புதன், 8 மே, 2013

மோடி ''வித்தை'' கர்நாடக மாநிலத் தேர்தலில் பலிக்கவில்லை....!


               ஒரு மகா ஊழல் கட்சியை இறக்கிவிட்டு இன்னொரு மகா ஊழல் கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பளித்திருக்கிறார்கள் கர்நாடக மாநில மக்கள். இதற்கு ஏதோ காங்கிரஸ் கட்சியை விரும்பி மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று பொருளில்லை. கடந்த ஐந்து ஆண்டுகால பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் மிகுந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், அந்த காவிக் கட்சிக்குள்ளேயே ஒற்றுமையின்மையால் ஏற்பட கோஷ்டிப்பூசலின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் தான் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான வாக்குகளாக மாறிவிட்டது.
        இது காங்கிரஸ் கட்சியே எதிர்ப்பார்க்காத வெற்றி. மத்தியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு ஊழல்களில் சாதனை புரிந்துவரும் சோனியா - மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மீது நாடு முழுதும் மக்கள் வெறுப்பில் இருக்கும் சூழ்நிலையில் கர்நாடக மாநில மக்கள் மட்டும் பாரதீய ஜனதா கட்சி என்ற ஒரு மகா ஊழல் கட்சியை இறக்கிவிட்டு இன்னொரு மகா ஊழல் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சி செய்ய வாக்களித்தது என்பது வியப்பாகத் தான் இருக்கிறது.
         இதுல எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பல்வேறு ''மோடி'' வித்தைகளையெல்லாம் காட்டிப்பார்த்தது. பிரதமர் பதவியை அடையத் துடிக்கும் மோடிக்கு கர்நாடக மாநிலத் தேர்தல் களம் என்பது ஒரு ''பரிசோதனைக் கூடம்'' என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பரிசோதனை ''புஸ்ஸுன்னு'' போய்விட்டது. மோடியின் இலச்சணம் இவளவு தான் என்பதை இனிமேலாவது பாரதீய ஜனதாக் கட்சி புரிந்துகொள்ளட்டும். இப்படியாக தான் 2014 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் இருக்கும் என்பதையும்  பாரதீய ஜனதாக் கட்சி புரிந்துகொள்ளட்டும்.
          அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும்  2014 - நாடாளுமன்றத்தேர்தலிலும்  மாற்றத்தை விரும்பி மக்கள் தங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்   என்று மனப்பால் குடிக்க வேண்டாம். பாரதீய ஜனதாக் கட்சியின் மீது வெறுப்புக்கொண்டு  அதிருப்தியிலிருந்த கர்நாடக மக்கள் எப்படி பாரதீய ஜனதா கட்சியை தூக்கி எறிந்தார்களோ,  அதேப்போல் நாடு முழுதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் பாரதீய ஜனதாக் கட்சியின் மீதும்  அதிருப்தியில் இருக்கும் மக்கள், இந்த இரண்டு மகா ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிவார்கள் என்பது தான் நாம் பார்க்கப்போகும் உண்மை.

கருத்துகள் இல்லை: