சனி, 24 நவம்பர், 2012

மதவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் வளர்க்கும் அமெரிக்கா - துணைபோகும் இந்தியா...!

           உலக வரைப்படத்திலிருந்து சோசலிச நாடுகளை ஒழித்துக்கட்டவும், மனித குலத்தின் மாண்புகளில் இருந்து சோசலிசத்தை அழித்துவிடவும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் வளர்த்துவிடப்பட்டவர்  தான் தலாய்லாமா என்ற இந்த புத்தமத சாமியார்.    சீன நாட்டின் ஒன்றுபட்ட பகுதியாக இருக்கக்கூடிய திபெத் பகுதியை தனி நாடாக பிரிக்கப்படவேண்டும் என்று அங்குள்ள பிரிவினையை விரும்பும் ஒருசில மக்களை மதத்தலைவர் என்ற முறையில் ஒன்று திரட்டி தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.    இந்தியாவிலுள்ள இமாச்சலபிரதேச  மாநிலத்திலுள்ள‌ ''தரமஷாலா'' - வில் சட்டவிரோத திபெத் நாட்டின் அரசை நடத்திக்கொண்டிருப்பவர். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. பக்கத்து நாட்டில் தேசவிரோத செயல் புரியும் இவருக்கு இடம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வருவது இந்திய அரசு என்பதும், அதேப்போல் இவர் சட்டவிரோத அரசை நடத்துவதற்கு நிதி கொடுத்து உதவி செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதும் குறிப்படத்தக்கது. சோசலிசத்தையும் சோஷலிச நாடுகளையும் ஒழித்துக்கட்டுவதற்கு, மதவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் வளர்ப்பதில் என்றைக்குமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தயங்கியதே கிடையாது. அதற்காக எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். ஆனால் இவ்வாறு அமெரிக்க மற்றும் திபெத் மக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட  தர்மஷாலாவில் உல்லாச‌ விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர் தான் இந்த தலாய்லாமா என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இங்கு அவ்வப்போது வந்து ஓய்வெடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த தலாய்லாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் உள்ள நெருக்கம் நன்கு விளங்கும். மேலும் இவர் பேருக்கு தான் சாமியார். மற்றபடி பகட்டான வாழ்க்கை வாழும் ஒரு சுகபோகவாதியாவார். அதனால் உலகளவில் பல திரைப்பட நட்சத்திரங்கள் இவருடைய விசிறியாக இருக்கிறார்கள் என்பது இவருடைய பகட்டு நன்கு புரியும். இந்த சாமியார் சில சமயங்களில் விளம்பரங்களில் கூட நடிக்கும் நட்சத்திரமாகவும் இருக்கிறார். 
                மேற்கத்திய முதலாளித்துவ  அரசியல் சிந்தனைக்கும், சிந்தனையாளர்களுக்கும் இவரது வார்த்தைகள்  பொன்மொழியாக பயன்படுகிறது. இவர் ''வோக்'' என்ற  ஃபாஷன் பத்திரிக்கையின் கெளவரவ ஆசிரியராகவும் வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இந்தியாவில்  தஞ்சம் புகுவதற்கு முன்பு  1960 - ஆம் ஆண்டுகளிலேயே திபெத்தில் 1000 அறைகள் கொண்ட 14 மாடி ''பொட்டாலா'' அரண்மனையில் வாழ்ந்தவர்.  இவரை சுற்றி இருந்த  திபெத்தியர்கள் வறுமையில் வாடும்போது இவருக்கு மட்டும் இந்த வாழ்க்கை தேவையானதாக இருந்தது. ஏனெனில், மக்களின் பார்வையில் இவர் மிகவும் புனிதம் மிகுந்தவர். மேட்டுக்குடியினைச் சார்ந்தவர். எனவே அதில் ஒன்றும் தவறு கிடையாது என்று மக்கள் நினைத்தார்களோ இல்லையோ... தலாய்லாமா நினைத்தார்.
                  
மேலும் இவர் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியாகத் தானே காட்சியளிக்கிறார். அவர் ஒரு  ''புத்த பிச்சு'' - வாக அல்லவா காட்சியளிக்கிறார். ஆனால்  உலகில் எந்த மூலையில் மக்களைக் கொன்று குவிக்கும் போர்கள் நடந்தாலும் அதைப் பற்றி எவ்வித மூச்சும் விடமாட்டார். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் உடனான அமெரிக்காவின் கொலைவெறிப் போரினை பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாதவர். அமெரிக்காவை கண்டித்து ஒரு வார்த்தைக் கூட இவர் உதிர்க்கவில்லை. இருப்பினும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் எப்போதும்  பாலஸ்தீனர்கள்  மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தாலும், இஸ்ரேலை தட்டிக்கேட்காமல்,   இஸ்ரேலுக்கே  சென்று பாலஸ்தீனர்களிடம் ''வன்முறை வேண்டாம்'' என்று 'அமைதிப் புறா'வைப் போல் அறிவுரைக் கூறியவர் இவர் சீனாவிடமிருந்து தப்பி வருவதற்கு முன்பு, இவர் ஏதோ சீனாவினை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாதவர் போல  இவர் உதிர்த்த இந்த அறிவுரை என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கும்.
 
             உலக அமைதி குலைவதற்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கும் காரணமாக இருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து,
''பிரெசிடெண்ட் புஷ்ஷை நேசிக்கின்றேன்'' என வெளிப்படையாக பறை சாற்றியவர் தான் இந்த தலாய்லாமா. அண்மையில் கூட  ஆப்கானிஸ்தான்  போரைப் பற்றியும், ஈராக் போரைப் பற்றியும்  பேசும் போது, ''அப்போர்கள் எந்த வகையைச் சேர்ந்தது என சொல்வது கடினம'' என  போர் வெறி பிடித்த அமெரிக்காவின் மீது அருள் பாலித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: