செவ்வாய், 4 ஜூன், 2013

தலைவரை குஷிப்படுத்திய திமுக தொண்டர்கள்...!
          தங்கள் தலைவரின் மனநிலையை புரிந்துகொண்டு, அவரின் 90 - ஆவது பிறந்தநாளான நேற்று திமுக தொண்டர்கள் பண மாலையையும் பண சால்வையையும் அணிவித்து அழகு பார்த்து தலைவரை குஷிப்படுத்தினர். இவர்கள் புத்திசாலி தொண்டர்கள். ஆனால் அப்பாவிகள். இவர்கள் இத்தனைக்காலமாக தங்கள் சொத்துக்களை இழந்து, நேரங்களை இழந்து, குடும்ப உறவுகளை இழந்து திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உருக்குலையாத ஒரு இரும்புக்கோட்டையை உருவாக்கியவர்கள். தங்கள் இழப்புகளையெல்லாம் மறந்து தங்கள் தலைவனை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள். தங்கள் தலைவனை அரியாசனத்தில் ஏற்றிவிட்ட  ஒன்றும் அறியாசனங்கள் இவர்கள். தங்கள் தலைவன் என்ன தவறுகள் செய்தாலும் அதில் ஏதாவது நியாயம் கற்பிப்பார்களே தவிர தங்கள் தலைவனை விட்டு விலகிச் செல்லமாட்டார்கள்.     
          இவர்களுக்குத் தெரியும் தங்கள் தலைவனை எப்படி மகிழ்விப்பது என்று. அதனால் தான் அவரது பிறந்தநாளுக்கு பண மாலையையும் பண சால்வையையும் அணிவித்து அவரை குஷிப்படுத்தினார்கள். பதிலுக்கு தங்கள் தலைவர் தங்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்போடு இவர்கள் செய்ததல்ல.
         ஆனால், இத்தனைக்காலமாக பல்வேறு இழப்புகளையும், இடையூறுகளையும் தூக்கி எரிந்து விட்டு தன்னையே பின்தொடர்ந்து வரும் இந்த தொண்டர்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யாத இந்த தலைவர் இனி தான் என்ன செய்யப்போகிறார்...? என்ற கேள்வி எழுகிறது. கடந்த 50 - 60 ஆண்டுகளாக இவருக்கு வாக்களித்த திமுக தொண்டன் இன்னும் அதே குடிசையிலும், ஓட்டு  வீட்டிலும் தான் இருக்கிறான். அவன் வாழ்க்கையில் இதுவரை முன்னேற்றமில்லை. தன் தலைவன் ஆட்சிக்காலத்தில் தன் பெண்டு - பிள்ளைகளுக்குக் கூட வேலை வாங்கிக்கொண்டதில்லை, வேலை ''வாங்கும்'' அளவிற்கு பொருளாதார வசதி இல்லாததால். எனக்கு தெரிந்து பல திமுகத் தொண்டர்கள் வீட்டில் சென்ற கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச தொலைகாட்சி பெட்டி தான் அவர்கள் வாங்கிய முதல் தொலைக்காட்சிப் பெட்டியாக இருந்தது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படிப்பட்ட தொண்டர்களுக்கு இவர் என்ன செய்யப்போகிறார்....?
         இவர் இந்த 90-ஆவது வயதிலாவது இத்தனைக் காலமாக தன் குடும்பங்களுக்காக சேர்த்து வைத்திருக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களையும், காத்து வைத்திருக்கும் பல்வேறு கட்சிப்பதவிகளையும் தன்னுடைய விசுவாசமிக்க கட்சித் தொண்டர்களுக்கு அள்ளிக்கொடுக்கட்டும். அது தான் இவரது கட்சிக்கும், இத்தனைக்காலமாக எதையும் எதிர்பாராமல் கட்சியை காத்து நின்ற இவரது கட்சித் தொண்டர்களுக்கும் இவர் செய்யும் நல்ல செயலாக இருக்கும்.
            ''மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்.
             தன் மக்கள் நலம் ஒன்றேத் தான் பார்த்துக் கொள்ளுவார்'' என்ற மறைந்த எம்ஜிஆரின் பாடல் வரிகளை தன்னுடைய 90-ஆவது பிறந்தநாளில் பொய்யாக்கட்டும்.           

கருத்துகள் இல்லை: