வெள்ளி, 19 அக்டோபர், 2012

அப்பழுக்கற்ற மனிதர் - இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவிலா...?

           இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் விளங்குகிறார். ஊழல்மயமான இக்காலச் சூழ்நிலையில் தான் அணிந்துள்ள வெள்ளை நிற குர்தாவைப்போல் அப்பழுக்கற்ற மனிதராக திகழ்கிறார் மாணிக்சர்க்கார். இவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. கார் கிடையாது. குறிப்பிடத் தக்க அளவிற்கு வங்கியில் இருப்பு ஏதுமில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் இவருடைய கணக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று இருப்பில் இருந்த தொகை ரூ.6,500 மட்டுமே! இவர் தனது சம்பளம் ரூ.12,500 - ஐ தனது கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிடுகிறார். பின்னர் அக்கட்சியிடமிருந்து தனக்காக மாதம் ரூ.5000 மட்டும் திரும்ப பெற்றுக்கொள்கிறார். முதல்வராக உள்ள ஒருவருக்கு இந்த தொகை எப்படி போதும் என்று வினா எழுப்பினால், தனது மனைவியின் மாதாந்திர ஓய்வூதியமே தங்கள் இருவருக்கும் போதுமானது என்றும், தனக்கு ஒரு நாள் தேவை என்பது ஒரு பாக்கெட் சார்மினார் சிகரெட் என்கிறார்.
             இவருக்கு பிடித்தமான ரசமாலவும் முந்திரியுமே இவருடைய காலை உணவாகும். இவருக்கு பீம்சென் ஜோஷியின் இசை மிகவும் பிடிக்கும். தினசரி காலை 10 மணிக்கு அரசு தமக்கு அளித்த காரில் அலுவலகத்திற்கு செல்கிறார். னது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவைக் கூட இந்த அரசு வாகனத்தில் அவர் ஏற்றுவது கிடையாது. அவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவின் வயது 61. இவர் மத்திய சமூகநலத்துறை வாரியத்தில் பணியாற்றி கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் வாடகை ஆட்டோ ரிக்ஷாவில் இன்றும் அகர்தலா தெருக்களில் சென்றுவருவதைப் பார்க்கலாம். இவர் தனது கணவரின் அலுவலக விஷயங்களில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலையிடுவது கிடையாது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மாணிக்சர்க்கார் முதலமைச்சராக இருந்த போது காலையில் நடைபயணம் மேற்கொள்ள விருப்பப்பட்டார். அவருடன் துணை சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவருடடைய பாதுகாப்பு கருதி, அவர் சக்கரம் அணிந்த காலணியை அணிந்துகொள்ள சொல்லும்படி அவரது மனைவியிடத்தில் தெரிவித்தனர். அவரது மனைவியும் தனது கணவருக்காக ஒரு காலணியை வாங்கிக்கொடுத்தார். இதுவே அவர் அரசு விவகாரங்களில் தலையிட்ட நிகழ்வாகும். இதை ஒப்புக்கொண்ட மாணிக்சர்க்கார் சக்கர காலணியில் செல்வது நடைபயணத்திற்கு ஒப்பாகாது என தெரிவித்து விட்டார். 
         2013 பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இவரது நேர்மை இவருக்கு வெற்றி பெற்று தருமா ? இந்தியாவில் கம்யூனிசத்தின் இறுதித்தளமான திரிபுராவில் வெற்றி கிடைக்குமா என்று இவரிடம் வினவினால் இவர் கம்யூனிசத்தின் கடைசித்தளம் திரிபுரா என்பதை மறுக்கிறார். மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அங்கு 41 விழுக்காடு வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று உறுதியுடன் சொல்கிறார் திரிபுராவின் நீண்ட நாள் முதலமைச்சராக உள்ள மாணிக்சர்க்கார்.
1998 - ம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ள மாணிக்சர்க்கார் இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சமீர்ராய் பர்மனின் மகன் சுதீப்ராய் பர்மனின் சவாலை எதிர் நோக்கியுள்ளார். 
             சுதீப் திரிபுரா அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதையும், கடந்த 14 ஆண்டு காலமாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளதையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். மாணிக்சர்க்கரின் மனைவி காலிப்பணியிடங்கள் குறித்தும் வேலையின்மை குறித்தும் குறிப்பிடுகையில், இது திரிபுராவின் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவின் பிரச்சனையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். திரிபுரா போன்ற ஊரக மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற கொள்கை ஏதும் மத்திய அரசிடம் இல்லாததால்தான் இந்த நிலைமை என்று சொல்லும் மாணிக்சர்க்கர், இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பணியிடங்களை தமது அரசு உருவாக்கி கொடுத்துள்ளது என்று தெரிவிக்கிறார். இவரது நேர்மை குறித்து சுதீப் குறிப்பிடுகையில், எச்சரிக்கையுடன் திட்டமிட்டு நேர்மையாக மாணிக் சர்க்கார் உள்ளார் என்றும் இவரால் எப்படி 100 குர்தா பைஜாமா வாங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமல்ல, அவரது ஓரா கண் கண்ணாடி ரூ.60,000 எனவும் அவரது காலணி ரூ.6,000 எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம், அவர்களை தவறு செய்ய அனுமதித்துவிட்டு, பின்னர் தனக்கு எதிராக அவர்கள் செயல்படாமல் பார்த்துக்கொள்ளும் நடவடிக்கை என்று சுதீப் தெரிவித்துள்ளார். இதற்கு மாணிக்சர்க்கார், தான் எப்பொழுதும் சுத்தமாக இருக்க ஆசைப்படுபவர் என்றும் ஆனால் அதற்காக அதிகமாக செலவு செய்பவன் கிடையாது என்றும் தனது கண் கண்ணாடியின் விலை ரூ.1800 என்றும், காலணி மிகவும் மலிவானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது அமைச்சரவை சகாக்களின் மீது எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்களை சொல்லி வருகின்றனர் என்றும், இது குறித்து தக்க ஆதாரங்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க தயார் என்றும் கூறியுள்ளார். தனது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடிந்தாலும் நேர்மை குறித்து எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
             மாணிக்சர்க்கார் குறித்து திரிபுரா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகையில், மாணிக்சர்க்கார் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் உறுதியற்ற அரசியல்வாதி. தன்னை யாராவது மிரட்டுகிறார்கள் என்றால் தன்னுடைய சிறகுகளை மூடிக்கொள்வார் எனவும், தற்போது காங்கிரசுக்கு மாணிக்சர்க்காரை வீழ்த்த வாய்ப்பு இருந்தாலும் அதன் உட்பூசல்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மாணிக்சர்க்கார் இது குறித்து குறிப்பிடுகையில், அதிகாரம் ஏது? அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. திரிபுரா போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொன்றிற்கும் நாங்கள் போராட வேண்டியுள்ளது என்கிறார். மாணிக்சர்க்கார் கிரிக்கெட் பிரியர். இவர் கல்லூரியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி. முகமது அசாரூதீன் ஆகியோரின் விசிறி. தற்போது இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விராத் கோஹ்லி தனக்கும் பிடிக்கும் என்கிறார்.

நன்றி: “இந்திய டுடே” 10-10-2012

கருத்துகள் இல்லை: