சனி, 3 நவம்பர், 2012

கொள்ளைக்குத் துணைபோகும் கொள்கை...!

        "கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அல்ல - கடந்த 15-20 ஆண்டுகளாகவே அமலாக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையினால் மக்களுக்குப் பலன் கிடைக்கும், நாடு வல்லரசாக மாறும்'' என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். நிதியமைச்சரின் கூற்று உண்மைக்கு மூடுதிரை போடுவதாக உள்ளது.
        1991-ஆம் ஆண்டு துவங்கி மத்திய அரசு அமலாக்கிவரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கிடுவதற்கே வழி வகுத்துள்ளது.
       ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இமாலய இடைவெளியை உருவாக்கியுள்ளது. மேலும், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இக்காலத்தில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்தேறி வருகின்றன.
            இரண்டாண்டுகளுக்கு முன்புவரை விவசாயம், தொழில், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு 7-8 சதவிகிதம் வரை அதிகரித்தது. இந்த வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, நாடு வல்லரசாகப் போகிறது என மார்தட்டிக் கொண்டார்கள். மொத்த உற்பத்தி அதிகரித்து வந்த இதே காலத்தில்தான் வறுமையில் வாடுவோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்பதை புறம்தள்ளக் கூடாது.
         தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி 1993-1994-ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் 59 சதவிகிதமாக இருந்த வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 2009-2010-இல் 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
          நகர்ப்புறங்களில் வறுமையில் வாடுவோர் 1993-1994-இல் 57 சதவிகிதமாக இருந்தது.  2009-2010-இல் 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 2,100 கலோரி சத்துள்ள உணவும், கிராமப்புறங்களில் 2,200 கலோரி சத்துள்ள உணவும் கிடைக்காதவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. (இதற்கு முன்பு 2,400 கலோரி என்று இருந்ததை 2,200 கலோரி ஆக அரசு குறைத்திருக்கிறது)  வளர்ச்சி 8 சதவிகிதத்தை எட்டினாலும், அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்காதது மட்டுமல்ல, வளர்ச்சியின் பலன் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் கிடைத்துள்ளது என்பதே உண்மை.
             கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பெரிய வர்த்தக நிறுவனங்களின் சொத்து மதிப்பு வேகமாக பலமடங்கு உயர்ந்துள்ளது. 2003-இல் "டாலர் பில்லியனர்'களின் எண்ணிக்கை (ஒரு பில்லியன் டாலர் உத்தேச மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி) 13 ஆக இருந்ததிலிருந்து 2011-ல் 55 ஆக உயர்ந்துள்ளது.
           அரசின் கொள்கையும், இவர்களுக்கு அரசு அளித்த சலுகையும், இன்றைய பொருளாதார அமைப்பு முறையும்தான் டாலர் பில்லியனர்களின் சொத்து பலமடங்கு அதிகரிக்க வழி வகுத்துள்ளது.
           மேலும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்ட காலத்தில் ஆளும் அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள், கூட்டுக் கொள்ளையும் இத்தகைய போக்குக்குத் துணையாக இருந்துள்ளது.
             வறுமை ஒருபக்கமும், செழிப்பு மறுபக்கமும் உருவாவதற்கு இன்னொரு காரணம் தொழில் துறையில் நிகர மதிப்பு கூட்டலில் 1980-களில் ஊதியத்தின் பங்கு 30 சதவிகிதமாக இருந்தது 2010-இல் 10 சதவிகித அளவுக்குக் குறைந்து விட்டது.
             முறைசார் அல்லது நிரந்தரத்தன்மையுள்ள துறையில் வேலைவாய்ப்பு 1998-இல் 2.82 கோடியாக இருந்தது. 2008-இல் 2.75 கோடியாகக் குறைந்துள்ளது. நிரந்தரத்தன்மையுள்ள வேலைவாய்ப்பு குறைந்து, உத்தரவாதமும், சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாராத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நவீன தாராளமயப் பொருளாதார கொள்கையின் விளைவேயாகும்.
                   நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கையில் (45.6 கோடி) 86 சதவிகிதம் (39.3கோடி) முறைசாராத் தொழிலாளர்கள் தான். குழந்தைகள், முதியோர் ஆகிய பிரிவைத் தவிர்த்து மற்ற பகுதியினரில் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கை 45.6 கோடி. மேற்கண்ட முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கடந்த 20 ஆண்டுகளில் உயரவில்லை. மாறாக, சரிந்துள்ளது.
               நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய இக்காலத்தில், அரசு திட்டமிட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் மூலதனம் சேர்க்க, தங்கள் சொத்தைப் பெருக்கிக்கொள்ள சலுகை அளித்து வருகிறது.
         உண்மையில், சில அம்சங்களில் சலுகையல்ல - முறைகேடுகள் மூலமாக - மூலதனம் ஈட்ட முதலாளிகளுக்கு அரசு தன்னுடைய தவறான கொள்கை மூலம் துணை போயுள்ளது. இது நாட்டினுடைய இயற்கை வளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்கவே வழி வகுத்துள்ளது.
             "2ஜி'' அலைக்கற்றை ஊழலில், 1,76,000 கோடி ரூபாயும், நிலக்கரி ஒதுக்கீட்டில் 1,86,000 கோடி ரூபாயும், கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாதுவை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்ததன் மூலம் ரூ.50,000 கோடியும், தமிழகத்தில் உரிய அனுமதியின்றித் தனியார் கிரானைட் வெட்டி எடுத்து விற்பனை செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாயும் என இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதிப்பதும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியே.
            ரிலையன்சுக்குச் சொந்தமான "சாசன் அல்ட்ரா' மெகா மின் திட்டத்துக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் மட்டும் அரசுக்கு ரூ.29,033 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.  
           ப.சிதம்பரம் நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அரசுக்கு "வோடாபோன்' நிறுவனம் செலுத்த வேண்டிய வரி ரூ.12,000 கோடியை வசூலிக்கத் தேவை இல்லை என அறிவித்துவிட்டார். (இத்தொகையை வசூலிக்க ஏற்கெனவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது).
              தில்லி சர்வதேச விமான நிலையக் கட்டுமானத்திற்கு ஜி.எம்.ஆர். என்ற தனியார்  நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது. விமான நிலையத்திற்கான மொத்த நிலத்தில் பெரும் பகுதியை ஜி.எம்.ஆர். கம்பெனிக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.100-க்கு குத்தகைக்கு விட்டது. ஆனால், ஜி.எம்.ஆர். கம்பெனி, "வளர்ச்சிக் கட்டணம்' என்ற பெயரில் பயணிகளிடமிருந்து ரூ.3,415 கோடி அளவுக்குச் சட்டவிரோதமாக வசூலித்துள்ளது!
          கிருஷ்ணா - கோதாவரி நதிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதை ரிலையன்ஸ் கம்பெனிக்கு அளித்ததையே மார்க்சிட் கட்சி ஆட்சேபித்தது. தான் உற்பத்தி செய்கிற எரிவாயுவுக்கு மிக அதிகமாக செலவாகிறது என்று கணக்கை மிகைப்படுத்திக் காட்டி, மிக அதிகபட்சமான விலையை நிர்ணயிக்க வேண்டுமென அரசை நிர்பந்தித்து, திட்டமிட்டு ஒரு விலை உயர்வை ஏற்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் அடித்தது.
        இதன் விளைவாக மின்சாரம் மற்றும் உர விலை அதிகரித்தது போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள்.
             மீண்டும் விலையை உயர்த்திட அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பல வகைகளில் நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ரிலையன்ஸ் கம்பெனி நிர்பந்தத்தை ஏற்று எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது என 2012 மே மாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார்.
            விலையை உயர்த்த வேண்டும் என்று ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்த பின்னரும்கூட ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகத்திற்குப் பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது!
             2014 ஏப்ரல் வரையில் விலை உயர்வு இல்லை என்று ஏற்கெனவே அரசுக்கும் ரிலையன்ஸ்  கம்பெனிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு முரணாக விலையை உயர்த்த முடியாது என பெட்ரோலியத்துறை அமைச்சராக இதற்கு முன் பதவி வகித்த ஜெய்பால் ரெட்டி கூறியிருக்கிறார்.
              ரிலையன்ஸ்  கம்பெனியின் விலை உயர்வு கோரிக்கையை நிராகரித்த ஜெய்பால் ரெட்டியை மாற்றிவிட்டு வீரப்ப மொய்லியைப் பெட்ரோலியத்துறை அமைச்சராகக் கொண்டு வந்ததே ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகத்தான் என பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
         மத்திய அமைச்சரவை உருவாக்கத்தில் பெரு முதலாளிகளின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்னர் வெளியான "நீரா ராடியா டேப்' உரையாடல் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
               இயற்கை வளங்களை அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் "கொள்ளை அடிக்க' அனுமதிப்பதையே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு "கொள்கை'யாகக் கொண்டு உள்ளது.
           இத்தகைய கொள்கையைத்தான், "கொஞ்சம் கொஞ்சமாக ஏழை,எளிய மக்களின் வறுமையைப் போக்கும்' என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார். இவர்களுடைய பார்வையில் அம்பானிபோன்ற பெரு முதலாளிகள் தான் "பரம ஏழைகள்'' போலும்.
 ரிலையனஸ் - க்கு சலுகை வழங்கத் துடிக்கும் இவர்கள்தான், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தின் விலைகளையும் ஏற்றி இந்திய மக்களின் தலையில் மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள்.
            "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ''  என்று அன்று நாடு அடிமைப்பட்டிருந்தபோது மகாகவி பாரதி கண்டனக் குரல் எழுப்பினார். இன்று நாடு சுதந்திரம்பெற்ற பிறகும், நாட்டின் சொத்துகள் - கொள்கை என்ற பெயரில் - கொள்ளையடிக்கப்படும்போது பாரதியின் முழக்கத்தை மீண்டும் எழுப்பவேண்டிய தேவை உள்ளது.

நன்றி :
தினமணி / 03.11.2012

கருத்துகள் இல்லை: