ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நினைவுகள் அழிவதில்லை - தியாகிகளின் வீர வரலாறு அழிவதில்லை...!

      
    
          
இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் நான்
           புதுச்சேரி சி.ஐ.டி.யு சார்பில், இயக்குனர் பகத்சிங் கண்ணன் இயக்கத்தில் உருவான ''நினைவுகள் அழிவதில்லை'' திரைப்படத்தை புதுவை ராஜா திரையரங்கில் நேற்றும், இன்றும் காலை 9.30 மணி காட்சியாக திரையிடப்பட்டது.
            குத்துப்பாட்டு, வன்முறை, பலாத்காரம், வெட்டுக்குத்து, டுமில்... டுமில்..., கொலை, இரட்டை அர்த்த வசனங்கள் என அனைத்து மசாலாக்களும் கலந்தப் படங்களை மட்டுமே போட்டிப்போட்டுகொண்டு திரையிடப்படும் இன்றைய சூழ்நிலையில், மேலே சொன்ன எவையும் இல்லாமல் தேசபக்தி, வீரம், தோழமை, அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, கோபமூட்டும் வசனங்கள், விரசமில்லாத காதல் போன்ற சினிமாவிற்கே இல்லாத இலக்கணங்களோடு ''மாற்றத்திற்காக'' மாறுபட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் தமிழக திரையரங்குகள் திரையிடுவதற்கு தயங்கின என்பது வெட்கக்கேடானது.
           இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்திலுள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சங்கம், விவசாயிகள் சங்கம் என பல்வேறு அமைப்புகளும் இணைந்து திரையிட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் நிதியுடனும் நேற்றும், இன்றும் காலை காட்சியில் மட்டும் திரையிட முயற்சி செய்யப்பட்டு, கடினமான ஏற்பாடுகளுக்கு பின் திரையிடப்பட்டது.
          நான், என் மனைவி மற்றும் மகள்கள் மட்டுமல்லாது, எல்.ஐ.சி முகவத்தோழர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், டாக்டர் அம்பேத்கர் பயிற்சி வகுப்பில் படிக்கும் மாணவ- மாணவியர் என 30 பேர் இன்று ஒரே காட்சியில் அந்த திரைப்படத்தை பார்த்தோம் என்பது மறக்க முடியாத இனிமையான நிகழ்ச்சியாகும். இயக்குனர் பகத்சிங் கண்ணன் அவர்களும், அந்த திரைப்படத்தில் நடித்த கலைஞர்களும் தோழர்களோடு தோழர்களாக சேர்ந்து படம் பார்த்தார்கள். அரங்கு நிறைந்த காட்சி என்பது மனதிற்கு நிறைவைத் தந்தது.
         நினைவுகள் அழிவதில்லை - இந்திய விடுதலை என்பது கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி, சத்தமின்றி யாசித்துப்பெற்றதல்ல. மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் கையூர் தியாகிகள் அப்பு, மணி, அபுபக்கர், சங்கர் போன்ற வீர இளைஞர்கள் தூக்குமேடை ஏறி உயிர்த்தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் இது என்பதை உணர்த்தும் திரைப்படம் இது. இந்த தேசத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்ததில் செங்கொடி இயக்கத்திற்கும் மாபெரும் பங்கிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் புரட்சிகரத் திரைப்படம் இது. ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கும், பண்ணையாரின் சுரண்டலுக்கும் அடங்கிப்போன கையூர் மக்களை அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக எழுச்சிபெற்ற வீர வரலாற்றை திரை ஓவியமாக நம் கண் முன்னே நிறுத்திய இயக்குனர் பகத்சிங் கண்ணன் அவர்களை நிச்சயம் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். நாட்டைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சமூக அக்கறையுமில்லாமல் இலாபம் ஒன்றே குறிக்கோளாக திரைப்படம் எடுப்போர் மத்தியில் இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கிய அத்துணை நல்லிதயங்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.
         நம் நாட்டின் மறைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாறுகளும், விடுதலைப் போராட்டத்தலைவர்களும் ஏராளம்...ஏராளம். அப்படி மறைக்கப்பட்ட வரலாற்று வரிசையில் கையூர் தியாகிகள் வரலாறும் ஒன்று. அந்த வீர வரலாற்றுச் செய்திகள் கொஞ்சமும் தொய்வில்லாமல் படமாக்கப்பட்டு காட்டப்படுகிறது. ஆங்காங்கே அனல்தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சிமிக்க பாடல்கள், இயக்கத்தோடு கலந்த காதல், புரட்சிகர இயக்கம் செய்யும் மாற்றங்கள், அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்கள் என பல இடங்களில் தோழர்களின் கைத்தட்டல்களையும், ஆரவாரங்களையும் கேட்க முடிந்தது. ஏராளமான காட்சிகளில் வசனங்கள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அதேப்போல் படத்தில் வரும் பல சம்பவங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படம் அருமை. ஒரு வீர வரலாற்றை தெரிந்து கொண்டோம் என்ற மனநிறைவை ஏற்படுத்தியது. மனம் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மனசுக்குள் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணிவிட்டது இந்தத் திரைப்படம்.
         கல்வி கற்றுக்கொடுக்கும் போதே அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக மாணவர்களை தயார்படுத்தும் பள்ளி ஆசிரியராக இயக்குனர் பகத்சிங் கண்ணனே அருமையாக நடித்திருக்கிறார். ஒரு ஆசிரியர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சரியான இலக்கணம் வாழ்ந்திருக்கிறார் அந்த கையூர் ஆசிரியர். உண்மையிலேயே அந்த ஆசிரியரைப் பார்த்து இன்றைய சமூக அக்கறையில்லாத பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
        உங்கள் ஊரில் இந்த திரைப்படத்தை திரையிட்டால் உங்கள் குடும்பத்துடன், நண்பர்கள்,  உறவினர்களுடன், தோழர்களுடன் கண்டிப்பாகப் பாருங்கள்.   

கருத்துகள் இல்லை: