வெள்ளி, 17 மே, 2013

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...!
             

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI - யை வாழ்த்துவோம்....!

          புதுச்சேரி செஞ்சி சாலை மைதானத்திற்கு எதிரில்  திறந்தவெளி மீன், பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இத்தனைக் காலமாக சம்பந்தப்பட்ட அந்த வியாபாரிகள் மழையிலும், வெயிலிலும் கஷ்டப்பட்டு வியாபாரம் செய்துவந்தனர். எனவே தங்களுக்கு கூரைப் போட்ட மார்க்கெட் வளாகம் ஒன்று தேவை என்று பலமுறை கோரிக்கை வைத்து போராடிவந்ததன் விளைவாக அரசு 6 மாதத்திற்கு முன்பு தான் சில கோடிகளை செலவு செய்து நவீன மார்க்கெட் வளாகம் ஒன்றை புதுச்சேரி நகராட்சி கட்டி முடித்தது.
        அந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்திற்கு மேலாகியும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் மூடப்பட்டே கிடந்தது. அடிக்கின்ற வெயிலில் மீன், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் வெந்து அவதிப்பட்டனர். இதைக் கண்ட புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் அந்த வியாபாரிகள் மத்தியில் ''கையெழுத்து இயக்கம்'' ஒன்றை நடத்தி, புதுச்சேரி நகராட்சி ஆணையரை சந்தித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.      
       பிறகு வாலிபர் சங்கத் தோழர்கள் ''தெருமுனைப் பிரச்சாரம்'' ஒன்றை நடத்தினார்கள். அதற்கும் எந்தவிதமான சலனமும் சலசலப்பும் இல்லை. நகராட்சி ஆணையரை அணுகியபோது திறப்புவிழா நடத்துவதற்கு நிதி இல்லை என்று கைவிரித்திருக்கிறார். யானை வாங்க முடிந்தது. ஆனால் அதற்கு அங்குசம் வாங்க முடியவில்லையாம். அதனால் சென்ற மே 5 - ஆம் தேதியன்று வாலிபர் சங்கத் தோழர்கள் 17 பேர் அந்த புதிய கட்டிடத்தை சுற்றி ''பிச்சை எடுக்கும் போராட்டம்'' நடத்தினார்கள். அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் திறப்புவிழா செலவுக்காக பிச்சை எடுத்தார்கள். இதைக்கண்ட ''சட்டம் - ஒழுங்கை காப்பாற்றத் துடிக்கும்'' புதுச்சேரி போலீஸ் போராட்டம் நடத்திய அந்த 17 தோழர்களையும் கைது செய்தனர். பிச்சை எடுத்த பணமான ரூ 170-ஐ புதுச்சேரி நகராட்சிக்கு DD - ஆக அனுப்பி வைத்தனர்.
                      இந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சென்ற மே 15 - ஆம் தேதி ஒரு வழியாக புதுச்சேரி அரசு அந்த வளாகத்திற்கு திறப்புவிழா நடத்தியது. வியாபாரிகள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டது. இது புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களின் தொடர் முயற்சிகளினாலும், தொடர்ச்சியாக தளராமல் நடத்திய போராட்டங்களும் தான் இந்த வெற்றிக்கு காரணம். இதற்காக போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச செயலாளர் தோழர். சரவணன் உள்ளிட்ட தோழர்களை நெஞ்சார பாராட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: