புதன், 22 மே, 2013

இமயமலையைக் கடந்து ஒரு கைகுலுக்கல்...!

 கட்டுரையாளர் : லீ கேகியாங்                                 
                             சீன மக்கள் குடியரசின் பிரதமர்        
           மக்கள் சீனாவும் இந்தியாவும் கூடி வாழ முடிவெடுத்திருக்கின்றன. ஆசியா உலக அமைதியின் நங்கூர மாக மாறவேண்டுமானால் இவ்விரு நாடுகளும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும். 
           நாம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும், சில விஷயங்கள் மட்டும் எப்போதுமே நிலைத்து நிற்கக்கூடியதாகவும், புத்துயிர் அளிக்கக்கூடியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்திடும். இந்தியாவும் அதேபோன்று ஒரே சமயத்தில் பழமையும், இளமையும் கலந்ததொரு நாடாகும். நான் சீனப் பிரதமரான பிறகு, சீன அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்றிற்குத் தலைமையேற்றுப் பயணம் செய்திடும் முதல் நாடு இந்தியா தான். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆழமான முறையில் நட்புறவையும், கூட்டுறவையும் மேம்படுத்திட சில துல்லியமான பங்களிப்புகளைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையுடனும் மிகுந்த ஆவலுடனும் வந்திருக்கிறேன்.
மனிதகுல நாகரிகத்தின் தூண்கள் : 
         சீனாவும் இந்தியாவும் பல்லாயிரம் காலத்திற்கும் மேலான நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பெற்றுள்ள நாடுகளாகும். மிகவும் பழமையான மனித குல நாகரிகங்களில் சீன நாகரிகமும், இந்திய நாகரிகமும் அடங்கும். அவை இரண்டும் கிழக்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் இரு தூண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. விண்ணைத் தொடும் இமயமலையினால் கூட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பையும், அறிவொளி பரிமாற்றத்தையும் தடுத்திட முடியவில்லை. அறிவிற்கு சிறந்த ஃபாஹீன், யுவான் சுவாங்  ஆகிய இரு சீனத் துறவிகளும், பண்டைக்கால இந்தியாவைச் சேர்ந்த போதி தர்மரும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மதம் மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனைகளுக்குக் கணிசமான அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். நான் மாணவனாக இருந்த காலங்களிலேயே இந்தியா மீது அளப்பரிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். புகழ் பெற்ற ‘‘மகாகவி’’ ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் மிகவும் ஆழ்ந்த தத்துவார்த்த மற்றும் மறக்கமுடியாத பல கவிதை வரிகளும் அவரது காலத்தில் வாழ்ந்த சீன அறிஞர்கள் பலருடன் அவர் கொண்டிருந்த அறிவாழமிக்க நட்புணர்வும் எனக்கு மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நான் பீகிங் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், இந்தியக் கலாச்சாரம் (ஐனேடிடடிபளைவ) பற்றி நன்கறிந்த சீனப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடன் நான் நன்கு அறிமுகமாகி இருந்தேன். அவர் தன் வாழ்நாள் முழுவதையும் புராதன இந்தியக் கலாச்சாரத்தைப் பயில்வதற்கும் போதிப்பதற்குமே செலவழித்தார். அவரது பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் விதத்தில் அவர் இந்திய அரசால், பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உண்மையில், தலைமுறை தலைமுறையாய், நம் இரு கலாச்சாரங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று நிறைய கற்றுக்கொண்டு, பயன்பெற்று தலைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன. நான் முதன்முதலாக இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்தபோது, அதன் இதமான கதிரொளியால், சுடரொளி வீசும் வண்ணங்களால், மிக அற்புதமான கலைகளால், கடினமாகவும் திறமையுடனும் உழைத்திடும் மக்களால், அவர்களுடைய வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் வாழும் வியத்தகு வாழ்க்கை நெறியால் மிகவும் கவரப்பட்டேன்.
         நான் அறிந்தவரை, 21ஆம் நூற்றாண்டின் இந்தியா புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் வளர்ச்சியால் மிகவும் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. ‘‘தெற்கு ஆசியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு’’ என்று அழைக்கப்படும் பெங்களூரு இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப விற்பன்னர்களில்  மூன்றில் ஒரு பங்கினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக மட்டுமல்ல, ஆசியாவின் மென்பொருள் சேவைகளின் மையமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் உற்பத்தித்துறையும்  மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. வர்த்தக ரீதியான வாகனங்களை உற்பத்தி செய்வதில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. டாட்டா குளோபல் பெவரேஜஸ்  நிறுவனம் தேயிலை உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய இரண்டாவது நிறுவனமாக விளங்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர்  ஸ்டீவ் ஜாப்ஸ் யோகாவும், தியானமும் கற்றுக் கொள்வதற்காகவே இந்தியாவிற்குப் பயணம் செய்தார் என்று நான் படித்திருக்கிறேன். இப்போது, சீன இளைஞர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இந்தியாவின் உன்னதமான கலாச்சாரத்தையும், வரலாற்றின் தடங்களையும் ஆராய்ந்து அறிந்து பெருமிதம் கொள்ளும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீனாவும், இந்தியாவும் கூடி வாழ முடிவெடுத்திருக்கின்றன. நவீன காலத்தில் நம்முடைய லட்சியங்கள் முன்னெப்போதையும்விட மிகவும் வலுவாகப் பின்னப்பட்டிருக்கின்றன. நம்முடைய மக்கள் பரஸ்பரம் இரக்கம் கொண்டு, தங்கள் நாடுகளில் அவர்கள் மேற்கொண்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது ஆதரவும் உதவியும் செய்துள்ளது தொடர்பாக மனதைத் தொடும் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அதன் பின்னர், நம் இரு நாடுகளும் இணைந்து சமாதான சகவாழ்வைத் தொடர ஐந்து அம்சங்களைக் கொண்ட பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கின. அது நம் இரு நாடுகளுக்குமே சர்வதேச உறவுகளை முன்னெடுத்துச் செல்ல மிக முக்சியமான அடிப்படை விதிகளாக மாறியுள்ளன. நம் இரு நாடுகளுமே வளர்முக நாடுகளின் உரிமைகளையும் நலன்களையும் உயர்த்திப்பிடித்திட, தெற்குத் தெற்கு ஒத்துழைப்புக்கு இறுதி வடிவம் கொடுத்திட, தோளோடு தோள்நின்று, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
        இன்று, இமயமலையைத் தாண்டி இப்போது மேற்கொள்ளப்படும் கை குலுக்கல் மிகவும் வலிமையானதாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணியிலும், மக்களின் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளிலும், நாட்டை புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலும் இரு நாடுகளுமே ஓர் அமைதியான மற்றும் மன உளைச்சலற்ற அண்டை நாட்டவரைப் பெற்றிருப்பதும், நாடுகளுக்கிடையிலான பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனைப் பேச்சு வார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலமாக தீர்வு கண்டு வெற்றிகாண விழைவதும் அவசியமாகும்.
        ஆசிய நாடுகளில் மிகவும் வலுவாக உள்ள இந்தியா, உலக அளவில் மிகவும் செல்வாக்குடன் காணப்படும் மாபெரும் நாடான இந்தியா, சர்வதேச விவகாரங்களில் அளித்திடும் முக்கியத்துவமான பங்களிப்பு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ) நாடுகளில் ஓர் உறுப்பு நாடாகத் திகழும் இந்தியா, தன்னுடைய ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியுடன், தெற்காசிய நாடுகளின் அமைதிக்கும் வளத்திற்கும் குறிப்பாகவும், ஆசிய பசிபிக் நாடுகளில் பொதுவாகவும், தன் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை ஆற்றி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி கண்டு சீனா மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. இருநாடுகளிலும் அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் சீன - இந்திய ஒத்துழைப்பை உயர்த்திடவும் விரிவுபடுத்திட வும் சீனா எப்போதும் தயாராக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வரலாறு விட்டுச்சென்றுள்ள சில சிக்கலான பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பெரும் நாடுகளாக விளங்கும் நம் இரு நாடுகளின் பொதுவான பண்புகளாகத் திகழும் வளமான வரலாற்று அனுபவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை, நாமிருவரும் நட்புறவுடனும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்திடவும் நம் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு நீண்ட கால அடிப்படையில் தீர்த்துக் கொண்டிடவும் நமக்கு உதவிடும். கடந்த சில ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் இரு தரப்பினரும், தாவாவுக்குரிய எல்லைப் பிரதேசங்களில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவரவும், பிரச்சனைகள் அனைத்தையும் பகுத்தறிவுக்கு ஒத்த முறையில் மிகவும் நேர்மையாகவும், பக்குவமாகவும் பேசிப் படிப்படியாகத் தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்கிறோம். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொதுவான நலன்கள் அவற்றின் வித்தியாசங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்பவைகளாகும். இரு நாடுகளும் ஒன்றையொன்று சந்தேகத்துடன் பாவிப்பதற்குப் பதிலாக, பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என இரு நாடுகளுமே ஒப்புக்கொண்டுள்ளன. நம் முன்னேற்றப்பாதையில் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கும் நாம் இருவருமே நமக்கிடையேயிருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள மதிநுட்பத்தையும் பகுத்தறிவையும் நம்சக்தியையும் நன்கு பயன்படுத்துவோமேயானால், நம்மால் களையமுடியாத தடைகள் என்று எதுவுமே இல்லை என்றே நான் நம்புகிறேன். நம் பிரச்சனைகளை நாம் வெளிப்படைத் தன்மையுடன் எதிர்கொண்டு, ஒருவர்க்கொருவர் உண்மையுடன் பேசினோமேயானால் அவற்றிற்கு முறையான தீர்வுகளை நம்மால் நிச்சயமாகக் காண முடியும்.
இன்றியமையாத ஏழு அம்சங்கள் :
         சீனம் வளர்ந்து கொண்டிருக்கும் மற்றும் அமைதியை விரும்பும் ஒரு மாபெரும் நாடாகும். சீனர்கள் மிகவும் மதிக்கும் மாண்பு என்னவெனில், ‘‘மற்றவர்கள் உனக்குச் செய்யக்கூடாது என்று எதை நீ கருதுகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே’’ என்பதேயாகும். இத்தத்துவம் அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் நட்புடனும் நன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. சீனம் முன்பிருந்ததைவிட நன்கு வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இன்றும் அது ஒரு வளர்முக நாடுதான். ஒருநாள் அது மிகவும் வலுவான நாடாக மாறினாலும்கூட, நிச்சயமாக அது பிறநாடுகளால் தூஷிக்கப்படக்கூடிய மேலாதிக்கப்பாதையை எப்போதுமே மேற்கொள்ளாது. அந்நியர்கள் பலராலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய இழிநடவடிக்கைகள், யுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் காரணமாக நாங்கள் ஏராளமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதே போன்ற துன்பதுயரங்கள் மீண்டும் ஒரு முறை எவருக்கும் ஏற்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நவீனமயத்தை எய்திட சீனா செல்ல வேண்டிய பாதை வெகுதூரத்திலிருக்கிறது. சீனா போன்ற மக்கள்தொகை நிறைந்த மாபெரும் நாட்டினை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு, இன்றியமையாத ஏழு அம்சங்களுக்கு மிகவும் உயர்ந்தபட்ச முன்னுரிமைகள் அளிக்கப்பட வேண்டும். அவை, எரிபொருளுக்கான விறகு, அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சோயா குழம்பு, உணவுக்கு மண மூட்டும் புளிப்புச்சுவை மற் றும் தேயிலை ஆகியவைகளாகும். இந்த ஏழும் நாள்தோறும் வழங்கப்பட வேண்டியது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டியது நம் உடனடிக் கவலைகளாகும். சீன மக்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி, மிகவும் உத்தரவாதத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள், மிகவும் நம்பகமான சமூகப் பாதுகாப்பு, மிகவும் வசதியான குடியிருப்பு வீடுகள், மிகவும் வண்ணமயமான கலாச்சார வாழ்க்கை மற்றும் நிலையான மற்றும் வளமான தேசம் ஆகியவற்றை விரும்புகிறார்கள். இவை அனைத்தையும் எங்கள் மக்களுக்கு வழங்குவது என்பதும் நாட்டை நவீனமயமாக்குவது என்பதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. சுயசார்பு வளர்ச்சிக்கு நாங்கள் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.
          அதற்கு ஓர் அமைதியான சர்வதேச சூழல் அவசியமாகும். நாங்கள் அண்டை நாட்டவர்களுடன் நல்லிணக் கத்துடனும், உலகில் உள்ள அனைவருடனும் நட்புடனும் வாழவேண்டியது அவசியமாகும். சமாதானமுறையிலான வளர்ச்சிப் பாதையேப் பின்பற்றப்படவேண்டும் என்பதே சீன மக்களின் தடுமாற்றமற்ற உறுதியான நிலைப்பாடும், நடவடிக்கையுமாகும்.
தொடரும் சீர்திருத்தங்கள் :
        சீனா தன்னுடைய துரிதமான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களைத் தொடரவும் அதேபோன்று அயல்நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறவும் கடன்பட்டிருக்கிறது. உலகமயம் கோலோச்சக்கூடிய இன்றைய சகாப்தத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் என்பவை ஒன்றையொன்று சார்ந்தே அமைந்திருக்கின்றன. இன்றைய சர்வதேச ஒழுங்கு மற்றும் அமைப்பில் சீனா நன்கு பயனடைந்தே இருக்கிறது. இத்தகைய சீர்திருத்த அமைப்புமுறையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவுடனும் இதர நாடுகளுடனும் ஒத்துழைத்துச் செயல்பட சீனா தயாராகவே இருக்கிறது. சீனா, சர்வ தேசக் கடமைகளைத் தன் நாட்டின் பலத்துடன் முன்னெடுத்துச்செல்லும். உலகோடு ஒட்ட ஒழுகிட திறந்த மனதுடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேபோன்று உலகமும் எங்களை அமைதியான முறையில் திறந்த மனதுடன் அணுகிடும் என்று நம்புகிறோம். சீனாவும் இந்தியாவும் வடிவத்திலும் மக்கள் தொகையிலும் மாபெரும் நாடுகளாகும். இரண்டு நாடுகளிலும் சேர்ந்து, மக்கள்தொகை 2.5 பில்லியனை (250 கோடியை)த் தாண்டிவிட்டது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடாகும். உலகில் மிகவும் முக்கியமான சந்தைகளாக நம் இரு நாடுகளும் கருதப்படுகின்றன. ஆயினும், சென்ற ஆண்டில் நம் இரு நாடுகளின் வர்த்தகம்  70 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவேயாகும். நம் நாட்டின் வலிமை மற்றும் அந்தஸ்துடன் ஒப்பிட் டோமானால் இது போதுமானதல்ல.
          ஆயினும் நாம் நம் வர்த்தகத்தைiயும் வணிக ஒத்துழைப்புகளையும் மிகப் பெரிய அளவில் விரிவாக்கிட, மேம்படுத்திட மிகப் பெரிய அளவில் வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. இருதரப்பிலும் செயல்பட்டு தீர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. உலகப் பொருளாதாரத்தை உந்தித்தள் ளும் உந்துசக்தியாக (என்ஜினாக) ஆசியாவை உலகம் பார்க்கிறது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு வல்லமை நாடுகளின் பங்கேற்பில்லாமல் இது சாத்தியமாகாது. ஆசியா, உலக அமைதியின் நங்கூரமாக மாற வேண்டுமானால், நம் இரு நாடுகளும் கைகோர்த்துச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை நாடுகளான சீனாவும் இந்தியாவும் நல்லிணக்கத்துடன் வாழவும், பொதுவான வளர்ச்சியை எய்திடவும் தவறுமேயானால், மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிய நூற்றாண்டு வந்திடாது. ஆசியாவின் எதிர்காலம் சீனாவும் இந்தியாவும் ஒற்றுமையுடனிருப்பதையே சார்ந்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடனும் வளமாகவும் வாழுமேயானால், நம் இரு நாட்டின் சந்தைகளும் ஒரேபுள்ளியில் குவியுமேயானால், அது ஆசியாவுக்கும் உலகிற்கும் பெரிய அளவில் உண்மையான முறையில் நலம் பயக்கும், சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கான வாய்ப்புகளுக்கு உறுதியளிக்கிறது. அதேபோன்று இந்தியாவின் வளர்ச்சியும் சீனாவுக்கான வாய்ப்புகளுக்கு உறுதி அளிக்கிறது. நம் பொதுவான வளர்ச்சி நம் இருநாட்டு மக்களுக்கும் பயனளித்திடும், உலகிற்கும் அதிகமான அளவில் சிறந்த வாய்ப்புகளை அளித்திடும்.
நன்றி : தி இந்து நாளேட்டில், 2013 மே 20 அன்று வெளியான கட்டுரை
தமிழில்: ச.வீரமணி
நன்றி :

கருத்துகள் இல்லை: