வெள்ளி, 11 ஜனவரி, 2013

உங்கள் பணம் உங்கள் கையில் - வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம்...!


             இதுவரையில் நம் நாட்டில் முதியோர் உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை போன்ற அரசின் நல உதவித் திட்டங்கள் மட்டுமே ''பணமாக'' மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அதே சமயத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், எரிவாயு, பெட்ரோல், டீசல், உரம் போன்ற அன்றாட தேவைகளான இத்தனை அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் அந்தந்த பொருட்களாகவே ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இந்த முறையை சீர்படுத்தி, மேலும் பல்வேறு உணவு பொருட்களை இணைத்து மானிய விலையில் மக்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக, இதுவரையில் ரேஷன் கடைகளில்  மானிய விலைகளில் கொடுக்கப்பட்டு வந்த இத்தனைப் பொருட்களின் விநியோகத்தையும்  நிறுத்தி ரேஷன் கடைகளையெல்லாம் மூடிவிட்டு அந்த பொருட்களுக்கு இதுவரையில் மறைமுகமாக கொடுக்கப்பட்ட மானியத் தொகையினை மக்களுக்கு நேரடியாக பணமாக கையில கொடுக்கப்போராங்கலாம். இதற்கு ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்று கவர்ச்சிகரமான பெயர் வைத்திருக்கிறார்கள். இது மக்களை மயக்கும் ஏமாற்று வித்தை.  பொறியில் வடை வைத்து எலிகளை பிடிப்பது போல், ஓட்டுகளை பொறுக்குவதற்கு 2014 தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி இவ்வாறு செயல்படுகிறது. 
          ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை நிறுத்துவது என்பதும், ரேஷன் கடைகளை மூடுவது என்பதும் ''உணவு உரிமைக்கு'' எதிரானது. மக்களுக்கு உணவு அளிக்க வேண்டியது என்பதும், உணவு பாதுகாப்பு என்பதும்  மத்திய அரசின் தலையாய கடமையாகும். இது மனித உரிமையோடு சம்பந்தப்பட்டது. அப்படியென்றால் உணவுப் பொருட்களை வழங்காமல் பணமாக கொடுப்பது என்பது மனித உரிமைக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது 1948 - ஆம் ஆண்டில் உணவு உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று பிரகடணம்  செய்த  ஐநா சபைக்கு எதிரானது.
         அது மட்டுமல்லாது மானியம் என்பது உணவுப் பொருட்களாக கொடுக்காமல் பணமாக கொடுக்கப்பட்டால், குடும்பத்தலைவர் அந்த பணத்தை தன் குடும்பத்திற்கான  உணவு பொருட்களை தான் வாங்குவார் என்பது என்ன நிச்சயம்...? ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் மதுக்கடைகளையும், ''பார்''களையும்  திறந்துவிட்டு, இன்னொரு பக்கம் குடும்பத்தலைவரிடம் உணவுப் பொருட்களுக்கு பதில் பணத்துக் கொடுத்துவிட்டு, அவர் உணவுப் பொருட்களைத் தான் வாங்குவார் என்று அரசு எப்படி எதிர்பார்க்கிறது...?  இது அரசுக்கு மக்கள் மீது இருக்கும்  போலியான அக்கறையை அல்லவா காட்டுகிறது...? இதனால் பட்டினிச் சாவு  மேலும் அதிகரிக்கும் என்பது ஆட்சியாளருக்கு தெரியாதா...?
      அப்படியென்றால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நோக்கம் என்ன...?  எப்படியோ மக்கள் கையில் காசைக் கொடுத்தா 2014 - லில் தங்கள் கையில் ஒட்டுக் கிடைக்கும் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்பது மட்டும் நமக்கு புரிகிறது. காசைக் கொடுத்தா மக்கள் பல்லை இளித்துக் கொண்டே தங்களுக்கே ஓட்டைப் போட்டுவிடுவார்கள் என்று நினைப்பில்,  மன்மோகன் சிங் - ப. சிதம்பரம் கூட்டாளிகள்  அரசாங்கத்தின் நிதியையே - மக்களின் பணத்தையே வாக்காளர்களுக்கு  இலஞ்சமாக கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது...?  காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்கிறது.  தலைமை தேர்தல் ஆணையரும், மற்ற இரு ஆணையர்களும் இதை எப்படி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...?
        இப்போதும் நேரம் கடந்துவிடவில்லை. சென்ற புத்தாண்டு தினத்தன்று தான் முதலில் இருபது மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை மேலும் நாடு முழுதும் மத்திய அரசாங்கம் கொண்டுசெல்வதற்கு முன், தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை மத்திய அரசே  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் கோரிக்கை எழுந்ததே தவிர, இது போல் ஓட்டுக்கு ''இலஞ்சம்'' கொடுப்பதை மத்திய அரசே செய்வது என்பதும், காங்கிரஸ் கட்சி இது போல் இலஞ்சம்  கொடுத்து  தேர்தல் மோசடி செய்யத் துணிந்திருப்பது என்பதும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

கருத்துகள் இல்லை: