புதன், 2 அக்டோபர், 2013

திவாலாகிறது டாலர் தேசம் - செயலிழந்து தவிக்கிறது ஒபாமா நிர்வாகம்...!

   
( இது ''மாற்று'' - இணையத்தளத்தில் வெளியான எனது கட்டுரையின் விரிவு....! ) 
          உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது.
          அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 - ஆம் தேதி முடியும். நேற்று அக்டோபர் 1 - ஆம் ஆண்டு புதிய நிதியாண்டின் தொடக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரும் ஆண்டிற்கு எவ்வளவு ''பொதுக்கடனை'' வாங்கலாம் என்பதை தீர்மானித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதிபருக்கு அனுப்புவது என்பது வழக்கம். அதே போன்று அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு ''பொதுக்கடன் தொகை'' உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும் என்ற வழக்கமும் இருந்து வருகிறது.  ஆனால்  வழக்கப்படி கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி இம்முறை  அனுமதிக்கவில்லை. அதனால் அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதன் காரணமாக அந்நாட்டில் மாபெரும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை என்பது அதிபர் ஒபாமாவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான பின்னடைவு என்றே சொல்லவேண்டும். இப்படியாக பொருளாதார பின்னடைவால் ''டாலர் தேசம்'' தத்தளித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் உண்ணிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றன.
              அதென்ன  ''ஒபாமா கேர்''....? நம்ம ஊரு ''கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' போல், ''ஒபாமா கேர்'' என்ற பெயரில் அமெரிக்காவில் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டமாகும். நம்ப நாட்டுல  சோனியா காந்தியின் ''கனவு திட்டம்'' போல, இது அமெரிக்காவுல அதிபர் ஒபாமாவின் ''கனவு திட்டம்'' என்று சொல்லப்படுகிறது. நம்ம ஊரு தலைவர்களைப் போல அரசு திட்டங்களுக்கு தன்னுடைய பெயரையே வைத்துக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளும் மலிவு அரசியல் புத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டுவைக்கவில்லை. இது ஏழை - எளியவர்களுக்கான திட்டம் என்பதால் அப்படிப்பட்ட இந்த சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சியினரான குடியரசுக்கட்சியினர் அதிக எண்ணிக்கையில் உள்ள பிரதிநிதிகள் சபை என்பதால் ஒபாமாவின் இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்  இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது.
              இப்படிப்பட்ட பொருளாதார சீர்கேடுகள் நிறைந்த கடுமையான சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள அரசு நிறுவனங்களை ''தற்காலிகமாக'' மூடிவிடுவதென முடிவெடுத்து வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஒபாமா கெடுபிடியான - அபாயகரமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் அமெரிக்க அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் சுமார் 8லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கும் என்பதையும் ஒபாமா அறிவிக்கவில்லை. நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு மோசமான சூழ்நிலையைப் பற்றி அமெரிக்க மக்களிடமும் கூட ஒபாமா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதே நிலை 15 நாட்களுக்கு மேல் நீடித்தால், 2009 - ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த ''ரெசஷன்'' என்று சொல்லக்கூடிய பொருளாதார வீழ்ச்சி என்பது மீண்டும் பூதாகரமாய் உருவெடுக்கும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அமெரிக்க மக்கள் மேலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பார்கள். வேலையை இழந்த - வருமானத்தை இழந்த குடும்பங்கள் கடுமையான அளவிற்கு பாதிக்கும் என்றும், வியாபாரம் நடைபெறாமல் வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க  பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ''வால் வீதியே'' ஸ்தம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களும் ஒபாமா மீது வெறுப்பும், கோபமும் அடைந்திருக்கிறார்கள்.
             அதுமட்டுமல்ல இதுபோன்று அரசு நிறுவனங்கள் மூடப்படுவது என்பது அமெரிக்காவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு 1995 - 96 நிதியாண்டிலும் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை அமெரிக்கா  சந்தித்து அரசு நிறுவனங்களை மூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அதிலிருந்து 17 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.

3 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

\\அதிலிருந்து 17 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.\\\\'பொருளாதார வல்லரசாக''\\ 17.8 டிரில்லியன் டாலர் கடன் வைத்திருக்கும் தேசம் பொருளாதார வல்லரசா.........!! வல்லரசுக்கு யாராச்சும் விளக்கம் குடுங்கப்பா..........!!

அப்பவும் சரி, இப்பவும் சரி, அண்ணன் அமரிக்காவோட கொள்கை ஒன்னே ஒண்ணுதான், ஊரைச் சுத்தி கடனை வாங்கு மஜா பண்ணு, நாளைக்கு என்ன ஆகும்னு யோசிக்காதே..................

பெயரில்லா சொன்னது…

//...நம்ம ஊரு தலைவர்களைப் போல அரசு திட்டங்களுக்கு தன்னுடைய பெயரையே வைத்துக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளும் மலிவு அரசியல் புத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டுவைக்கவில்லை. ...//

அண்ணை ராம்ஜி,
இந்தச் சட்டத்துக்குப் பெயர் “அஃபோடபில் கேர் அக்ற்” (Affordable care Act) ஒபாமா கேர் என்பது ஒபாமாவை எதிர்க்கும் குடியரசுக் கட்சி வைத்த பெயர். ஒபாமாவை எதிர்ப்போருக்கு உசுப்பேற்ர வைத்த பெயர். அதன் மூலம் எதிர்ப்பை உருவாக்க வைத்த கயமைப்பெயர். இச்சட்டத்தின் சட்டபூர்வ பெயர் Affordable care Acட். சும்மா எல்லாம் தெரிந்த மாதிரி கதை விட வேண்டாம்!

Bharani சொன்னது…

Hi,
I wanted to point out couple of things in your article.
Obamacare was passed by the 'house' on Oct 8, 2009 and 'Senate' approved on Dec 24, 2009. When it was approved the majority in senate was Demograts. Republican went to Supreme court - and Court approved on sometime in June 2012. Obama won the election in late 2012 primarily based on Obamacare. That means general american public wanted the Obamacare. Now the House is filled with more Republicans than demograts after the 2012 election. Republicans want to reevaluate the Act. That is where the issue started. Using the budget period, republicans wanted to delay the Obamacare.
By the way, its not Obama called the act as Obamacare. Republican Mitt Romney was the one started saying Obamacare.
One last thing.. Mitt Romney was the one who originally started the Healthcare exchange concept then it was adopted my Demograts.
Whats happening in US is complete politics..
I do agree the country is struggling with big debt.