ஞாயிறு, 18 நவம்பர், 2012

''மும்பையின் ஹிட்லர்'' பால் தாக்கரே மரணம் - மும்பை இனி மெல்ல வாழும்...!

              கடந்த சில நாட்களாகவே மும்பைநகரம் பதட்டமான சூழ்நிலையில் இருந்துவந்ததை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. மும்பை மட்டுமே வாழுமிடமாக கொண்ட சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடந்த சில நாட்களாகவே நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடியிருந்தது தான் காரணம். சில பேர் வாழும் போதும் பிரச்சனை. மாண்ட பின்பும் பிரச்சனை தான். அது போல் நேற்று  இறந்தபின்பும் மும்பை நகரம் மேலும் அதிகமான அளவிற்கு  பதட்டமாக காணப்படுகிறது. மக்களின் பாதுகாப்புக் கருதி ஆயிரக்காக்கான காவலர்களை அரசு இறக்கிவிட்டிருக்கிறது. காவல்துறையோ பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை வேறு விடுத்திருக்கிறார்கள்.
            ''மும்பை தாதா'' என்றும் ''மும்பை ஹிட்லர்'' என்றும் சிவசேனா கட்சியினராலும், அவரது மற்ற ''கூட்டாளிகளாலும்'' அன்போடு அழைக்கப்பட்டவர் தான் இந்த பால் தாக்கரே. இவரது இளம்வயதிலிருந்தே இவர் ''மதம் பிடித்தவர்'' - இந்து மதம் பிடித்தவர். இந்து மதம் தான் இவரது மூச்சும், பேச்சும். ''தீவிரவாத அமைப்புகளில் 'தற்கொலைப் படை' இருப்பது போல் இந்துக்களிலும் 'தற்கொலை படை' அமைக்கப்பட வேண்டும்'' என அசாதாரணமாக பேசியவர். அந்த அளவிற்கு இந்து மதம் பிடித்தவர். இந்து மதத்தின் மீது இவருக்கு இருந்த பிடிப்பால், இந்து மதத்தின் அடையாளமாக கருதப்பட்ட 'சத்திரபதி சிவாஜி' இவரது குலதெய்வம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதனால் தான் இவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'சிவசேனா' - 'சிவாஜி படை' என்று பெயரிட்டார். இவர் இந்துமதம் பிடித்தவர் மட்டுமல்ல, வேற்று மதத்தினரை - குறிப்பாக இஸ்லாமியர்களை எதிரிகளாக நடத்தியவர். அதனால் பாகிஸ்தான் என்றால் இவருக்கு கசப்பு மருந்து சாப்பிடுவது போலிருக்கும். அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்கு இந்தியா வரவிருக்கிறது என்ற செய்தியை கேட்ட உடன், கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மூச்சு விடவே திணறிக் கொண்டிருந்தவர், படுக்கையை விட்டு எழுந்து பாகிஸ்தான் அணியின் வருகையை எதிர்த்து குரல் எழுப்பிய மாவீரன் தான் இவர். சிவசேனா கட்சியின் வளர்ச்சிக்குப் பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரையில் மும்பையில் ஆடாமல் பார்த்துக்கொண்டவர். முன்பு ஒருமுறை, இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் மராத்தியரான சச்சின் டெண்டுல்கரின் எதிர்கால வருமானத்திற்கே வேட்டுவைக்கும்படி  பால் தாக்கரே பேசிய போது, சுதாரித்துக்கொண்ட டெண்டுல்கர் ''முதலில் நான் இந்தியன், அடுத்தது தான் மராத்தியன்'' என்று புத்திசாலித்தனமாக பேசி, தன் தேசபக்தியை வெளிப்படுத்தி, ஒரு சிக்ஸர் அடித்து பால் தாக்கரேவின் வாயை அடைத்து, தன்  வருமானத்தை நிலைப்படுத்திக்கொண்டார். அதை கேட்ட விசுவாமித்திரரான பால் தாக்கரே பதிலுக்கு ''மராத்தியர்களின்  மனங்களிலிருந்து நீ விலக கடவாய்'' சச்சினைப் பார்த்து சாபமிட்டார்.
             அதுமட்டுமல்ல உலகமகா கொடூரன் - சர்வாதிகாரி ஹிட்லர் இவரது ஆதர்ஷ குரு என்பது குறிப்பிடத்தக்கது. ''ஹிட்லர் எனக்கு பிடித்த தலைவர். நான் அவரை தீவிரமாக பின்பற்றுகிறேன். ஹிட்லரின் தலைமைப்பண்பு என்னை பிரமிக்க வைத்திருக்கின்றது. அவரைப்போன்ற ஒரு தலைவர் தான் இந்தியாவை ஆளவேண்டும்'' என்று அறிவுப்பூர்வமாக வெளிப்படையாகவே  பேசிய பால் தாக்கரே போன்று ஒரு அதிசய தலைவரை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கமுடியாது. இயற்கையிலேயே இவர் ஒரு 'கார்டூனிஸ்ட்' என்பதால்  இப்படி ஏதாவது வேடிக்கையாக நடந்துகொள்வார்.
                  இனவுணர்வுகளை - மாநில உணர்வுகளை  தூண்டி மகாராஷ்டிரா மக்களை - குறிப்பாக மும்பை மக்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வைத்திருந்தார். தனக்கென தனியான பத்திரிகை ஆரம்பித்து, கார்டூனிஸ்டாக இருந்து, சிவசேனா கட்சியை நிறுவியது வரை,  மும்பை, மகாராஷ்டிரா இரண்டும் மராத்தியர்களால் மராத்தியர்களுக்காக ஆளப்படவேண்டியவை என்பது தான் அவரது பிரதானமான கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. குஜராத்தியர்கள், மார்வாடியர்கள், பீகாரிகள்  மற்றும் தென்னிந்தியர்களின் மும்பை நோக்கிய 'குடிப்பெயர்வு' நடைபெறுவதை எதிர்த்து,  மராத்தியர்களின் வேலை வாய்ப்புக்களை வேற்றினத்தவர்கள் தட்டிப்பறிப்பதை அனுமதிக்க முடியாது என்று கோஷமிட்டு 'தாதா' பாணியிலான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் குழித்தொண்டிப் புதைத்தவர்.
           இவர் இஸ்லாமியர்களுக்கும், வேற்றினத்தவர்களுக்கும் மட்டும் எதிரானர் அல்லர். கம்யூனிஸ்ட்களுக்கும், இடதுசாரிக்கட்சிகளின் ஆளுமையிலிருந்த தொழிற்சங்கங்களுக்கும் எதிராகவும் வன்முறை பாணியிலான அரசியலை வளர்த்தவர். கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியையும், தொழிற்சங்கங்களின் வளர்ச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கங்களை வன்முறை, கலவரம் மற்றும் கொலைகளின் மூலம் நிர்மூலம் ஆக்கியவர்.
தொழிலாளர்கள் மீது அக்கறை உள்ள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் இவரது கண்ணசைவிலும், கையசைவிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்ட்ராவில் குறிப்பாக மும்பையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் சிவசேனா தலைமையிலான தொழிற்சங்கமாகத்தான் இருக்கும். மும்பையில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும், வங்கி, எல். ஐ. சி போன்ற பொதுத்துறை அலுவலகங்களும், தனியார் துறை அலுவலகங்களும் இவரது சிவசேனா கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், மேற்கூறிய இந்த அலுவலகங்களின் நுழைவு வாயிலில் கண்டிப்பாக ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கும். இது இங்கே எழுதப்படாத சட்டமாகும். அதுமட்டுமல்ல, இவர்களது தொழிற்சங்கமானது தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாமல், முதலாளிகளுக்கும், நிர்வாகத்திற்கும் சாதகமாக செயல்படக்கூடிய தொழிற்சங்கமாகும். அதனால் தான் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகிற தொழிலாளர்களுக்கு எதிராகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்லாது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் வேலைநிறுத்தத்தையும் மிரட்டல்கள் மூலம் வெற்றிபெறாமல் செய்துவிடுவது என்பதையும் யாராலும் பாராட்டாமல் இருக்கமுடியாது. 
               இப்படியான போற்றுதலுக்கும், பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் சொந்தமான புண்ணியவானான பால் தாக்கரே மறைந்துவிட்டார். அவரோடு சேர்ந்து இதுவரை அவரை அலங்கரித்து வந்த வன்முறையும், கொலையும், மிரட்டலும், பதட்டமும், அமைதியின்மையும் மறைந்து போகட்டும். மும்பையில் இனி மெல்ல அமைதி மலருட்டும். மும்பையில் இனி மெல்ல அமைதி வாழட்டும்.
பின் குறிப்பு : இந்த புண்ணியவானின் வாழ்க்கை வரலாறு மராத்திய பாடப்புத்தகத்திலோ அல்லது சி. பி. எஸ். சி பாடப்புத்தகத்திலோ வராமல் இருந்தால் சரி.

1 கருத்து:

Prakash சொன்னது…

ஒழிந்தான் ஒரு வெறியன்