திங்கள், 19 நவம்பர், 2012

இப்படியும் ஒரு நாட்டு அதிபர் இந்த உலகத்துல இருக்கிறார்.. ..!





             பொதுவாகவே நம்ப ஊருல எல்லாம் கவுன்சிலரா ஆகிட்டாலேயே நம்ப அண்ணாத்தைங்க போடுற ஆட்டத்தை நாம்மால பார்க்கவே சகிக்காது. வெள்ளை வெளேருன்னு பேண்ட்  சட்டைய போட்டுகினு. கருப்புக்கண்ணாடிய  மாட்டிகினு. கையில பிரேஸ்லெட்டும் மோதிரமுமா திரிந்துகிட்டு. செல்போன காதுல வெச்சிகிட்டு இங்கேயும் அங்கேயும் அலைஞ்சிகிட்டு. விலை உயர்ந்த காருல தான் சுத்தி சுத்தி வந்துகிட்டு இருப்பாங்க. கவுன்சிலருக்கே இவ்வளவு பந்தான்னா.... எம். எல். ஏ. - எம். பி.-ன்னா இன்னும் சொல்லவே வேண்டாம். பிரதமர், மத்திய அமைச்சர், முதலமைச்சர், மாநில அமைச்சர், கவர்னர் - இப்படி ஏதாவது என்றால் அதையும் சொல்லவே வேண்டாம். ஒரே பந்தா தான்.
         இப்படியெல்லாம் நம் நாட்டு அரசியல்வாதிகளை பார்த்து பழகிவிட்ட நமக்கு, இப்படியெல்லாம் ஒரு பந்தாவும் இல்லாமல், ஒரு சாதாரண கிராமத்தானைப் போல் ரொம்ப ரொம்ப சிம்பலான ஒரு அதிபரை பார்க்கும் போது நமக்கெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உலகமய - தாராளமய தாக்குதல்களுக்கு பிறகு வெகுண்டெழுந்த இலத்தின் அமெரிக்க மக்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவ ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, தங்கள் இடதுசாரிகளே பொருத்தமானவர்கள் என்கிற மனமாற்றத்திற்கு வந்ததின் காரணமாக, வெனிசுலா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, பொலிவியா, உருகுவே - என நீண்டு கொண்டே போகிறது. இவைகள் எல்லாவற்றிற்கும் கியூபா தான் வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் விளங்குகிறது.
             இப்படியாக இடதுசாரி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெற்றிநடைபோடும் நாடுகளில் ஒன்றான உருகுவே நாட்டில் கடந்த  2009  - ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில்   இடதுசாரி தலைவர்  ஹோஸே முயீகா வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 - களில் ''கியூபா புரட்சி'' நடைபெற்ற போது தாமும் இடதுசாரியாகி 14 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். அதனால் தான்  ஆட்சி செய்யும் போதும் இப்போதும் இந்த கம்யூனிச சிந்தனை என்பது இவர் கூடவே வந்திருக்கிறது.
            ஹோஸே முயீகா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று,  இவர் அதிரடியாக அறிவித்த முதல் விஷயம் என்ன தெரியுமா...? ''அதிபருக்கான வழக்கமான மாளிகையே எனக்கு வேண்டாம்'' என்ற அவரது அறிவிப்பு தான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. மாளிகையே வேண்டாமென்று பிறகு என்னகே போனார்...? மாளிகையை மட்டுமல்ல.. ஆள், அம்பு, சேனை, சங்கு ஊதிக்கொண்டே சிகப்பு விளக்கு சுழலும் கார் - என எந்த ஒரு பட்டாளத்தையும் அவர் தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை.
                   உருகுவே நாட்டு அதிபராகிவிட்ட பிறகு அவர் வாழ்ந்த இடம் எங்கே தெரியுமா...? கோரைப் புற்கள் களைகட்டி வளர்ந்திருக்க புதர் நிறைந்த பூமி, நட்ட நடுவே ஒரு தகரக் கொட்டகை,  காயம்பட்டு நொண்டிச் செல்லும்  ஒரு நாய்,  வீட்டுக்கு வெளியே காயப் போட்டிருக்கும் துணிமணிகள் -  இங்கு தான் உருகுவே நாட்டு அதிபர் முயீகா வாழ்ந்து வருகிறார் என்றால் நம்பவா முடிகிறது. கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும். அதுமட்டுமல்ல, இவரது பாதுகாப்புக்கு இரண்டே இரண்டு போலீஸ்காரர்கள் மட்டுமே இவருக்கு காவல்...! மேலும் அவரது இந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கூட கிடையாது. கிணற்று தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்.
           ''என் விருப்பத்தில் அடிப்படையில் நான் தேர்வு செய்த வாழ்க்கை முறை தான் இது'' என்று வாயார சொல்லி மகிழ்கிறார் ஹோஸே முயீகா. இவர் வாழும் இந்த குடில் மனைவியின் பண்ணை நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கே மலர் செடிகளை கணவனும் மனைவியும் வளர்க்கின்றனர்.
             உருகுவே அதிபர் என்ற பதவிக்காக இவருக்கு கிடைக்கும் 12 ஆயிரம் டாலர் வருமானத்தை இவர் என்ன செய்கிறார் தெரியுமா? இவரது வருமானத்தில்  90 சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்காக அள்ளிக் கொடுத்துவிடுகிறாராம். ''என் வாழ்க்கையின் பெரும்பங்கை இப்படியெ கழித்துவிட்டேன். இப்பொழுதும் இப்படித்தான் வாழ விரும்புகிறேன்'' என்றார் மூயிகா. உருகுவேயில் அதிபராக இருப்பவர் ஆண்டுதோறும் தமது சொத்து மதிப்பை வெளியிட்டாக வேண்டும் என்பது சட்டமாகும். அதன்படி  2010 - ஆம் ஆண்டில்  இவரது சொத்து மதிப்பு என்பது 1800 டாலர் தான் . 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் கார்,  தற்போது தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு ஆகியவற்றை தான் சொத்தாகக் காட்டியிருக்கிறார். ஆக மொத்தமாக 2,15,000 டாலராம். இப்படியும் சில மனிதர்கள் அதிபர்களாக இருந்து ‘வரலாறு' படைக்கின்றனர்....!

கருத்துகள் இல்லை: