புதன், 3 அக்டோபர், 2012

பாகிஸ்தான் நாட்டிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்....!


                இது வரையில் ''ஷாத்மான் சவுக்'' என்று அழைக்கப்பட்ட பகுதி, மாவீரன் பகத்சிங்கின் 105 - ஆவது பிறந்த நாளான சென்ற செப்டம்பர் 28 - ஆம் நாள் அன்றையிலிருந்து ''பகத்சிங் சவுக்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் அடைந்த நிகழ்ச்சி என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறான நினைப்பாகத் தான் இருக்கும். ஏனென்றால் அந்த நிகழ்வு நடந்த இடம் நமது சகோதர நாடான பாகிஸ்தான் தான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா...? இந்தியாவில் ஒரு சின்னத் தெருவுக்கு கூட பகத்சிங் பெயரை சூட்டுவதற்கு யோசிக்கிற, தயங்குகிற அல்லது தடை செய்யுகிற நம் நாட்டு மத்திய - மாநில அரசுகள்  பாகிஸ்தானின் இந்த செயலைப்பார்த்து  நிச்சயமாக  வெட்கித் தலைகுனிய வேண்டும். அப்படியொரு மரியாதையை மாவீரன் பகத்சிங்கிற்கு பாகிஸ்தான் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. 
            அகிம்சை முறையில் இந்த தேசத்தின் சுதந்திரத்தை யாசித்து பெறமுடியாது. போராட்டத்தின் மூலம் தான் பெறமுடியும் என்று வீரம்செறிந்த போராட்டங்களை நடத்திய மாவீரன் பகத்சிங், பிரிட்டிஷ் வெறிநாய்களால் கைது செய்யப்பட்டு, சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அன்றைக்கு ஒன்றுபட்ட இந்தியாவில்   இருந்த - இன்றைக்கு பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் சிறையில்  அடைக்கப்பட்டு, 1931 - ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 23 - ஆம் தேதியன்று அதே லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்த கருப்பு தினத்தை, இந்த நாட்டின் விடுதலைக்காக பகத்சிங் செய்த உயிர் தியாகத்தை  அத்தோடு இந்த தேசம் மறந்துவிட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வற்புறுத்தலின் காரணமாக இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு வேறு வழியில்லாமலும், மனமில்லாமலும் பகத்சிங்கின் சிலையை திறந்து வைத்தது.
             ஆனால் பாகிஸ்தானிலோ அந்த நாட்டு மக்களும், அந்த நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளும், பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுப்பிய கோரிக்கைகளின் காரணமாக கடந்த செப்டம்பர் 28 - ஆம் தேதியன்று  பகத்சிங்கின் 105 - ஆவது பிறந்த நாளின் போது, லாகூரில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 - ஆம் நாளன்று பகத்சிங்  தூக்கிடப்பட்டு கொல்லப்பட்ட     அதே இடத்தில் ஏற்கனவே இருந்த பெயரை மாற்றி பகத் சிங்கின்  பெயர் சூட்டப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்கு உரியது. 
லாகூர் சிறையில் பகத்சிங் 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்பட்ட தூக்கு மேடை 

பாகிஸ்தான் மக்கள் கொண்டாடும் பகத்சிங் பிறந்தநாள் விழா...!



































தலைவர்களின் தியாகங்களை மதிக்க பாகிஸ்தானிடமிருந்து 

நாமும் கற்றுக்கொள்வோம் ...!

கருத்துகள் இல்லை: