செவ்வாய், 15 ஜனவரி, 2013

இன்று மாட்டுப் பொங்கல் - ஆனால் மாடுகள் இல்லை..!


                                  
            நேற்று பொங்கல் - உழவர் திருநாள் கொண்டாடினோம். ஆனால் உழவர் இல்லை. விவசாயமும் இல்லை. மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் மாடுகள் இல்லை. அழிந்தேப் போய்விட்டன. உங்களுக்கு நினைவிருக்கிறதா...? நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் திருநாள் என்றால் ஒரே சந்தோஷமாக  இருக்கும். இரண்டு - மூன்று நாட்களுக்கு முன்பே நம் நண்பர்களுக்கும், தாத்தா - பாட்டி, சித்தப்பா - பெரியப்பா - மாமாக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை விதவிதமாக வாங்கி அனுப்புவோம். நகர் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமான வாழ்த்து அட்டைக் கடைகள் இருக்கும். சிறுவர்கள் - பெரியவர்கள் என கூட்டம் அலைமோதும். அதேப்போல் கூட்டங்களை அஞ்சல் நிலையங்களில் பார்க்கலாம். அஞ்சல் நிலையங்களில் ஏராளமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் மலை போல் குவிந்திருக்கும். தபால்காரர் வீடுவீடாக ஏறியேறி பட்டுவாடா செய்வாரு. அந்த சமயங்களில் நம் வீட்டுக்கும் தபால்காரர் வருவாரா என்று நாம் வீட்டு வாசலில் நின்று கொண்டு காத்துகிட்டு இருப்போம். பொங்கல் முடிந்தப் பிறகும் வாழ்த்து அட்டை நமக்கு வந்துகிட்டே இருக்கும். இதெல்லாம் நமக்கான சுகமான அனுபவங்கள்.
          இன்றைக்கு இருக்கிறதா இது போன்ற அனுபவங்கள்...? வாழ்த்துஅட்டைகள் இல்லை. தபால் நிலையங்கள் இல்லை. தபால்காரரை பார்க்கமுடியவில்லை. அந்த சந்தோஷமான நேரங்களை எல்லாம் நாம் இழந்துவிட்டோம். அவைகளெல்லாம் உலகமயம் - தாராளமயத்தினால் அழிந்தே போய்விட்டன. அந்த மகிழ்ச்சியான தருணங்களை எங்கே தேடுவது...?   
           அதேப்  போல் தான் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் மாடுகளை பார்க்கமுடியவில்லை. முன்பெல்லாம் நாம் வாழும்  பகுதிகளிலேயே அக்கம் பக்கத்தில் ஆங்காங்கே மாடுகள் இருக்கும். மாட்டுப்பொங்கல் என்றால் அன்றைக்கு மாடுகளையும்,  கன்றுக்குட்டுகளையும்,  குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மஞ்சள் - குங்குமம் வைத்து, மாலை போட்டு வீதிகளில் விரட்டிச் செல்வார்கள். அதேப்போல் எருதுகளையும் வண்டிகளில் பூட்டி, சிறார்களை உட்கார வைத்துக் கொண்டு வீதிகளில் எருதுகளை விரட்டி ஓட்டிச் செல்வார்கள். இன்று இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. ஏனென்றால் மாடுகளே இங்கில்லை. அழிந்து போய்விட்டன.
         இன்று மாடுகள் அழிந்ததனால் கொண்டாட்டங்களை மட்டும் நாம் இழக்கவில்லை. நிம்மதியையும் வருமானத்தையும் நாம் இழந்திரூக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று நம் பகுதிகளைச் சுற்றி மாடுகள் இல்லாததால் தான் புதிய புதிய வியாதிகள் நம்மை துரத்துகின்றன. மாடுகளின் நடமாட்டம் இருந்த போது அவைகள் போடுகின்ற சாணமும், கோமியமும் கிருமி நாசிநியாக செயல்பட்டு நோய் கிருமிகள் நம்மை நெருங்காதவாறு நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்தன. இன்றைக்கு சாணமும், கோமியமும் கிடைக்காததால், புதிய புதிய நோய்கிருமிகள் நம் நிம்மதியை இழக்கச் செய்கின்றன.
         நம் நாட்டில் மாடுகளை அழித்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நம் நாட்டில் முன்னூறு - நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை விவசாயம் தான் முக்கியத் தொழிலாக இருந்தது. இராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் நுழைந்த போது தான் இந்திய மாடுகளுக்கு சோதனை காலமாக மாறியது. இராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் நுழைந்து நாட்டை சுற்றிப்பார்த்த போது, அவன்  அதிசயித்து போனது நம் நாட்டின் விவசாயத்தைப் பார்த்து தான். நம் நாட்டில் வளம் கொழிக்கும் விவசாயமாக இருந்தது. அதற்கு காரணம் அன்றைக்கு நம் நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வளர்க்கப்பட்ட மாடுகள் தான் என்பது வரலாறு. அன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் பசு மற்றும் எருது என நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
             மாடுகளின் கழிவுகளான சாணமும், கோமியமும் விவசாய வளத்திற்கு மிகவும் உதவி செய்தன. மாட்டின் சாணம் பயிர்களுக்கு எருவாகவும், கோமியம் பூச்சிக்கொல்லியாகவும் பயன்பட்டன. அதுமட்டுமல்லாமல், எருதுகள் ஏர் உழவும், போரடிக்கவும் பயன்பட்டன. அதேப்போல் அறுவடை முடிந்து நெல்மணிகள் போக விஞ்சியிருக்கும் வைக்கோல் விவசாயத்திற்கு உதவி செய்த அதே மாடுகளுக்கு வைக்கோலாக பயன்படுத்தப்பட்டன. வைக்கோலை வளமையாக உண்டு, பசுக்களும் மக்களுக்கு செழுமையாக பாலை வழங்கின. இப்படித்தான் மக்கள் - விவசாயம் -   மாடுகள் - மாட்டின் உழைப்பு - மாடுகளின் கழிவு -  விவசாயம் - உணவு - வைக்கோல் - பால் - என ஒரு சுழற்சியாக நாட்டிலுள்ள மக்களும், விவசாயிகளும், மாடுகளும் ஒன்றோடொன்று சார்ந்து இருந்தார்கள். அப்போதைய காலத்தில் மக்களும் விவசாயமும் மாட்டை நம்பித்தான் இருந்தார்கள். விவசாயத்தை அழித்து மக்களை தன்  கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால், மாடுகளை அழிக்கவேண்டுமென்று ''மதிகெட்ட ஆங்கிலேயன்'' இராபர்ட் கிளைவிற்கு தோன்றியது. எனவே இந்திய மாடுகளை அழிக்க தயங்காமல் முடிவெடுத்தான். அந்த கொடுங்கோலன் இராபர்ட் கிளைவ் ஒரு ஆண்டில் மட்டும் பசு - எருது என ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகளை கொன்று குவித்தான். அன்றைய காலக்கட்டத்திலிருந்து தான் இன்றுவரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற மிச்சமீதி மாடுகளையும் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் உலகமயம் - தாராளமயம் என்ற பெயரில் அழித்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் எதார்த்தம். அதனால் தான் இன்று நாம் மாடுகளை இழந்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கின்றோம்.
            இன்று பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாளில் விவசாயத்தை இழந்தோம்... விவசாயிகளை இழந்தோம்... மாடுகளை இழந்தோம்... வாழ்த்து அட்டைகளை இழந்தோம்...
தபால் நிலையத்தை இழந்தோம்... தபால்காரரை இழந்தோம்... உறவுகளை இழந்தோம்... சந்தோஷங்களை இழந்தோம்....
            நாளை மீதமிருக்கும் பொங்கல் பானைகளையும், பச்சரிசி - வெல்லத்தையும், கரும்பையும் இழக்கப்போகிறோம். இனி பொங்கல் பண்டிகையை தொலைக்காட்சியிலும், பேஸ் புக்கிலும் மட்டுமே பார்க்கமுடியும். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.

கருத்துகள் இல்லை: