திங்கள், 17 ஜூன், 2013

உண்மையிலேயே இது தான் சரியான முடிவு....!

          
எல்லா இடங்களிலும் நானே நிற்பேன் ஒரு இடம் கூட தோழமை கட்சிகளுக்கு விட்டுத் தரமாட்டேன் என்று சொல்லிவந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது முடிவை
மாற்றிக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடும் தோழர். டி. ராஜா அவர்களுக்கு ஆதரவு அளித்திருப்பதுடன், தனது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட 5-ஆவது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தவரை வேட்புமனுவை திரும்பப் பெற செய்திருப்பது என்பது வரவேற்கத்தக்கது.
          சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் ஆட்சியாளர்களை போற்றிப் பாடுவதும், தூற்றி பேசுவதுமான வேலைகளில் ஈடுபடும் சந்தர்ப்பவாத கட்சிகளுக்கு மத்தியில், இன்றைய சூழ்நிலையில் அதிகார  வர்க்கத்தின் எதேச்சதிகார போக்கை தட்டிக் கேட்பதற்கும், மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும் இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தவேண்டியது என்பது அவசியமானதும் அத்தியவசியமானதுமாகும்.
          அதிக எம்.எல்.ஏ - க்களை வைத்திருக்கும் ஆளும்கட்சி என்ற உரிமையில் அதிகப்படியான எண்ணிக்கையில் தாங்களே போட்டியிடுவது என்பது நியாயமாக இருந்தாலும், நாடு போகும் இன்றைய சூழலில் இடதுசாரிகளை தவிர்ப்பது என்பதும், நிராகரிப்பது என்பதும் சரியான சிந்தனையாகாது. அதிலும் குறிப்பாக தோழர். டி.ராஜா மற்றும் தோழர். டி.கே. ரங்கராஜன் போன்றவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அவசியம் தேவையானவர்கள். அதை உணர்ந்து தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர். டி.ராஜா அவர்களை ஆதரிப்பதென்று முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா முடிவெடுத்தது என்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுதற்குரியது.

கருத்துகள் இல்லை: