திங்கள், 29 அக்டோபர், 2012

பதினைந்தே வயதான இளம் பெண் மேயர் - பாலஸ்தீனம் வழிகாட்டுகிறது...!
      
     சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு திணறிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன நாடு இன்றைக்கு உலகத்திற்கே வழிகாட்டும் அளவிற்கு ஓர் அரசியல் புரட்சியை செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு காசா ஸ்டிரிப் எனப்படும் பகுதியும், மேற்குக் கரை எனப்படும் பகுதியும் சேர்த்து ஒரு சிறு பகுதி மட்டுமே பாலஸ்தீன நாடாக கருதப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பக்கத்து நாடு.  பாலஸ்தீனம் இஸ்ரேலின் பக்கத்து   நாடு என்பதால் தினசரி பாலஸ்தீனத்தை எட்டிப்பார்ப்பது தான் இஸ்ரேலின் வேலையாக இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து பாலஸ்தீனத்தின் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதும், இராணுவ தாக்குதல் நடத்துவது தான் இன்றைய அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகள் அந்த தேசத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
        இந்த சூழ்நிலையில் தான் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகை கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம் பெண் பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்குரியது - போற்றுதற்குரியது. மத அடிப்படைவாதமும், மூடநம்பிக்கைகளும் பரப்பப்பட்டு வரும் ஒரு நாட்டில் ஒரு இளம் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது,  இளைஞர்கள் மத்தியில் ஆளுமை குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கான  சிந்தனையாகும்.
         இந்தியாவில் ஒரு பெண்ணிற்கு பதினைந்து வயசு ஆகிவிட்டால் சடங்கு - சம்பிரதாயம் என்ற பெயரில் மூலையில் கிடத்திவிட்டு, பின்  அந்த பெண்ணை இந்த சமூகம் சும்மா விட்டு வைக்காது. வீட்டை பெருக்க சொல்வதும், கோலம் போடக் கற்றுத் தருவதும், சமையல் பயிற்சி தருவதுமாக நடக்கின்ற இந்த காலக்கட்டத்தில் - சமூகம், கலாச்சாரம், பண்பாடு என்ற பெயர்களில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே பெண்களை வளர்க்கும் இந்த காலக்கட்டத்தில்,  பாலஸ்தீன மக்களின் இந்த முற்போக்கான சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது. மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்த பெண்ணை வெறும் சம்பிரதாயமாகவோ அல்லது பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்த பெண்ணே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களை கவனிக்கிறார். கோப்புகளில் கையெழுத்திடுகிறார். நகராட்சிக் கூட்டங்களை தலைமை  தாங்கி நடத்துகிறார். மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். மக்கள் கூட்டங்களில்  சுதந்திரமாக பேசுகிறார். பொது விழாக்களில் கலந்துகொள்கிறார். இவைகளுக்கு நடுவில் இந்த பெண் படிப்பதற்கு பள்ளிக்கும் சென்று வருகிறார்.  
          மிகப்பெரிய மக்கள் பணியை செய்யும் பஷீர், மக்களை கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்த தலைவராக திகழ்கிறார் என்று மேற்கு கரை பகுதி மக்கள் சொல்கிறார்கள். அந்த மக்கள் இவரை பெரிதும் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறு வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை: