புதன், 26 ஜூன், 2013

மோடி என்ன சக்திமானா...அல்லது அனுமானா...?






         கடந்த ஒரு வாரக்காலமாகவே  பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வடஇந்தியாவில் வெள்ளம் பாதித்த மலைப்பகுதிகளில் நடைபெறும் மீட்புப்பணிகளைப் பற்றிய செய்திகள் தான் எல்லா பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் மிகுந்த கவலையுடன் சொல்லப்பட்டு வருகின்றன. மீட்க முடியாமல் எஞ்சியுள்ள பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றிய வேதனைகளும்  ஒரு பக்கம் நாட்டு மக்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த பரப்பரப்பான சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான பத்திரிகைகளில் நரேந்திர மோடி செய்த ''மானுட சேவை'' பெருமையுடன் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
        கடந்த ஒரு வாரக்காலமாகவே இமயமலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றுவதில் இந்திய இராணுவப்படையினர்  திக்குமுக்காடி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாராட்டத்தக்க வகையில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் இவ்வளவு வேகமாக மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களே இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்கு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் குஜராத் முதலமைச்சரும், தன்னைத் தானே பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டு பல்வேறு ''ஸ்டண்ட்களை'' கூசாமல் செய்து வருபவருமான நரேந்திர மோடி அதிரடியாக ஹெலிகாப்டரில் பறந்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று, தப்பிப்பிழைக்க துடித்துக்கொண்டிருந்த பல்வேறு மாநில மக்களில் 15000 குஜராத் மாநில மக்களை மட்டும் ''பொறுக்கி'' பார்த்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார் என்பது தான் பெரும்பாலான மோடி ஆதரவு பத்திரிகைகளில் மோடியைப் பற்றி மிகவும் பெருமையாக பேசப்படும் இன்றைய தலைப்புச்செய்தியாகும். இந்த செய்திக்காக  மோடி எவ்வளவு கொடுத்தார் என்பது வேறு விஷயம். இந்திய பிரதமராக ஆகவேண்டும் என்று ஆசைப்படும் மோடி தன் மாநில மக்கள் வெறும் 15000 பேரை மட்டும் காப்பாற்றியதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரையும் அல்லவா காப்பாற்றியிருக்க வேண்டும்.

         என்னாங்கடா டேய்... கேக்கறவன் கேனையனா இருந்தா, எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு கூட சொல்லுவீங்க போலிருக்கே. ஸ்ரீமான் நரேந்திர மோடி என்ன சக்திமானா... அல்லது அனுமானா....?

கருத்துகள் இல்லை: