ஞாயிறு, 20 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் ''மூளைச் சலவை'' கூட்டம் - மக்களிடையே எடுபடாது...!


       கடுமையான விலைவாசி உயர்வால் வாடிக்கிடக்கும் இந்திய நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒரு பக்கம். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நேரத்தில் எப்படி சந்திப்பது என்று புரியாமல் சோர்ந்துப் போயிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இன்னொரு பக்கம். தேர்தலுக்கோ இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், தேர்தலை எப்படி சந்திப்பது என்பதை விட மக்களை எப்படி சந்திப்பது என்ற பயம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் ஜெய்ப்பூரில் கடந்த நான்கு நாட்களாக ''சிந்தனை அமர்வு'' என்ற பெயரில் ஒரு ''மூளைச் சலவை''  கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது
              கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை எப்படி மீட்பது...? எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமையிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது...? நிலம், வேலைவாய்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எப்படி இருக்கவேண்டும்...? கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்துவது எப்படி...? போன்றவைகளைப் பற்றியெல்லாம்  ''சிந்தனை'' செய்வதற்காக - விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் இது அதற்கான கூட்டமே அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் எப்படிப்பட்ட ''வேஷங்களையும், கோஷங்களையும்'' போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் இந்த கூட்டத்தின் முதல் ''செயல் திட்டமாக'' இருந்தது.
             தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் இழப்பு, உயராத வருமானம், உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி, சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்ட கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு உரிமை பறிப்பு, சில்லறை வர்த்தகத்தில் அன்னியர் நுழைவு, எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் போன்றவைகள் தான் ''பொருளாதார மேதை'' மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகால சாதனையாகும். இதை யாரும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. இவைகளை மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் காரணமான இந்திய பிரதமராக வேலையிலிருந்து கொண்டு அமெரிக்க எகாதிப்பத்தியத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கும் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நாட்டிற்கெதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தி மீதும் மக்கள் மிகுந்த கோபத்தோடும் எரிச்சலோடும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மக்களை நாடியை புரிந்துகொண்ட தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மக்களை  சந்திக்கப் போகும் போது தங்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்ற பயத்தில், மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு ''மாயஜால வித்தை'' உடனடியாக தேவைப்பட்டது. அந்த மாயஜால வித்தைக்கான ''மந்திரக்கோல்'' தான் இந்த ''யுவராஜ்''  ராகுல் காந்தி என்பதையும் மக்கள் எந்த வித மயக்கமுமில்லாமல், சலனமும் இல்லாமல் புரிந்துகொள்ளவேண்டும்.
          அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு எரிச்சலூட்டும் மன்மோகன் சிங்கின் முகமூடியை கழட்டிவிட்டு, இப்போது யுவராஜ் ராகுலின் முகமூடியை போட்டிருக்கிறார்கள். இந்த முடிவு என்பது கட்சித் தொண்டர்களை எல்லாம் கலந்தாலோசித்து ஜனநாயக முறைப்படி எடுத்த முடிவல்ல. ஒரு சில மேல்மட்ட கட்சித்தலைவர்கள் மட்டுமே முன்மொழித்து திணிக்கப்பட்ட ''கருத்துத்திணிப்பு''  என்பதையும், அதற்கான ''மூளைச் சலவை'' கூட்டமே இந்த கூட்டம் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
           இது முகமூடி மாற்றமே தவிர அரசியல் மாற்றமோ - கொள்கை மாற்றமோ அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது புதிய மொந்தையில் பழைய கள் தான்.   இந்த பழையக் கள்ளுக்கு மயங்கி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்தால், மிச்ச மீதி உரிமைகளும் பறிக்கப்படும். நாம் இனிமேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைவரும். நம் நாடும், நாட்டின் செல்வங்களும் நம் கையைவிட்டு போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
           நாமிருக்கும் நாடு நமதென்பதை அறிவோம்... நமக்கே உரிமையாம் என்பதறிவோம்... நமக்கான ஆட்சியை பற்றி சிந்திப்போம்... நமக்காக போராடுபவர்களை அடையாளம் காண்போம்... அவர்களுக்கே வாக்களிப்போம்... தேர்ந்தெடுப்போம்... 

கருத்துகள் இல்லை: