செவ்வாய், 21 ஜூலை, 2015

மதுவிலக்கு - மக்களை ஏமாற்ற கருணாநிதி போடும் புதிய முகமூடி...!


                இந்திய அரசியல்வாதிகளுக்கு திடீரென்று மக்களின் மீது அக்கறை வருகிறதென்றால் - அவர்கள் திடீரென்று கவர்ச்சி அறிவிப்பு பலூன்களை பறக்கவிடுகிறார்கள் என்றால் சட்டமன்றத்தேர்தலோ அல்லது பாராளுமன்றத்தேர்தலோ வருகிறதென்று அர்த்தம். அப்படித்தான்  நேற்று தமிழகத்தில் ஒரு ''கவர்ச்சி அறிவிப்பு'' வெளியாகியிருக்கிறது. ''தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும்'' என்ற மக்களை ''மயக்கும்'' அறிவிப்பு இன்று காலை பத்திரிகைகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இந்த மயக்கும் அறிவிப்பை வெளியிட்டவர் வேறு யாருமல்ல...! திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தான். தேர்தல் நெருங்குகிறது அல்லவா...? திடீரென்று மக்களை பற்றிய அக்கறை அவருக்கு வந்துவிட்டது. தன்னுடைய   ஆட்சிக்காலங்களில் தமிழக மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர் இப்போது மதுவிலக்கைப் பற்றிப் பேசுகிறார் என்பதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு கருணாநிதி எந்த ஒரு அதிசயத்தையும் கூசாமல் செய்துகாட்டுவார். தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது ஒரு சாட்டையை எடுத்து சுழற்றுவார். இந்தி எதிர்ப்பு என்பார். இலங்கை தமிழர் என்பார். சொத்து சேர்ப்பு - ஊழல் என்பார். தேர்தலுக்கு தேர்தல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வேஷம் போடுவார். முகமூடியை மாற்றிக்கொள்வார்.
              அதேப்போல் வருகிற தேர்தலில் மக்களை கவரவேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார். இப்போது மக்கள் பிரச்சனையாக இருப்பது ''டாஸ்மாக்'' தான். பார்த்தார்... இது பெண்கள் பிரச்சனை மட்டுமல்ல. நீண்ட நாளைய சமூக பிரச்சனை. பெண்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்''   என்ற அறிவிப்பை கொடுத்திருக்கிறார். 
         தமிழக மக்களும்  இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: