும் உயர்ந்து நிற்கும்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஈழத்தமிழர் பற்றிய புரிதல் இன்றி திரித்து எழுதுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட சுயாட்சி பற்றிய தேர்தல் அறிக்கையை முதலில் படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு காங்கிரஸ் ஞானதேசிகன் போலவோ இந்து ராம் போலவோ வாய்க்கு வந்தபடி உளறாமல் இருங்கள். இனி தமிழக பிளாக்கர்கள் ஈழப்பிரச்சனை பற்றி கன்னாபின்னாவென்று உலரக் கூடாது என்றும் யாரவது வேண்டுகோள் விடுக்கவேண்டும் .

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// ''ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு'' என்ற முழக்கத்துடன் என்றுமில்லாத அமைதியுடன் நடைபெற்றத் தேர்தல் என்பதால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று சொல்வது மிகையாகாது. அதற்காக ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கை வாழ் தமிழர்களுக்கு நெஞ்ஜார்ந்தப் பாராட்டுகள். //

சுருக்கமாகவும் சிறப்பாகவும் அமைந்த கட்டுரை. இலங்கைத் தமிழர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்.

வேகநரி சொன்னது…

மிக சரியான கருத்து.புலிகளின் வன்முறைகள் பிரிவினைகளை நிராகரித்து ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கைத் தமிழர்களை பாராட்டுவோம்.

பெயரில்லா சொன்னது…

//..மிக சரியான கருத்து.புலிகளின் வன்முறைகள் பிரிவினைகளை நிராகரித்து ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கைத் தமிழர்களை பாராட்டுவோம்....//

அப்படியா?

“...சர்வதேசத்துக்கு தலையும் புலியாதரவு diaspora வாலையும் காட்டும் ஒரு சந்தர்பவாத அரசியல்வாதி ரெடி....”
என இன்னொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதியதும் நீங்கதானே?