ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கருணாநிதியை எதிர்கட்சித்தலைவர் ஆக்க ஆசைப்படுகிறார் ஜெயலலிதா...சபாஷ்...!

         
           தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில்  அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. மக்களை மயக்கும் விலையில்லா பொருட்களெல்லாம் தேர்தல் சமயத்தில் சொன்னது போல் கொடுத்தாகிவிட்டது.  மக்கள் மயக்கத்தில் இருப்பார்கள்  என்று ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்போதுமே ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் திமுக - விற்கும், அதிமுக - விற்கும் மாறி மாறி வாக்களிக்கும் மக்கள், ஒவ்வொரு முறையும் தாம் நிம்மதியாய் அமைதியாய் வாழ்வோம் என்று எதிர்ப்பார்க்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
               அப்படித்தான் சென்ற ''தாத்தா'' ஆட்சியில் தான் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டோமே, ''அம்மா'' ஆட்சிக்கு வந்தா அதெல்லாம் சரியாகிவிடுமே என்றுநினைத்து ''அம்மாவிற்கு'' ஒட்டு போட்டா, ''தாத்தா'' ஆட்சியை விட மிக மோசமான ''மின்சார தடை'' என்பது இன்றைக்கு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையாக மாறி உள்ளது. ஒரு வருஷத்திற்கு மேலாக அம்மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிபட்டுகிட்டு இருக்காங்க. மின்சாரம் இல்லாமல் தமிழகம் முழுதும் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பையும், வருமான இழப்பையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பண்டிகைகள் எல்லாம் வந்துகிட்டும் போய்கிட்டும் இருக்கு. இவர்களின் ஆசை குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கக் கொடுக்கமுடியாமல் திண்டாடுகிறார்கள். மின்சாரம் இல்லாமல் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகும் மாணவ- மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் விழி பிதுங்கி போகிறார்கள். நோயாளிகளும், வயதானவர்களும், சிறு குழந்தைகளும் மின்விசிறி இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.  
          இவைகளை எல்லாம் சரி செய்வது எப்படி என்று தன்  நேரத்தை செலவழிக்காமல் - இந்த பிரச்சனைகளை சமாளிக்க மாற்று வழி என்ன என்றெல்லாம் யோசனை செய்யாமல், தமிழக முதலமைச்சர் இப்போது ஆள் பிடிக்கும் வேலையில்  இறங்கியுள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் தே . மு. தி. க. - வின் பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கச் செய்யும் ஒரு வேலையை தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்.
          முதலமைச்சர் ஜெயலலிதாவின்  இந்த செயலை தமிழக மக்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறாரோ அல்லது நினைக்கிறாரோ என்று தெரியவில்லை. ஆனால் அவரை சுற்றுயிருக்கும் ''தலையாட்டி பொம்மைகளே...!'' முதலமைச்சரின் இந்த ''கீழ்த்தரமான'' செயலைப்பார்த்து தமிழக மக்கள் எரிச்சல் தான் அடைந்திருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லுங்கள். நீங்க சொல்லவில்லை  என்றால், அப்புறம் ஜெயலலிதா இதெல்லாம் யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று சொல்லிவிடுவார்.
         முதலமைச்சரின் ஆள் இழுக்கும் இந்த செயல் என்பது அநாகரீகமானது. எதிர்கட்சிகள் எல்லாம் ''எதிரிகட்சிகள்'' அல்ல என்பதை முதலில் ஜெயலலிதா புரிந்துகொள்ளவேண்டும். அப்படி நினைத்து செயல்படுவது  என்பதும் பெருமையளிக்காது. சென்ற கருணாநிதி தலைமையிலான ஆட்சியிலேயே தமிழக மக்கள்  இது மாதிரியான ஆள் பிடிக்கும் அநாகரீக செயலை பார்த்ததில்லையா...?  ஜெயலலிதாவின் விசுவாசிகளை எல்லாம் கருணாநிதி தன்  பக்கம் இழுத்து அரசியல் பண்ணவில்லையா...? ஆனால் அது மாதிரியான செயல்களெல்லாம் மக்களிடம் வரவேற்பை பெறவில்லையே. அதை பார்த்து சகித்துக்கொள்ளாத மக்கள் தான் தன்னை முதலமைச்சராக உட்கார வைத்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா உணரவேண்டும்.
      ஜெயலலிதாவின் இந்த ஆள் இழுக்கும் வேலையின் மூலம் என்ன தான் சாதிக்கப்போகிறார்...? எனக்கு மூன்று சந்தேகங்கள் எழுகின்றன.

      ஒன்று :     இது மாதிரியான பரப்பரப்பான சம்பவங்களின் மூலம் தமிழக மக்களை மின்சாரப் பிரச்சனைகளிலிருந்து திசைத்திருப்பிவிடலாமென்று நினைக்கிறாரோ...?

   இரண்டு : சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் பிரச்சனைகளுக்காக தன்னோடு வாக்குவாதம் செய்த விஜயகாந்தை அந்த பொறுப்பிலிருந்து இறக்கிவிட   நினைக்கிறாரோ...?
      
   மூன்று :   சட்டமன்றத்தில் திமுக எதிர்கட்சியாகவும், கருணாநிதி எதிர்கட்சித் தலைவராகவும் வரவேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்படுகிறாரோ...?

    இந்த கேள்விகளை நான் மட்டும் கேட்கவில்லை. தமிழக மக்கள் அனைவருமே கேட்கிறார்கள். மேற்சொன்னவற்றில் காரணம் எதுவாக இருந்தாலும்,  ஏமாற்றம் என்பது ஜெயலலிதாவிற்கு தான் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.  

கருத்துகள் இல்லை: