வியாழன், 25 அக்டோபர், 2012

சன் குழுமம் கிரிக்கெட்டிலும் புகுந்து விளையாடப்போகிறது....!

                இந்தியாவில் எந்தத் தொழில்களில் இலாபம் கொழிக்கிறதோ அந்த தொழில்களில்
கூச்சமில்லாமல் நுழைந்து கொள்ளை இலாபம் பார்ப்பது என்பது இந்தியாவின் பெருமுதலாளிகளான அம்பானி சகோதரர்களும், மாறன் சகோதரர்களும்  சளைத்தவர்கள் அல்ல. உழைக்காமலேயே இலாபம் கொழிப்பது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
         சமீபத்தில் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட ஐபிஎல் அணியான ''டெக்கான் சார்ஜர்ஸ்'' அணி நீக்கப்பட்டதை அடுத்து புதிய அணிக்கான ஏலம் மும்பையில் நடைபெற்றதில் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான ''சன் டிவி'' குழுமம் ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் வருடத்திற்கு ரூ.85.5 கோடிக்கு புதிய அணி சன் டிவி குழுமத்தால் வாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
          இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்பது இந்திய மாணவர்களின், இளைஞர்களின்  
படிப்பையும், நேரத்தையும், பணத்தையும் குறிவைத்து அவர்களின் மனதில் கிரிக்கெட் வெறியை தூண்டி,  அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை உறிஞ்சும் ஒரு சூதாட்டக்களம். ஒருவரின் இழப்பு என்பது இன்னொருத்தரின் இலாபம்.  இதை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள்  தான் இந்த வட இந்திய மற்றும் தென்னிந்திய  சகோதரர்கள் என்றால் அது மிகையாகாது.
            
               இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொது எனக்கொரு கதை தான் நினைவுக்கு வருகிறது.

         இப்படி தான் ஒரு நாளு  கோவிலுக்கு வெளியில ஒரு பிச்சைக்காரன் ''ஓ''ன்னு அழுதுக்கிட்டு இருந்தான். அப்போ அத பாத்துகிட்டு இருந்த இன்னொரு பிச்சைக்காரன் ''என்னப்பா நானும் பாத்துகிட்டு இருக்கேன் ரொம்ப நேரமா  நீ பாட்டுக்கு அழுதுகிட்டே இருக்கியே..ஏம்பா...?'' என்று கேட்டான்.         
               அதுக்கு அந்த அழுமூஞ்சி  பிச்சைக்காரன் சொன்னான்  ''போற போக்கை பாத்தா.. சன் டிவி குழுமம் நம்ப தொழிலேயும் வந்துடுவாங்கலோன்னு பயமா இருக்கு'' என்று சொன்னானாம்.

          அது போலத்தான் இலாபம் கிடைக்கும் என்றால் இவர்கள் எந்தத் தொழிலையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை: