செவ்வாய், 7 ஜூலை, 2015

உலகத்திற்கே வழிகாட்டும் கிரீஸ் நாட்டு மக்கள்...!


                 இந்தியாவைப் போன்றே ஐரோப்பிய கூட்டமைப்பு  நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாடும், அந்நாட்டு முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்த உலகமயம் மற்றும்  தாராளமயக் கொள்கைகளினால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இந்த  வேளையில் தான்  அந்நாட்டு மக்கள் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரிக்கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச்செய்தனர். ஏற்கனவே உலகமய தாரளமயகொள்கைகளை காரணம் காட்டி கிரீஸ் நாட்டின் கடந்த கால அரசு, தொழிலாளர்களுக்கு - ஊழியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம்,  நிரந்தர வேலைவாய்ப்பு இன்மை, தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் ஒழிப்பு, தொழிற்சங்கங்கள் கூடாது, ஓய்வூதியம் ஒழிப்பு போன்ற சமூக பாதுகாப்பையே ஒழித்துக்கட்டி மக்கள் விரோத - தொழிலாளர் விரோத செயல்களை செய்தமையால் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்பட்டது. பின்னர்     மக்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசு, கடந்த மக்கள் விரோத அரசு நடைமுறைப்படுத்திய சிக்கல்களை தீர்ப்பதில் மிகுந்த சிரமப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த     இடதுசாரிகட்சி ஆட்சிக்கு வந்த பின்னே எரிச்சலுற்ற ஐரோப்பிய நிதி கூட்டமைப்பும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எப்) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியும்  அந்த அரசுக்கு நெருக்கடியை அதிகப்படுத்த  ஆரம்பித்தது. 
           கிரீஸ்  மக்கள் மீது ''சிக்கன நடவடிக்கைகளை'' திணிக்கவேண்டும் என்று ஒரு பக்கம் கிரீஸ் அரசின் மீது  நெருக்கடியை  கொடுத்து வந்தது.  சிக்கன நடவடிக்கை என்ற பேரில், ஊழியர்களின் ஊதியத்தை மேலும் குறைப்பது, ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது, ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்படும்  சலுகைகளை  துண்டிப்பது போன்ற நெருக்குதல்களை கிரீஸ் நாட்டு மக்களின்  மீது திணிக்கவேண்டும் என்று ஐரோப்பிய நிதி அமைப்பு இடதுசாரி ஆட்சியாளர்களை கடுமையாக நெருக்கியது. மேலும் சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி 30.06.2015 நள்ளிரவுக்குள் முன்பு வாங்கிய கடனை திருப்பிக்கட்டவேண்டும் என்று ஆளும் இடதுசாரி அரசின் மீது மற்றொரு புறம் மிகக்கடுமையான நெருக்கடியை கொடுத்தது. 
             ஆனால் நிலுவையிலுள்ள நிதி நிறுவனக்கடன்களை ரத்துச்செய்யக் கோருவது என்பது ஆளும் ''சிரிசா'' என்ற இடதுசாரி கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது. எனவே நிலுவையிலுள்ள  கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களை தாக்கும் எந்தவிதமான வெட்டுகளையும் நடைமுறைப்படுத்த இயலாது என்றும் சிரிசா அரசு கூறிவிட்டது. இந்த சமயத்தில் தான் கிரீஸ் நாட்டின் இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அந்த மூன்று நிதிநிறுவனங்களின் நியாயமற்ற வற்புறுத்தலுக்கு எதிரான தன்னுடைய குரலுக்கு பலம் சேர்க்க  மக்களை நாடினார். 
                மூன்று நிதி நிறுவனங்களும் வலியுறுத்தும் ''சிக்கன நடவடிக்கை'' வேண்டுமா - வேண்டாமா...?  (YES or NO)
      அதேப்போல் நிலுவையிலுள்ள கடனை அந்த நிறுவனங்களிடம் திரும்பக்கட்ட வேண்டுமா - வேண்டாமா...? (YES or NO)
             ''YES or NO'' என்ற வாக்கெடுப்பை இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் மக்களிடம் நடத்தினார். அதேப்போல் அரசின் குரலுக்கு பலம் சேர்க்க, தன் நாட்டு மக்களை  ''வேண்டாம்'' - ''NO'' என்று வாக்களிக்கக்கோரி    நாடு முழுதும்  பிரச்சாரம் செய்தார். அதேபோல் இன்னொரு புறம் உலகமயம் - தாரளமயத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சிக்காரர்களும்  ''வேண்டும் - YES'' என்று வாக்களிக்கக்கோரி பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். ஆனால் சென்ற 5 ஆம் தேதி நடைபெற்றத் தேர்தலில் பங்கேற்ற மக்களில் 61.3 சதவீத கிரீஸ் மக்கள் தங்களது இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கேட்டுக்கொண்டபடி ''வேண்டாம்'' - ''NO'' என்றே எந்தவிதமான அச்சமுமில்லாமல்  மிகத் தெளிவாகவும், அறிவுப்பூர்வமாகவும்  வாக்களித்து அந்த மூன்று நிதி நிறுவனங்களுக்கும்  தங்களது எதிர்ப்பை காட்டி பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். புரியும்படி சொல்லவேண்டுமென்றால், நெத்தியடி அடித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். 
          இந்த வாக்கெடுப்பின் முடிவை கேட்ட அத்துணை உலகமய ஆதரவாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது என்பது தான் உண்மை. இவ்வாறு தீர்ப்பு வழங்கியதன் மூலம் கிரீஸ் நாட்டு மக்கள் உலக மக்களை தங்களை திரும்பிப்பார்க்க செய்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த வாக்கெடுப்பில் - குறிப்பாக ''வேண்டாம்'' - ''NO'' வாக்களித்ததில் அந்நாட்டு பெண்களின் பங்களிப்புகளை கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
         அதேப்போல் இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற - உலக மக்களின் கவனத்தை ஈர்த்த  ''ஆக்குபை வால்ஸ்ட்ரீட்''   மற்றும் ''அரபு நாட்டு எழுச்சி'' ஆகிய இருபெரும் போராட்டங்களும் ஒரு தெளிவான இலக்குகளை கொண்ட அமைப்பின் கீழ் திரண்ட போராட்டங்கள் அல்ல என்று தான் அந்த போராட்டங்களின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத உலகம் முழுதுமுள்ள வலதுசாரியினர் விமர்சனம் செய்தனர். ஆனால் கிரீஸ் நாட்டு மக்களின் இந்த தீர்ப்பு அப்படிப்பட்டதல்ல. இடதுசாரியினர் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பின்னால் அணிவகுத்த மக்களின் தெளிவான மற்றும் அறிவுப்பூர்வமான தீர்ப்பு. உலகமயத்திற்கு எதிராக திரண்ட கிரீஸ் நாட்டு மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி. உலக அளவில் இது ஒரு நல்ல அறிகுறியாக தெரிகிறது. இன்று உலகத்திற்கே கிரீஸ் மக்கள் வழிகாட்டுகிறார்கள். அவர்கள் பின்னால் உலக மக்கள் திரளவேண்டும். 

6 கருத்துகள்:

காரிகன் சொன்னது…

Rightly said. Greeks showed the world how we should live. Let it be science, astronomy, philosophy, democracy, mathematics,epic and practicality... If there were no Greeks, there would have no modern world. We owe a lot to them.

nerkuppai thumbi சொன்னது…

//.....நிலுவையிலுள்ள நிதி நிறுவனக்கடன்களை ரத்துச்செய்யக் கோருவது என்பது ஆளும் ''சிரிசா'' என்ற இடதுசாரி கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது. எனவே நிலுவையிலுள்ள கடனை ரத்து செய்ய வேண்டும் ....//
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் அல்லது திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்பது ஒரு பெருமையா? வழிகாட்டுதலா? கடன்கொடுத்தவர்கள் தம் பணத்தை வசூல் செய்ய நினைப்பது தவறா? உன் செலவினங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கடனை அடை என்று சொல்வது அநியாயமா?
இந்த அளவு கடன் சுமை ஏன் ஏறியது, முன் நாட்களில் என்னென்ன வழிகளில் வரவுக்கு மீறி செலவு செய்து இந்த நிலையை எட்டியுள்ளோம் என்று ஆய்ந்து, அதை சீர் படுத்த முயல மாட்டோம், அது அந்த கம்யுனிஸ்ட்-அல்லாத அரசின் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடனை அடைக்க மாட்டோம் என்று சொல்வது சரியா என்று எனக்கு புரியவில்லை.,

வெட்டிப்பேச்சு சொன்னது…

கடனை வாங்கும்போதும் யோசித்ததாய் தெரியவில்லை. இப்போது கட்டமாட்டோம் எனும்போதும் யோசித்ததாய் தெரியவில்லை.

Sengai Podhuvan சொன்னது…

கடன் வாங்கி வாழும் நாடுகள் உலகில் ஏராளம்.
மக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி எய்யப்படுகிறது.
அரசு வாங்கிய கடன்?

Sengai Podhuvan சொன்னது…

உலகில் பல நாடுகள் கடன் வாங்கி முன்னேறுகின்றன
அரசிடம் மக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுவது உண்டு.
அரசு வாங்கிய கடன்?

வேகநரி சொன்னது…

கிரீஸ் நாட்டு மக்கள் ஆர்கே நகர் சட்டப் பேரவை தொகுதி மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள் என்று சொல்லுங்க, அது சரியானது.
கிரீஸ்காரர்களின் இந்த நடவடிக்கையை உலகத்திற்கே வழிகாட்டுகிறார்கள் என்பது ரொம்ப ரொம்ப ஓவர்.