வியாழன், 24 அக்டோபர், 2013

அனுதாபத்தைத் தேடுகிறார் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி....!

         
                                                                                                                                                                   
         இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் மோடியையும், ராகுல் காந்தியையும் 2014 - ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளர்கள் என்று அவர்களாகவே முடிவுபண்ணி, அந்த இரண்டு பேரையும் உசுப்பேத்திவிட்டதால் அந்த ரெண்டு பெரும் கள்ளு குடிச்ச குரங்குகளைப்போல் செய்யற லொள்ளு இருக்கே தாங்கமுடியலடா சாமி. தினம் தினம் இவர்களைப்பற்றிய செய்திகளைத் தான் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன.   இப்படித்தான் நேற்று இராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்  காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி, மத்தியில் தங்கள் கட்சியின்  தலைமையிலான ஆட்சியில் அதை வெட்டி முறிச்சோம், இதை கிழிச்சோம் என்று சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாமல், மக்கள் மறந்து போன ''பழங்கதைகளை'' எல்லாம் சொல்லி ஒப்பாரி வெச்சிருக்கிறார்.  ''நாட்டுக்காக உயிர் நீத்த என் பாட்டி, தந்தையைப் போல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்'' என்று சோகமாக சொல்லி ராகுல் காந்தி அழுதிருக்கிறார். தொலைக்காட்சி சீரியலை பாக்கிறமாதிரி ஜெனங்கல்லாம் ''ஓவென்று'' அழுதிருக்கிறார்கள்.   காங்கிரஸ் கட்சிக்கு சாதனைகள்  என்று ஒன்றும் சொல்வதற்கில்லை. மக்களுக்கு கொடுத்த வேதனைகள் தான் அதிகம். வேதனையில் தத்தளிக்கும் மக்களை திசைத்திருப்புவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு இப்படிப்பட்ட ''நாடகம்'' தேவைபடுகிறது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையும், அப்பா ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதையும் சொல்லி மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி.
          தனது பாட்டி மற்றும் அப்பாவின் மறைவிற்கு பிறகு, கார்ப்போரேட் கட்சிகளான   காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தவறான மக்கள் விரோத கொள்கைகளின் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக இன்று வரை மூன்றரை இலட்சம் விவசாயிகள் ''தற்கொலை'' செய்துகொண்டார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
          கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த நம் நாட்டில் வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் வெட்டு, விலைவாசி உயர்வு, கடன் தொல்லை என பல்வேறு வேதனைகளுக்கு ஆளான இளைஞர்கள் திருடர்களாகவும், அடியாட்களாகவும், கூலிப்படைகளாகவும், நக்சலைட்டாகவும், தீவிரவாதிகளாகவும் மாறி சீரழிந்துப்போய் திரிகிறார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
        காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தங்களை வாழவைக்கும் கார்ப்போரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும், வருமானவரி விலக்கையும், மானியங்களையும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, ஆனால் தங்களுக்கு மட்டும் நின்னா வரி, உட்காந்தா வரி, நடந்தா வரி, சாப்பிட்டா வரி,  தூங்கினா வரி என்று ஏராளமான வரிகளைப்போட்டு மத்திய அரசே மக்களிடம் ''கொள்ளையடித்தது'' மட்டுமல்லாது, இதுவரை அளித்து வந்த சலுகைகளையும், மானியங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டினார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
              கொள்ளுத்தாத்தா நேரு உருவாக்கிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டையும், பாட்டி இந்திரா காந்தி உருவாக்கிய அரசு வங்கிகளையும், பொதுத்துறை பொதுக்காப்பீட்டையும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து கொன்றீர்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
       இந்த இரண்டு மக்கள் விரோதக் கட்சிகளின் வேதனைமிகுந்த ஆட்சிகளின் ''சாதனைப்பட்டியலை'' அடுக்கிக்கிட்டே போகலாம். கடந்த பல ஆண்டுகளாக இத்தனை வேதனைகளிலும் அல்லல்படும் மக்களை திசைத்திருப்புவதற்கு ராகுல் காந்திக்கு மக்கள் மறந்து போன ''பழங்கதைகள்'' தேவைப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்.    

கருத்துகள் இல்லை: